Students' Mental and Physical Health| மாணவர் மன நலன் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்த உத்தரவு
Students' Mental and Physical Health
பள்ளி கல்வித்துறை பள்ளிகளுக்கு அனுப்பிய சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது,
மாணவர்களின் ஒட்டுமொத்த முன்னேற்றத்திற்கு உதவும் வகையில் உடல் நலன் மற்றும் மனநலத்தின் முக்கியத்துவம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கான அமர்வுகள் பள்ளிகளிலேயே நடத்த தமிழ்நாடு சட்டமன்ற பேரவையில் 2022-2023ஆம் ஆண்டிற்கான மானிய கோரிக்கையின்போது பள்ளி கல்வி அமைச்சர் அறிவிப்பை வெளியிட்டார்.
அதன்படி இந்த கல்வியாண்டில், முதல் வாரத்தில் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு மனநலம், குழந்தைகள் மீதான வன்முறையை தடுத்தல், தன்னம்பிக்கையை வளர்த்தல், போதை பொருட்களுக்கு அடிமையாதலை தடுத்தல், தன்சுத்தம் பேணுதல் போன்ற பொருண்மைகளில் பள்ளி அளவில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட உள்ளது.
Also Read: மாணவர் பாதுகாப்பு ஆலோசனை குழு நோக்கம்
பள்ளிகளில் விழிப்புணர்வு வாரம்
உடல், மனநலம் பேணும் பள்ளிச் சூழலில் கல்வியை பெறும் குழந்தைகள் வாழ்க்கையில் வெற்றி வாய்ப்பை பெறுகின்றனர். இதற்கென அரசு பள்ளிகளில் கண்ணொளி காப்போம் திட்டம், RBSK திட்டம், WIFS திட்டம் என பல்வேறு திட்டங்களை அரசு செயல்படுத்தி வருகிறது.
கொரோனா பெருந்தொற்றினால் மாணவர்களின் கற்றல் முறைகளில் குறிப்பிடத் தகுந்த மாறுதல் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் மாணவர்களின் உடல், மனநலனை காக்க மருத்துவ குழுக்களை கொண்டு விழிப்புணர்வு ஏற்படுத்தவும், உரிய பரிசோதனைகளை செய்யவும், இளைஞர் நீதிச்சட்டம், போக்சோ சட்டம், சாலை பாதுகாப்பு, இணைய பாதுகாப்பு, குழந்தைகளுக்கு எதிரான வன்முறைகள், போதை பொருட்கள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும், மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் உயர் கல்வி உறுதி திட்டம் போன்ற அரசு நலத்திட்டங்கள் குறித்த விழிப்புணர்வை பள்ளிகளில் ஏற்படுத்தவும் அரசு உறுதி பூண்டுள்ளது.
அனைத்து அரசு, அரசு உதவிபெறும் உயர் நிலை மற்றும் மேல்நிலை பள்ளிகளில் வரும் 11ம் தேதி அன்று விழிப்புணர்வு உறுதி மொழி எடுக்கும் நிகழ்வும், ஆகஸ்டு 12ம் தேதி முதல் 19ம் தேதி வரை கீழ்காணும் துறைகளுடன் இணைந்து விழிப்புணர்வு வாரத்தை செயல்படுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது.
மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை
மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை வாயிலாக மாணவர்களுக்கு கீழ்காணும் திட்டங்கள் சார்ந்து விளக்கப்படும், தேவையான பரிசோதனைகள் மேற்கொள்ளப்படும்.
தேசிய சிறார் நலத்திட்டம்
பள்ளிகளில் பயிலும் அனைத்து மாணவர்களும் நடத்தப்படும் மருத்துவ பரிசோதனைகள், பிறவிக் குறைபாடுகள், பற்றாக்குறைகள், குழந்தை பருவ நோய்கள், தாமதமான வளர்ச்சி மற்றும் குறைபாடுகள் ஆகியவற்றையும் அவற்றால் பாதிக்கப்பட்ட மாணவர்களை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து சிகிச்சை வழங்க எடுக்க உள்ள நடவடிக்கைகள் பற்றி விளக்கி கூறுதல்
தேசிய வளரிளம் பருவத்தினர் நலத்திட்டம்
வளரிளம் பருவத்தினருக்கு ஊட்டச்சத்து மேம்பாடு, உடலளவிலும், மனதளவிலும் ஏற்படும் மாற்றங்கள் குறித்த விழிப்புணர்வு, போதை பொருட்கள் குறித்த விழிப்புணர்வு வழங்குதல்
பிற திட்டங்கள்
10-19 வயது வரை உள்ள வளரிளம் பருவத்தினருக்கு பிரதிவாரம் வியாழக்கிழமை மதிய உணவுக்குபின் இரும்பு சத்து மாத்திரை வழங்கப்படுகிறது. 1 முதல் 18 வயது வரை உள்ள குழந்தைகளுக்குப் பள்ளிகளிலேயே குடற்புழு நீக்க மாத்திரை வழங்கப்படுகிறது. இத்திட்டங்கள் குறித்த விழிப்புணர்வு, திட்டத்தினை சிறப்பாக செயல்படுத்தும் வழிமுறைகள் குறித்த ஆலோசனை வழங்குதல்.
சமூக நலன் மகளிர் மேம்பாட்டுத்துறை / சமூக பாதுகாப்பு துறை
- சரிவிகித உணவின் முக்கியத்துவம் குறித்து எடுத்துக்கூறுதல்
- குழந்தை திருமண தடை சட்டம் பற்றிய விழிப்புணர்வு
- மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் உயர் கல்வி உறுதி திட்டம் குறித்து மாணவிகள் இடையே விழிப்புணர்வு ஏற்படுத்துதல
- சானிடாி நாப்கின் பயன்பாடு மற்றும் அதனை பாதுகாப்பாக எரியூட்டுதல் குறித்த விழிப்புணர்வு
- இளஞ்சிறார் நீதி (குழந்தை பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு) சட்டம் 2015 குறித்த விழிப்புணர்வு
- பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளை பாதுகாக்கும் சட்டம் குறித்த விழிப்புணர்வு
காவல்துறை
- காவல்துறை - போதை பொருள் குறித்த விழிப்புணர்வு மற்றும் போதை பொருட்களுக்கு அடிமையாதலை தடுத்தல்
- சாலை பாதுகாப்பு
- பாதுகாப்பாக இணையத்தை பயன்படுத்துதல், இணைய வழி விளையாட்டுகள் குறித்த விழிப்புணர்வு
- பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் குறித்த விழிப்புணர்வு
மேற்கூறியவை மட்டுமின்றி, பின்வரும் பொருண்மைகள் குறித்த பள்ளி கல்வித்துறை தக்க விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்
மாணவர்களுக்கான அவசர உதவி எண் – 1098
பள்ளி கல்வித்துறையின் மாணவர் உதவி எண் 14417
பேரிடர் மேலாண்மை குறித்த விழிப்புணர்வு
விழிப்புணர் போட்டி நடத்துதல்
11.8.2022 அன்று பள்ளிகளில் நடைபெறும் விழிப்புணர்வு வார தொடக்க நிகழ்வில் வாசிக்க வேண்டிய உறுதிமொழி மற்றும் மாணவர்களுக்கான விழிப்புணர்வு ஒளிப்படம் விரைவில் அனுப்பி வைக்கப்படும்.
போதை பொருள் விழிப்புணர்வு குறித்து மாணவர்களுக்கான கட்டுரை, ஓவியம், வினாடி-வினா மற்றும் பேச்சு போட்டிகள் நடத்தப்பட வேண்டும்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.