TN Government Girl Child Scheme |பெண் குழந்தை திட்டம்
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்தநாளான பிப்ரவரி 24ம் தேதி ஆண்டுதோறும் ' மாநில பெண் குழந்தைகள் நாளாக' அனுசரிக்கப்படும் என்று முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார். ஆதரவற்ற பெண் குழந்தைகள் பாதுகாப்புக்கு 5 புதிய திட்டங்களையும் அவர் அறிவித்தார்.
பிப்ரவரி 19, 2020ம் ஆண்டு, சட்ட பேரவையில் கேள்வி நேரம் முடிந்ததும் 110 விதியின் கீழ் அறிவிப்புகள் வெளியிட்டார்
Also Read This | தனியார் பள்ளி கல்வி கட்டணம் – மாணவர்களை வகுப்பை விட்டு வெளியே அனுப்ப அதிகாரம் உண்டா?
TN Government Girl Child Scheme
குழந்தைகள், குறிப்பாக பெண் குழந்தைகளுக்கு ஜெயலலிதா ஆற்றிய உயர்ந்த சேவையை நினைவுகூறும் வகையில் அவரது பிறந்த நாளான பிப்ரவரி 24ம் தேதியை மாநில பெண் குழந்தைகள் நாளாக அனுசரிக்கப்படும்.
முதல் திட்டம்:
பெற்றோர், பாதுகாவலர்கள் இல்லாமல் அரசு இல்லங்களில் வாழும் குழந்தைகளுக்கு 21 வயது நிறைவில் தலா ரூ.2 லட்சம் அவர்களது பெயரில் வங்கியில் செலுத்தப்படும். அரசு இல்லங்களை விட்டு வெளியேறும் குழந்தைகள், சமுதாயத்தில் தங்கள் வாழ்க்கையை நிறைவாக அமைத்து கொள்ள இந்த தொகை உதவியாக இருக்கும்.
இரண்டாவது திட்டம்:
18 வயதுக்கு பிறகு அரசு குழந்தைகள் இல்லத்தில் இருந்து வெளியேறும் பெண் குழந்தைகளின் பாதுகாப்பு, பொருளாதார நிலைக்கு பாதிப்பு ஏற்படுமானால் தாய், தந்தை நிலையில் இருந்து தமிழக அரசு உதவும். இதற்காக, ஒரு சிறப்பு உதவித் தொகுப்பினை அரசு வழங்கும். இதில் மேற்படிப்பு, திறன் மேம்பாட்டு பயிற்சி, வேலைவாய்ப்பு, சுயதொழில் போன்றவை அடங்கும். 50 வயது நிறைவடையும் வரை இந்த உதவி வழங்கப்படும்.
மூன்றாவது திட்டம்:
ஆதரவற்ற குழந்தைகளை பராமரிக்கும் வளர்ப்பு பெற்றோருக்கு மாதந்தோறும் வழங்கப்படும் ரூ.2 ஆயிரம், இனி ரூ.4 ஆயிரமாக உயர்த்தப்படும். இது 5 ஆண்டுகளுக்கு வழங்கப்படும்.
நான்காவது திட்டம் :
தமிழகத்தில் பெண் சிசுக்கொலை குறைந்து வரும் நிலையில், குழந்தைகள் பாலின விகிதம் சராசரியை விட குறைவாக உள்ளது. எனவே குழந்தைகளின் பாலின விகிதத்தை அதிகரிக்க சிறப்பாக செயல்படும் முதல் மூன்று மாவட்டங்களுக்கு தங்கம், வெள்ளி, வெண்கல பதக்கம் மற்றும் சான்றிதழ் வழங்கப்படும்.
ஐந்தாவது திட்டம்:
சமூக நலம், சமூக பாதுகாப்பு துறைகள், சத்துணவு திட்டம், அங்கன்வாடி மையங்கள் மற்றும் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலகங்களில் ஏற்படும் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் எல்லைக்கு உட்படாத சி மற்றும் டி பணியிடங்களில் அனைத்து குழந்தைகள் பராமரிப்பு இல்லங்களில் உள்ள ஆதரவற்ற, கைவிடப்பட்ட குழந்தைகள் முன்னுரிமை அடிப்படையில் பணியமர்த்தப்படுவர்.