உலக புத்தக தின சிறப்பு கட்டுரை… ஏப்ரல் முதல் தேதியின் சிறப்பு- “முட்டாள்கள் தினம்”. காலுக்கு கீழ பாம்பு, சட்டையில பூச்சி ஏறுது என்று சொல்லி சிலரை ஏமாற்றி (!) விட்டதாய் நினைத்து நாமும் ரசிக்கும் நாள் அது. ஆனால் இதே ஏப்ரல் மாதத்தில் தான் 23ம் தேதியன்று உலக புத்தக தினமும் வருகிறது. ஆனால் நாம் யாரும் அதை கண்டு கொள்வதில்லை. ஏப்ரல் 23 அன்று உலக புத்தக தினமாக அறிவிக்க காரணமான பின்னணி யாதெனில், உலகமறிந்த கலை இலக்கியவாதியான வில்லியம் ஷேக்ஸ்பியரின் பிறந்த நாளும், இறந்த நாளும் இதுவே. மேலும் ஆங்கில கவிஞர் வில்லியம் வேர்ட்ஸ்வொர்த், பிரபல நாவலாசிரியர் செர்வாண்டைஸ் போன்றோர் மறைந்ததும் இந்நாளில்தான். இப்படி படைப்பாளர்களோடு, படைப்புலகத்தோடு நெருக்கமாகிவிட்ட ஏப்ரல் 23ம் நாளை உலக புத்தக நாளாக கடைபிடிப்பது என்று 1995ல் ஐக்கிய நாடுகள் சபையின் கல்வி, அறிவியல் மற்றும் பண்பாட்டு அமைப்பு அறிவித்தது. இந்த தினத்தில் புத்தகங்கள் குறித்து மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தவும், வாசிப்பு பழக்கத்தை மக்களிடம் கொண்டு சேர்க்கவும், அனைவருக்கும் வாசிக்கும் உரிமை, படைப்பாளியை உருவாக்கும் சமூகச் சூழல், பதிப்புத் தொழிலில் வளர்ச்சி, நூலகங்கள் நாட்டின் கருவூலம், புத்தகங்களைப் பாதுகாத்தல், பராமரித்தல் மற்றும் ஆவணப்படுத்துதல், அனைத்து நாடுகளின் அவற்றின் மொழிகளில் புத்தகங்களின் பரிமாற்றம், வாசிப்பு மூலம் உலக உறவு போன்ற நோக்கங்களை நிறைவு செய்ய இப்புத்தக தினத்தை கொண்டாடியாக வேண்டும்.புத்தகங்கள் மகத்தானவை, அற்புதமானவை. புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் “காரிருள் அகத்தில் நல்ல கதிரொளி நீயே - இந்த பாரிடை துயில்வோர் கண்ணிற் பாய்ந்திடும் எழுச்சி நீதான்” என்கிறார் புத்தகங்களைப் பார்த்து. புத்தகம் வெறும் எழுத்துக்களைக் கொண்டதல்ல. வெற்றுத் தாள்களின் தொகுப்புமல்ல. ஒவ்வொரு புத்தகமும் ஒரு படைப்பாளனின் எண்ணம், சிந்தனை. இதை மனதில் கொண்டுதான் வால்ட் விட்மன் சொல்கிறார், “புத்தகத்தை கையில் எடுக்கும் போது ஒரு மனிதனின் இதயத்தை கையில் எடுக்கிறீர்கள்” என்று.“புத்தகங்கள் வெறும் உயிரற்ற காகிதங்களின் குவியல் அல்ல. அவை அலமாரியில் இருந்து நம்மை வழிநடத்தும் உயிரோடு இருக்கும் மனிதங்கள்” என்கிறார் அமெரிக்க எழுத்தாளர் கில்பர் ஹையாத்.Read Also: World No Tobacco Day in Tamilவிதைக்குள் விருட்சம் போல் ஒரு சமூகத்தின் எழுச்சிக்கான கருத்துக்களை சில புத்தகங்கள் தன்னுள் கொண்டிருக்கின்றன. அதனால்தான் “ஆட்சி அதிகாரத்தையே உலுக்கிவிடும் பேராற்றல் ஒரு புத்தகத்திற்கு உண்டு” என்கிறார் கார்லைல் என்னும் அறிஞர். “துப்பாக்கிகளை விட பயங்கரமான ஆயுதங்கள் புத்தகங்கள்” என்கிறார் மார்ட்டின் லூதர் கிங்.