Pongal Festival Article in Tamil | Pongal Festival in Tamil | பொங்கல் விழா வரலாறு | தைத்திருவிழா
Pongal Festival Article in Tamil
‘தை பொறக்கும் நாளை… விடியும் நல்ல வேளை… பொங்கப்பாலு வெள்ளம் போல பாயலாம்… அச்சுவெல்லம், பச்சரிசி வெட்டி வச்ச செங்கரும்பு… அத்தனையும் தித்திக்கிற நாள்தான்’ என்ற தமிழர் திருநாளம் பொங்கல் பண்டிகை குறித்த பாடல் எல்லோர் மனதிலும் ஒடிக்கொண்டிருக்கத்தான் செய்கிறது.
அவ்வாறே,
தமிழ் இனத்திற்கு அப்படி ஒரு தித்திப்பான பண்டிகைதான் பொங்கல் பண்டிகை.
ஆடி மாதம் வெதைச்சு, தை மாதம் அறுவடை செய்து, அந்த புது நெல்லின் புத்தரிசியை சூரியனுக்கு படைத்து, சூரியனை வணங்கி நன்றி தெரிவிக்கிற நாள்தான் இந்த பொங்கல் திருநாள்.
சூரியனுக்கு மட்டும் இல்லாமல், மாடுகளுக்கு மாட்டு பொங்கல் வைத்து, ஆண்டெல்லாம் வயலோடு தன்னோடு உழைத்த கால்நடைகளையும் தொழுது, கால்நடைகளுக்கும் நன்றி தெரிவித்த இனம் நம் தமிழ் இனம்.
பொங்கல் பண்டிகை வரலாறு என்று பார்த்தால் மிகவும் பாரம்பரியமிக்க நாளாகேவ கருதப்படுகிறது. சோழர்கள் காலத்திலேயே
அதியுதி என்ற பெயரில் பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட்டதாகவும், அதற்கு முன்னர் சங்க காலத்தில் இந்திரவிழா கொண்டாட்டங்களுக்கும் தற்போதைய பொங்கல் பண்டிகையாக மாறிவிட்டதாக கூறப்படுவதும் உண்டு. சங்க இலக்கியங்களிலும் தைத்திருநாள் பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது.
- தைஇத் திங்கள் தண்கயம் படியும் என்று நற்றிணை
- தைஇத் திங்கள் தண்கயம் தரினும் என்று குறுந்தொகை
- தைஇத் திங்கள் தண்கயம் போல என்று ஐங்குறுநூறு
- தையில் நீராடி தவம் தலைப்படுவாயோ என்று கலித்தொகை போன்ற நூல்கள் குறிப்பிடுகின்றன.
அதே நேரம் வடமாநிலங்களான, ஆந்திரா, கர்நாடகா, ராஜஸ்தான், உத்தரபிரதேசம், பீகார், மேற்கு வங்கம், ஒரிசா, மணிப்பூர் உள்ளிட்ட மாநிலங்களில் சங்கராந்தி புனித நீராடல் விழாவாக கொண்டாடப்படுகிறது.
வடமாநில மக்கள் வழக்கப்படி சூரியன் மகர ராசியில் பிரவேசிக்கும் நாளைத்தான் மகர சங்கராந்தி என்ற பெயரில் புனித நீராடல் நாளாகவும், ஆலயங்களில் வழிபாடு செய்யும் நாளாகவும் கொண்டாடுகிறோம். இது தரவி தாய்லாந்து நாட்டில்
செங்க்ரான் என்ற பெயாிலும், லாவோஸ் நாட்டில்
பி மா லாவ் என்ற பெயரிலும், மியான்மர் நாட்டில்
திங்க்யான் என்ற பெயரிலும், இலங்கையில் தமிழ் புத்தாண்டு அல்லது பொங்கல் பண்டிகையாகவும் தைத்திருநாள் கொண்டாடப்படுகிறது என்று சொல்லப்படுகிறது.
இப்படி பல பகுதிகளிலும் கொண்டாடப்படும் பொங்கல் பண்டிகை தமிழ் இனத்தின் பெருமையாக கருதப்படுகிறது. பல பகுதிகளில் இந்துக்கள் அல்லாதவர்களும் பொங்கல் பண்டிகை கொண்டாடுகிறார்கள். இப்படி மதங்கள் கடந்து கொண்டாடப்படும் பொங்கல் பண்டிகை மகிழ்ச்சி அள்ளி விதைக்கும் நாளாக உள்ளது.
