World No Tobacco Day in Tamil | உலக புகையிலை ஒழிப்பு தினம்
உலக புகையிலை ஒழிப்பு தினம் எப்போது?
இன்று (மே 31) உலக புகையிலை ஒழிப்பு தினமாக உலக முழுவதும் கடைபிடிக்கப்படுகிறது. உலக சுகாதார அமைப்பு (WHO) ஒவ்வொரு ஆண்டு மே மாதம் 31ம் தேதி புகையிலை ஒழிப்பு தினமாக கடைபிடித்து, மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறது. புகைப்பழக்கத்தால் வருடத்திற்கு 7 மில்லியன் பேர் பலியாகிறார்கள். கிட்டத்தட்ட 24 மில்லியன் பேர் 13 வயது முதல் 15 வயதுக்கு உட்பட்டோர் புகையிலை பயன்படுத்துகிறார்கள். அதில் 17 மில்லியன் பேர் ஆண்களும், 7 மில்லியன் பேர் பெண்கள் ஆவார்கள். புகை பிடிப்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், பள்ளி,கல்லூரிகளில் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்று கோரிக்கை பரவலாக எழுந்துள்ளது.
புகை பிடிப்பதால் ஏற்படும் தீமைகள் என்ன?
புகை பிடிக்கும் பழக்கத்தால் கேன்சர் உள்ளிட்ட உடல் பாதிப்புகள் ஏற்படுகிறது. உலகின் இரண்டாவது உயிர்கொல்லி என்று புகையிலையை மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். எனவே, புகையிலை பழக்கத்தை தடுக்க வேண்டியது கட்டாயமாகிவிட்டது. இதற்காக, ஆண்டுதோறும் மே 31ம் தேதி உலக புகையிலை ஒழிப்பு தினம் கடைபிடிக்கப்படுகிறது. இதையொட்டி விழிப்புணர்வு நிகழ்வுகள் நடத்தப்படுவது வழக்கம்.
Read Also: குழந்தை தொழிலாளர் ஒழிப்பு தினம் கட்டுரை
புகையிலை பிடியில் பள்ளி மாணவர்கள்
இந்நிலையில், விழிப்புணர்வு ஏற்படுத்தினாலும், புகை பிடிப்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக இந்தியாவில் இளைஞர்கள் மற்றும் பள்ளி மாணவ, மாணவிகளும் புகை பிடிக்கும் பழக்கத்துக்கு அடிமையாகி வருவதுதான் வேதனை. அமெரிக்காவின் புற்றுநோய் ஒழிப்பு கழகம் நடத்திய ஆய்வறிக்கையை கடந்த 2018ம் ஆண்டு வெளியிட்டது. அதில் இந்தியாவில் புகை பிடிக்க தினமும் 2 கோடி செலவு செய்யப்படுவதாக தெரிவித்திருந்தது. அதன்படி, ஆண்டுக்கு 730 கோடிக்கு மேல் இந்தியர்கள் புகை பிடிக்க செலவழித்து வருவதாக தெரியவந்துள்ளது.
மேலும், அந்த கழகம் வெளியிட்ட அறிக்கையில் இந்தியாவில் 17 கோடிக்கும் அதிகமானோர் புகை பிடிப்பதாகவும், இவர்களில் 6.25 கோடி பேர் பள்ளி மாணவ, மாணவிகள் என்றும் அதிர்ச்சி தகவலை வெளிப்படுத்தியுள்ளது. இதுபோன்ற புகையிலை பழக்கத்தால் ஏற்படும் பாதிப்புகளுக்கு ஆளாகி இந்தியாவில் வாரத்துக்கு 17 பேர் வரை உயிரிழப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. புகையிலையில் உள்ள நிகோட்டின் என்ற வேதிப்பொருள் புகையிலை பழக்கத்துக்கு அடிமையாக்கிவிடுகிறது. எனவே, புகையிலை பழக்கத்துக்கு அடிமையானவர்கள் அதிலிருந்து விலகுவதற்கான விழிப்புணர்வுடன், சூழ்நிலையை உருவாக்க வேண்டியது அவசியம்.