நுகர்வு கலாச்சாரத்தின் மாயையில் சிக்கித் தவித்துக் கொண்டிருக்கும் நாமெல்லாம் புதிய உற்பத்திப் பொருட்கள் சந்தைக்கு வந்தவுடன் வாங்கிவிடத் துடிக்கின்றோம். அதனினும் சிறப்பு, அதைவிடச் சிறப்பு என நம்மை மாயையால் புதுப்பித்துக் கொள்ள அலைகின்றோம்.ஆனால் மனிதனை புதுப்பிக்கும் சக்தி நல்ல புத்தகங்களுக்கு மட்டும்தான் உண்டு என்பதை மறந்து விடுகின்றோம். மிகச்சிறந்த இயற்பியல் விஞ்ஞானி ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் “மனிதனின் கண்டுபிடிப்புகளிலேயே மிகச்சிறந்தது புத்தகம்தான்” என்கிறார்.“எனது முன்னேற்றங்கள் அனைத்திற்கும் ஒரே ஆசான்... புத்தகங்கள்தான்” என்கிறார் வின்ஸ்டன் சர்ச்சில்.“மனிதனின் கண்டுபிடிப்புகளிலேயே அற்புதமானதும், அதிக பயனுள்ளதும் புத்தகம் ஒன்றுதான்” என்கிறார் சாமுவேல் ஜான்சன் எனும் அறிஞர். இன்று எந்த விசயமாக இருந்தாலும் அதன் அழகியல் கூறுகளில் அதிக கவனம் செலுத்துகிறோம். தெளிவு, துல்லியம், பொருத்தம் என்று சொல்லிக் கொண்டு நுணுக்கமாக நுழைந்து நுழைந்து தேடுகிறோம், எது உண்மையான அழகு என்பதறியாமல்?. ஒரு வீட்டை அழகுபடுத்த என்னென்ன முயற்சிகள், எத்தனை ஆலோசனைகள், எத்தனை செலவுகள், எவ்வளவு கடன்? நமக்காகவே சொல்கிறார் ஹென்றி வார்ட் பீச்சர் எனும் அறிஞர். “வீட்டை அலங்கரிக்க புத்தகங்களை விட அழகான பொருள் இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை” என்று.பூஜை அறை, படுக்கை அறை, வரவேற்பறை, சமயலறை என பல அறைகளைக் கட்டி காலி அறைகளில் கண்டதைப் போட்டு பூட்டி வைப்பவர்கள், வாசிப்பறை ஒன்று அமைப்பதற்கு யோசிப்பதில்லை, இவர்களைத்தான் “வீட்டுக்கொரு புத்தகசாலை, நாட்டுக்கொரு நல்ல நிலை” என்பதறியா வீணர்கள் என்கிறார் பேரறிஞர் அண்ணா. இந்திய விடுதலைப்போரின் விடிவெள்ளி, இளைஞர்களின் எழுச்சி நாயகன் மாவீரன் பகத்சிங் தனது 23ம் வயதிலேயே தூக்கிலிடப்பட்டார். அவரது மரணத்தின் கடைசி நிமிடம் வரையிலும் புத்தகங்களை வாசித்துக் கொண்டு இருந்ததாக வரலாறு சொல்கிறது.அந்த இளம் வயதிலேயே நான்கு புத்தகங்களையும் எழுதி இருக்கிறார்.சட்ட மேதை அம்பேத்கர் ஒருமுறை வெளிநாடு சென்றிருந்தபோது, எங்கு தங்க விரும்புகிறீர்கள்? என்று கேட்ட போது, எந்த இடம் நூலகத்திற்கு அருகில் உள்ளது? எனக் கேட்டாராம். அதனால்தான் அவர் மேதையானார். இந்திய நாட்டின் முதல் பிரதமர், நவ இந்தியாவின் சிற்பி ஜவகர்லால் நேருவிடம் உங்களை ஒரு தனித்தீவிற்கு நாடு கடத்திவிட்டால் என்ன செய்வீர்கள் என்று கேட்டதற்கு “புத்தகங்களோடு மகிழ்ச்சியாக வாழ்ந்து கொண்டிருப்பேன்” என்றாராம்.உலகத்தவரால் மாமேதை, புரட்சியாளர் என்றழைக்கப்படும் லெனினுக்கு பிறந்தநாள். என்ன பரிசு வேண்டும்? என மக்கள் கேட்க “புத்தகம்” என்று பதிலளித்தாராம். தெறித்து ஓடினர் மக்கள், ஆனால் திரும்பி வந்தனர் பல மொழிகளில், பலவிதமான புத்தகங்களோடு.