Read Also: பத்து ரூபாய் நாணயம் வாங்க மறுத்தால் நடவடிக்கை
மார்கழி மாதம் 30 நாளும் வீட்டு வாசலில் பெண்கள் கோலமிட்டு, பிள்ளையார் பிடித்து வைத்து பூசனிப்பூ வைத்திருப்பார்கள். அப்படி பூசனிப்பூவம், பிள்ளையாரும் இன்று கடைக்கோடி கிராமங்களில் கூட காண்பது அரிதாகி வருகிறது. பொங்கலுக்கு முந்தையை நாளில் கொண்டாடப்படும் போகிப்பண்டிகை பழமையான கழிக்கும் பண்டிகை. வட மாவட்டங்களிலும், தென்மாவட்டங்களில் சில இடங்களிலும் போகிப்பண்டிகை பழைய பொருட்களை எரிக்கும் நாளாக இருக்கிறது. மற்ற பெரும்பாலான பகுதிகளில் போகிபண்டிகை நாளன்று வீட்டில் வேப்பிலை காப்பு கட்டி, மகர சங்கராந்திக்கு அரசாணிக்காய் பொரியலும், பருப்பு சாதமும் இரவு படையலாய் வைத்து வழிபடுவதை காண முடிகிறது. தை முதல் நாளில் புது அரிசி போட்டு, புதுப்பானையில் பொங்கல் வைத்து சர்க்கரை பொங்கல் படைத்தும், அதிகாலை சூரியனுக்கு கரும்பு, மஞ்சள் படைத்தும் வழிபடுவது வழக்கமாக உள்ளது. இந்நாளில் புத்தாடை அணிந்து மகிழ்வது நம் தமிழ் மக்களின் வழக்கம்.
மாட்டு பொங்கல் விழா
தை இரண்டாம் நாள் மாட்டு பொங்கல் கொண்டாடப்படுகிறது. ஆண்டெல்லாம் விவசாயிகளுக்கு உடன் இருந்து உழைக்கும் மாடுகள், கால்நடைகளுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக நடக்கும் இந்த பண்டிகை நாளன்று கால்நடைகளை குளிப்பாட்டி, கொம்புகளுக்கு வண்ணமிட்டு, தெப்பக்குளம் கட்டி பொங்கல் வைத்து கால்நடைகளுக்கு வழங்குகிறார்கள்.
காணும் பொங்கல் விழா
தை மூன்றாம் நாள் நடக்கிற காணும் பொங்கல் உறவுகளை காணும் நாளாக இருக்கிறது. மார்கழி மாதம் வாசலில் வைக்கப்படும் பிள்ளையார் எல்லாம் ஓட்டின் மேல் போட்டு வைத்து இருப்பார்கள். அதை எடுத்துக்கொண்டு போய் ஊரில் ஒரு இடத்தில் கொட்டிவிட்டு, பலகாரங்களை தின்று விட்டு பூப்பறித்து வந்து மாலையில் பூப்பொங்கல் வைப்பார்கள். இந்நாளோ கொண்டாட்டமும், கும்மியடியுமாக ஊரே மகிழும் நாளாக இருக்கும். இதுவெல்லாம் தவிர பொங்கல் பண்டிகை ஒட்டி நடக்கும் ஜல்லிகட்டு, பலவிதமான கொண்டாட்டங்களுடன் ஓரு வாரத் திருவிழாவாக இருக்கும். இதில் ஒவ்வொரு ஊருக்கும் கொண்டாட்ட முறைகள் சற்று வேறுபட்டு இருக்கும். இப்படி மூன்று நாட்கள் கொண்டாடப்பட்ட பொங்கல் பண்டிகை இன்று நகர்மயமாதலின் விளைவான ஒன்டே குக்கர் பொங்கலாக மாறிவிட்டது. கலர்கலராய் புது ஆடைகள், சொந்தபந்தங்களுக்கும், நண்பர்களுக்கும் ஒரு வாட்ஸப் வாழ்த்து, காலையில் குக்கரில் பொங்கல் வைத்து நாம் மட்டும் சாப்பிட்டுவிட்டு மூன்று நாள் விடுமுறை மூன்று சினிமா பார்த்துவிட்டு கழிக்கும் நாளாக மாறி வருகிறது தமிழினத்தின் அடையாளமான பொங்கல் பண்டிகை. பொங்கல் வைத்து யாருக்கு கொடுப்பது என்ற மனஓட்டம் தொடங்கி இருக்கிறது.
பொங்கல் பண்டிகையின் நோக்கமே, பொங்கல் வைத்து வழிபடுவது மட்டும் இல்லாமல், பாரம்பரிய பழக்கவழக்கங்களை கொண்டாடுவதும், உறவுகளையும், நட்புகளையும் பலப்படுத்தவதுதான். ஆனால், இன்றைய அவசர உலகில் நாம் எல்லாவற்றையும் மறந்துவிட்டு சென்று கொண்டு இருக்கிறோம். ஆனாலும் பொங்கல் பண்டிகை வந்தாலே புத்தாடை, பலகாரம், பொங்கல், சினிமா, சுற்றுலா என்ற மகிழ்ச்சியான விஷயங்கள் நமக்க கிடைக்கத்தான் செய்கின்றன. இவற்றோடு பாரம்பரிய வகையிலான பொங்கல் கொண்டாட்டத்தையும் உறவுகளும், நட்புகளையும் நம் கொண்டாட்டத்தில் இணைந்துகொண்டால்
பொங்கலோடு மகிழ்சியும் பொங்கும்தானே…