சதுரங்க ஒலிம்பியாட் – சதுரங்க போட்டி பள்ளிகளில் நடத்த கல்வித்துறை உத்தரவு
சதுரங்க ஒலிம்பியாட்
பள்ளி கல்வித்துறை வெளியிட்ட அறிக்கை, சர்வதேச அளவிலான 44வது சதுரங்க போட்டி வரும் ஜூலை 27ம் தேதி ஆகஸ்ட் 10ம் தேதி வரை மாமல்லபுரத்தில் நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. அரசாணையின் படி, அனைத்து அரசு பள்ளிகளிலும் பயிலும் மாணவர்களுக்கு பள்ளி, வட்டார, மாவட்ட மற்றும் மாநில அளவில் சதுரங்க போட்டி நடத்திடவும், மாவட்ட அளவில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கு முகாமை நடத்திடவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சதுரங்க ஒலிம்பியாட் வழிகாட்டு நெறிமுறைகள்
சதுரங்க போட்டியில் உள்ள விதிமுறைகள் மற்றும் நுட்பங்கள் மாணவர்கள் அறிந்துகொள்ள பள்ளியில் பணியாற்றும் உடற்கல்வி ஆசிரியர்கள், இயக்குனர்கள் மற்றும் பகுதிநேர உடற்கல்வி ஆசிரியர்களுக்கு ஜூலை 2ம் தேதி ஒரு நாள் புத்தாக்க பயிற்சி அந்தந்த மாவட்டங்களில் சதுரங்க சங்கங்களை கொண்டோ, சிறந்த சதுரங்களை விளையாட்டு வீரர்களை கொண்டோ அளிக்கப்பட வேண்டும்.
சதுரங்க போட்டிகளை பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், சதுரங்க போட்டிகளில் சிறந்து விளங்கும் விளையாட்டு வீரர்களை இனம் கண்டு அவர்களின் வாயிலாக ஜூலை 4ம் தேதி முதல் ஜூலை 8ம் தேதி வரை காலை வணக்க கூட்டத்தின்போது, விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.
சதுரங்க ஒலிம்பியாட் போட்டி நடக்கும் விவரம்

மேற்காணும் பயிற்சியினை பெற்ற ஆசிரியர்களை கொண்டு 1 – 5ஆம் வகுப்பு வரை, 6-8,9-10,11-12ஆம் வகுப்பு என 4 பிரிவுகளாக போட்டிகள் கீழ்கண்ட அட்டவணையில் உள்ளவாறு போட்டிகள் நடத்தப்பட வேண்டும்.
ஒவ்வொரு குழுவில் இருந்து பள்ளி அளவில் முதல் இரண்டு இடங்களை பெறக்கூடிய மாணவ, மாணவியர் (6 முதல் 8, 9 –-10, 11 -12 வகுப்புகளை சார்ந்த குழுக்கள் மட்டும்) வட்டார அளவிலான போட்டிகளில் பங்கேற்க தகுதிபெறுவர்.
வட்டார அளவில் நடைபெறும் ேபாட்டிகளில் முதல் மூன்று இடங்களை பெறக்கூடிய 6 முதல் 12ஆம் வகுப்புகள் வரை மாணவ, மாணவியர் மாவட்ட அளவில் பங்கேற்க தகுதிபெறுவர். வட்டார அளவில் வெற்றிபெறும் மாணவர்களுக்கு பதக்கங்கள் மற்றும் சான்றிதழ் வழங்கப்பட வேண்டும்.
Read Also This: முதலமைச்சர் மாநில விளையாட்டு விருது என்றால் என்ன?
மாவட்ட அளவில் முதல் இரண்டு இடங்களை பெறக்கூடிய 6 முதல் 8ம் வகுப்பு வரை உள்ள மாணவ, மாணவியர்கள் மாநில அளவில் நடைபெறும் பயிற்சி முகாம் மற்றும் போட்டிகளில் பங்கேற்பர். மேலும், அம்மாணவர்கள் சர்வதேச சதுரங்க ஒலிம்பியாட் வீரர்களுடன் கலந்துரையாடும் வாய்ப்பையும் பெறுவா். மாணவர்களை தகுந்த பாதுகாப்புடன் அழைத்து வர 12 மண்டலங்களாக பிரித்து 12 பொறுப்பு ஆசிரியர்களை நியமிக்க வேண்டும். மாநில அளவிலான போட்டிகளில் வெற்றிபெறும் மாணவர்களுக்கு பதக்கங்கள் மற்றும் சான்றிதழ்கள் வழங்க வேண்டும்.
மாவட்ட அளவில் முதல் இடங்களை பெறக்கூடிய 9 -10, 11-12,ஆம் வகுப்பு மாணவ, மாணவியர் (4+4=8*38=304) சதுரங்க ஒலிம்பியாட் போட்டியினை கீழ்கண்ட அட்டவணையில் உள்ளவாறு பார்வையிடும் வாய்ப்பினை பெறுவர். ஒவ்வொரு மாவட்டத்தில் மாணவர்களை தகுந்த பாதுகாப்புடன் அழைத்து வருவதற்கு ஒவ்வொரு பொறுப்பாசிரியரை நியமிக்க வேண்டும். சதுரங்க போட்டியில் வெற்றிபெறும் மாணவர்களுக்கு, பதக்கங்கள் சான்றிதழ்கள் வழங்கப்படும்.

தேவைப்படும் நிதி ஒரு சில தினங்களில் சம்மந்தப்பட்ட மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு அனுப்பிவைக்கப்படும். இதுகுறித்து மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர்களுக்கு இணை இயக்குனர் (நாட்டு நலப்பணி) அவர்கள் தலைமையில் இணையவழி கலந்தாய்வு கூட்டம் வரும் 28ம் தேதி காலை 10 மணிக்கு நடைபெறும்.
இவ்வாறு, அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.