புற்றுநோய் பாதிப்பு அதிகமாகி கொண்டே வருகிறது. அதிலும் குறிப்பாக நுரையீரல் புற்றுநோய் பாதிப்பு அதிகமாக இருக்கிறது. தமிழகம் அதில் முதல் இடத்தில் உள்ளது. ஆண்களை போலவே பெண்களுக்கும் இந்த பாதிப்பு அதிகமாக காணப்படுகிறது. நுரையீரல் புற்றுநோயால் பாதிக்கப்படும் 100 பேரில் 90 பேர் ஓராண்டிலேயே இறந்து விடுகிறார்கள்.புற்றுநோயை தடுக்க அரசு ஆதரவு தரவேண்டும். புகையிலையை ஒழிக்க போதுமான சட்டங்கள் உள்ளன. அந்த சட்டங்களை அரசு கடுமையாக்க வேண்டும்.
புகையிலைப் பயன்பாடால் உண்டாகும் நோய்கள்
புகையிலையினால் புற்றுநோய் மட்டும் அல்ல. ஏராளமான நோய்கள் வரும்.புகையிலைக்கு தடை விதித்து இருக்கிறார்கள். ஆனால் பல இடங்களில் புகையிலை பொருட்கள் கிடைக்கிறது. ஆல்கஹாலுக்கு எப்படி தனியாக கடை அமைத்து விற்பனை செய்கிறார்களோ? அதேபோல், புகையிலைக்கும் உரிமம் வழங்கி விற்பனை செய்ய அரசு சட்டம் கொண்டு வரவேண்டும். புகைப்பிடிப்பதால் மனித உடலின் சுவாசக் கட்டமைப்பு பலவீனமடையும்; அத்தகைய நிலையில் உள்ளவர்களை கொரோனா வைரஸ் மிகவும் எளிதாக தாக்கும் ஆபத்து உள்ளது. புகைப்பிடிப்பதற்காக கைகளை வாய்க்கு அருகில் கொண்டு சென்று இழுக்கும் போது, கைகளில் கொரோனா வைரஸ் கிருமிகள் இருந்தால் அவை வாய் வழியாக நுரையீரலுக்கு சென்று முதலில் நோயையும், பின்னர் உயிரிழப்பையும் ஏற்படுத்தும். உலக அளவில் தவிர்க்கக் கூடிய மரணங்கள் நிகழ்வதற்கு புகையிலை ஒரு முன்னணிக் காரணியாக விளங்குகிறது.·
ஒரு சிகரட் புகைக்கப்படும் போது தோராயமாக ஒருவர் தன் ஆயுட்காலத்தின் 11 நிமிடங்களை இழக்கின்றார். ஒவ்வொரு 6 நொடிப்பொழுதிலும் உலகில் ஒரு உயிரழப்பு புகையிலையால் ஏற்படுகிறது. புகைப்பழக்கம் உடையவர்கள் இயல்பான இறப்பு விகிதத்தைக் காட்டிலும் 60-80% அதிகம். ஒருவருடத்திற்கு சுமார் 5 மில்லியன் மக்கள் புகையிலை சார்ந்த நோயால் மடிகின்றனர். நுரையீரல் புற்றுநோய், குரல்வளை, கழுத்து புற்றுநோய், இரத்த, இரத்தக்குழாய் புற்றுநோய், சிறுநீரக புற்றுநோய், வாய், உணவுக்குழாய் புற்றுநோய், கணையப்புற்றுநோய், வயிற்றுப் புற்றுநோய், நுரையீரல் வளர்ச்சியைக் குறைக்கிறது.
