Salem school teacher Pocso case | அரசு பள்ளி ஆசிரியர் போக்சோவில் கைது
Salem school teacher Pocso case
சேலம் சூரமங்கலம் அருகே ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி ஒன்று செயல்டுகிறது. அங்கு சுரேஷ்பாபு என்பவர் இடைநிலை ஆசிரியராக பணியாற்றுகிறார். இவர் மதுபோதையில் பள்ளிக்கு வருவதாகவும், கழிவறைக்கு செல்லும் மாணவிகளை பின்தொடர்ந்து செல்வதாகவும் புகார் எழுந்தது. இதனை தொடர்ந்து, அப்பகுதியை சேர்ந்த பெற்றோர் நேற்று முன்தினம் திடீரென பள்ளிக்கு சென்று முற்றுகையிட்டனர். அப்போது, அங்கிருந்த ஆசிரியர்களிடம் வாக்குவாதம் செய்தனர்.
Read Also: பாலக்கரை தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியை சஸ்பெண்ட்
குடிபோதையில் வந்து குழந்தைகளுக்கு தொந்தரவு கொடுத்தீர்களா என கேள்வி எழுப்பினர். அப்போது இருதரப்புக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர், ஆசிரியரை பள்ளி அறையிலேயே பொதுமக்கள் அடைத்து வைத்தனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த சூரமங்கலம் போலீசார் பள்ளிக்கு விரைந்து வந்து ஆசிரியரை மீட்டனர். இதுகுறித்து மாவட்ட கல்வி அலுவலர் (தொடக் கல்வி) சந்தோஷ், உதவி கமிஷினர் நாகராஜன் மற்றும் வருவாய்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து விரைந்து விசாரித்தனர். அப்போது, ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், அவரை கைது செய்ய வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தினர். மதுபோதையிலும், கழிவறை செல்லும் மாணவிகளை பின் தொடர்ந்து சென்று மன உளைச்சலை ஏற்படுத்தியதாக பெற்றோர் தரப்பில் புகார் கொடுக்கப்பட்டது. இதையடுத்து ஆசிரியர் சுரேஷ்பாபு மீது சூரமங்கலம் மகளிர் போலீசார் போக்சோ வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர். இது ஆசிரியர் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.