TN Private Candidates Mark Sheet Notification | தனித்தேர்வர்கள் மதிப்பெண் சான்றிதழ்
TN Private Candidates Mark Sheet Notification
அரசு தேர்வுகள் உதவி இயக்குனர் அலுவலகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது, கோயம்புத்தூர் மாவட்ட எல்லைக்குட்பட்ட தனித்தேர்வு மையங்களில் மார்ச் 2019 முதல் செப்டம்பர் 2020 வரையிலான பருவங்களில் இடைநிலை (SSLC) / மேல்நிலை (HSE) / எட்டாம் வகுப்பு (ESLC) பொதுத்தேர்வு எழுதிய தனித்தேர்வர்களின் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டு மதிப்பெண் சான்றிதழ்கள் அத்தேர்வு மையங்கள் மூலம் தேர்வர்களுக்கு நேரடியாக விநியோகம் செய்யப்பட்டது.
தேர்வு மையத்தில் நேரடியாக மதிப்பெண் சான்றிதழ்களை பெற்றுக் கொள்ளாத தனித்தேர்வர்களின் இடைநிலை / மேல்நிலை / எட்டாம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ்கள் இவ்வலுவலகத்தில் மீள பெறப்பட்டுள்ளன. இதன் தொடர்ச்சியாக தனித்தேர்வர்களால் பெற்றுக் கொள்ளாமலிருக்கும் மார்ச் 2019 முதல் செப்டம்பர் 2020 பருவங்களுக்குரிய இடைநிலை / மேல்நிலை / எட்டாம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ்கள் மற்றும் மேற்காண் தேர்வுக்கு விண்ணப்பத்துடன் இணைத்தனுப்பிய தேர்வரால் பெறப்படாமலிருக்கும் சான்றிதழ்கள் இவ்வலுவலகத்தில் உள்ளன.
Read Also: அரையாண்டு தேர்வு கால அட்டவணை 2022
தேர்வுத்துறை விதிமுறைகளின்படி தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டு 2 வருடங்கள் கழித்து தனித்தேர்வர்களால் பெறப்படாத மதிப்பெண் சான்றிதழ்கள் அனைத்தும் அழிக்கப்படல் வேண்டும்.
எனவே மேலே குறிப்பிட்ட பருவங்களுக்கான மதிப்பெண் சான்றிதழ்களை பெறாத தனித்தேர்வர்கள் இந்த செய்தி அறிவிப்பு வெளியிடப்படும் நாளில் இருந்து 90 நாட்களுக்குள் இவ்வலுவலகத்தை அலுவலகப் பணி நாட்களில் அலுவலக வேலை நேரத்தில் நேரில் அணுகியோ, அல்லது ரூ45/- மதிப்புள்ள அஞ்சல்வில்லை ஒட்டிய சுய முகவரி எழுதப்பட்ட உறையுடன் தேர்வரின் கையொப்பமிடப்பட்ட கோரிக்கைக் கடிதம் மற்றும் தேர்வுக் கூட அனுமதி சீட்டின் அச்சுப் பகர்ப்பு நகலினை இணைத்து இவ்வலுவலகத்திற்கு அனுப்பியோ உரிய மதிப்பெண் சான்றிதழை பெற்றுக் கொள்ள வேண்டும். தவறினால் மேற்படி தேர்வுப் பருவங்களுக்கான மதிப்பெண் சான்றிதழ்களை விதிமுறைகளின்படி அழிப்பதற்கு இவ்வலுவலகத்தால் உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனத் தெரிவிக்கப்படுகிறது.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.