சுவாசப்பாதை குறுக ஆரம்பிக்கிறது. புகையிலை புகைப்பதால் நுரையீரல் சீர்கெட்டு பல்வேறு சுவாசநோய்கள் ஏற்பட முக்கியக் காரணமாக அமைகிறது. இதய நாள நோய் – ரத்த அழுத்தம் அதிகரிப்பு, இதயத் துடிப்பு அதிகரித்தல், இரத்தக் குழாய்களின் தன்மை கடினமடைகிறது. வாய், முகர்தல், சுவைக் கோளாறு – வாயில் ஈறுகள் நிறமாறத்திற்குக் காரணமாகிறது. சுவை, நுகரும் திறனைக் குறைக்கிறது. புகையினால் வாய்ப்புண்களை ஏற்படுத்துகிறது. பக்கவாதம், மனநோய்கள் – புகைத்தல் மூளையை பாதித்து பக்கவாதம் வரக் காரணமாகிறது. சிறுநீரக நோய், நோய்த்தொற்று, ஆண்மைக்குறைபாடு, பெண் கருவுறாமை, கர்ப்ப பிரச்சனைகள், மருந்து இடைவினைகள் 2017 ல் உலக சுகாதார நிறுவனம் புகையிலையும் அதன் சுற்றுச்சூழல் மாசுபாடு குறித்து விழிப்புணர்வு அறிக்கை வெளியிட்டுள்ளது.
புகையிலை சார்ந்த கழிவுகள் சுமார் 7000ற்கும் மேற்பட்ட நச்சு வேதிப்பொருட்களையும், மனித புற்று நோய்க்காரணிகளையும் சுற்றுச்சூழலில் பரப்பி, அதனை மாசுபடுத்துகின்றன. புகையிலையிலிருந்து வெளியேறும் புகை நச்சு சுமார் 1000 டன்கள் மனித புற்று நோய்க்காரணிகளை வளிமண்டலத்தில் பரப்புகின்றன. தினமும் விற்பனையாகும் 15 பில்லியன் சிகரட்டுகளில் சுமார் 10 பில்லியன் சிகரட் கழிவுகள் சுற்றுச்சூழலில் பரப்பப்படுகின்றன. சுமார் 30%-40% கடற்கரை மற்றும் ஊரகக் கழிவுகள் சிகரட் பஞ்சுகளைக் கொண்டிருக்கின்றன.
புகையிலை பழக்கத்தில் இருந்து மீள்வது எப்படி?

எந்தவொரு போதைப்பழக்கத்தையும் கைவிட வேண்டும் என்றால், அந்த முடிவை அந்த நபரிடமிருந்துதான் தொடங்க வேண்டும். எனவே, அந்தப் பழக்கத்தை கைவிட வேண்டும் என்று முதலில் அவர்தான் முடிவெடுக்க வேண்டும். அடிக்கடி முகம், வாய், உதடுகள் மற்றும் பற்களைக் கண்ணாடியின் முன் நின்று கொண்டு பார்க்க வேண்டும். அப்போது எவ்வாறெல்லாம் அவை முகத்தோற்றத்தை எப்படிக் குலைக்கிறது என்பதை உணர வேண்டும். போதைப் பொருள்களைப் பயன்படுத்தி கண்ட கண்ட இடங்களில் எச்சில் துப்புவது போன்ற ஒழுங்கீனமான செயல்களை நினைத்துப் பார்க்க வேண்டும். அதை துப்பும் போதும், கடைகளில் வாங்கும்போதும் மற்றவர்கள் நம்மை எப்படிப் பார்க்கிறார்கள் என்பதை உணரவேண்டும். இவர் பாக்கு போடுபவர், புகையிலை போடுபவர் எனக் குறைத்து மதிப்பிட்டு ஒருவிதமான கண்ணோட்டத்துடனேயே பார்க்க வைக்கிறது. அது நம் சுய மதிப்பீட்டை எப்படியெல்லாம் பாதிக்கிறது என்பதைச் சிந்தித்துப் பாருங்கள். நம்மைவிட வயது குறைவானவர்கள் மற்றும் குழந்தைகளுக்கு நாம் ஒரு நல்ல முன்னுதாரணமாக இல்லாமல் இருக்கிறோம் என்பதையும் எண்ணிப்பார்க்க வேண்டும்.