இன்றும் மாஸ்கோவில் உள்ள லெனின் நூலகம்தான் உலகின் மிகப்பெரிய நூலகம்.“குழந்தைகளுக்கு நீங்கள் வாங்கித்தரும் மிகச்சிறந்த பரிசு, புத்தகங்களே” என்கிறார் வின்ஸ்டன் சர்ச்சில். ஆகவே இத்தகைய சிறப்புவாய்ந்த புத்தகங்களோடு நாம் கொண்டுள்ள நட்பும், நேசமும், வாசிப்பின் நிலையும் எத்தகைய நிலையில் இருக்கிறது என்பதை சுயபரிசீலனை செய்து கொள்ள வேண்டிய காலமிது நண்பர்களே! நமது அன்றாட வாழ்வில் பல்வேறு அலுவலகங்களுக்கு, மருத்துவமனைக்கு, வழிபாட்டுத்தலங்களுக்கு, பொழுதுபோக்கு இடங்களுக்கு, விளையாட்டு திடலுக்கு என பல்வேறு இடங்களுக்கு செல்கிறோம். ஆனால் நம்மில் பலருக்கு நூலகம் இருப்பதே தெரியாது.சொல்லப்போனால் நூலகம் இருக்கும் திசை கூடத் தெரியாது. பொது அறிவு நூல்கள், விஞ்ஞான நூல்கள், சிறுகதைகள், நாவல்கள், கவிதைகள், பழந்தமிழ் இலக்கியங்கள், கட்டுரைகள், பழமொழி நூல்கள் என பல விதமான புத்தகங்கள், மருத்துவம், சமையல், உடல்நலம் என ஆயிரக்கணக்கான புத்தகங்களை தன்னகத்தே கொண்டிருந்தும் அனாதை சிறுமி போல் தெருவோரம், கவனிப்பாரற்று நூலகங்கள் நிற்பது கொடுமையல்லவா? நூலகங்களை கண்டும் காணாமல் இருப்பது நமது பாவமல்லவா?இந்த நேரத்தில் தமிழக நூலக வரலாற்றின் பிதாமகன் இராமாமிர்தம் இரங்கநாதன் அவர்களை நினைத்துப் பார்ப்பது அவசியம். இவர்தான் “சென்னை மாகாணத்தின் நூலகத் தந்தை” என்று அழைக்கப்பட்டு மரியாதை செய்யப்படுபவர்.1928ல் சென்னை நூலக சங்கம் இரங்கநாதனால் ஏற்படுத்தப்பட்டது. 1931ல், அக்டோபர் 21ம் நாள் மன்னார்குடியில் நடமாடும் நூலக வண்டிப் பயணத்தை அவர் ஆரம்பித்து, 72 கிராமங்களில், 275 பயணங்கள் இந்த வண்டி மூலம் நடத்தப்பட்டது. இதில் 3,782 புத்தகங்கள், 20,000 தடவைகளுக்கு மேல் மக்களுக்கு கொடுத்து வாசிக்கப்பட்டு திரும்பப் பெறப்பட்டன.அவர் வாசிப்பை மக்களிடம் கொண்டு செல்ல எவ்வளவு பாடுபட்டார் என்பதை இச்சிறு சம்பவம் நமக்கு உணர்த்துகிறது. அவர் விட்டுச் சென்ற பயணத்தை புத்தக விற்பனை மூலமும், புத்தக வாசிப்பை மக்களிடம் கொண்டு செல்வதன் மூலம் நாம் தொடர்வோம்.பெரும்பாலான ஆசிரியர்கள் கூட நூலகத்திற்கு செல்வதில்லை, வாசிப்பதில்லை என்ற நிலை இருப்பது வெட்கப்பட வேண்டிய ஒன்று. மற்ற துறையினரை விட கற்பித்தல் பணிபுரியக்கூடியவர்கள் தொடர்ந்து கற்பவர்களாகவும் இருக்க வேண்டும்.எரிகின்ற விளக்குதான் இன்னொரு விளக்கை ஏற்ற முடியும் என்பதை மனதில் கொள்ள வேண்டும்.புத்தக தினத்தை திருவிழாவாக மாற்றுவோம். வாசிப்பை நேசிப்போம். வாசிப்பை சுமையாக கருதாமல் சுவாசத்தைப்போல் இயல்பானதாய் ஆக்குவோம். அறிவை ஆயுதமாக மாற்றுவோம். தெருவெங்கும் நூலகம்! வீடுதோறும் புத்தகம்! இதுவே நமது இலட்சியம்! -க.லெனின்பாரதிதலைவர்நூலக வாசகர் வட்டம்