அதற்கு எவ்வளவு பணம் செலவாகிறது? பொருளாதாரரீதியாக எப்படிப் பாதிப்பை ஏற்படுத்துகிறது என்பதையும் எண்ணிப் பார்க்க வேண்டும். இந்தப் பழக்கத்தினால் ஏற்பட்ட உடல் பாதிப்புகளையும் நினைத்துப் பார்க்க வேண்டும். ஆரோக்கியமான உணவுகளைத் தவிர்க்கிறேன். உடல் நிலையை கெடுத்துக்கொள்கிறேன் என்று தெரியவந்தால் அதற்காக மருத்துவ ஆலோசனை எடுத்துக்கொள்ள வேண்டும். அதேநேரத்தில் தொடர்ச்சியாக பின்பற்றி வந்த பழக்கத்தை திடீரென கைவிடும்போது, அந்த மாற்றத்தை உடலும் மனதும் ஏற்றுக்கொள்ள சில நாள்கள் தேவைப்படும்.
குறிப்பாக, தூக்கமின்மை, எரிச்சல், சோர்வாக உணர்வது போன்றவை வெளிப்படும். இவையெல்லாம் மனரீதியான பாதிப்புகள் மட்டுமே, மற்றபடி உடலுக்கோ, உயிருக்கு இதனால் எந்தப் பாதிப்பும் இருக்காது. இப்படிப்பட்ட நேரங்களில் இளநீர், மோர் போன்ற இயற்கையான நீராகாரங்களை அதிகம் எடுத்துக்கொள்ள வேண்டும். இது உடலில் ஏற்கெனவே சேர்ந்துள்ள நச்சுகளை வெளியேற்றும். பெரும்பாலானோருக்கு உணவு உண்டதும் போதை மருந்துகளைச் சாப்பிட வேண்டும் என்ற எண்ணம் தோன்றும். அப்போது கிராம்பு, ஏலக்காய், சோம்பு ஆகியவற்றைச் சாப்பிடச் சொல்வார்கள். இவை அந்தப் பழக்கத்துக்கு மாற்றாக அமைவதுடன், உடலுக்கும் சத்துக் கிடைக்க உதவும். மற்ற நேரங்களில் இந்த எண்ணம் ஏற்படும்போது, சூயிங்கம், வேர்க்கடலைசாப்பிடும் பழக்கத்தை ஏற்படுத்தலாம். முக்கியமாக ஒருவருக்கு நீண்ட நாள்களாக இந்தப் பழக்கம் இருந்தால் அந்தப் பழக்கத்தை கைவிடுவதற்கு முன்பு, பல் மருத்துவரைச் சந்தித்து பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். புற்றுநோய் நிலைக்குச் சென்றுள்ளதா? என்பதை அறிந்துகொள்ளவும் அவர் தற்போது எந்த நிலையில் உள்ளார் என்பதையும் அறிந்து கொள்ளவும் இது உதவும்.
பாதிப்பைக் கண்டறியும்பட்சத்தில் அதற்காகச் சிகிச்சை எடுத்துக்கொள்ள வேண்டும். மேலும், போதைப்பழக்கத்திலிருந்து விடுபட மனநல மருத்துவர்களின் ஆலோசனை பெற வேண்டியது அவசியம். போதைப்பழக்கத்திலிருந்து விடுபட சென்னை கிண்டியில் உள்ள புற்றுநோய் ஆராய்ச்சி நிறுவனத்திலும் பல்வேறு போதை மறுவாழ்வு மையங்களிலும் மனோதத்துவ ஆலோசனை மற்றும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன. மேலும், புற்றுநோய்க்கு முந்தைய நிலையில் உள்ளவர்களுக்கு Replacement therapy என்னும் சிகிச்சையும் அளிக்கப்படுகிறது.
கட்டுரை,
பேராசிரியர் க லெனின்பாரதி, நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர்,
எஸ்என்எம்வி கல்லூரி, கோவை.