பெரியார் பல்கலை பதிவாளர் சிறையில் அடைப்பு, மாணவிக்கு பாலியல் தொல்லை
பெரியார் பல்கலை பதிவாளர்
மாணவியிடம் அத்துமீறி நடந்துகொண்ட பெரியார் பல்கலைக்கழக பதிவாளர் கோபி மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்தனர். துறை ரீதியான விசாரணைக்கும் பல்கலை சார்பில் குழு அமைக்கப்பட்டுள்ளது.
சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் பொறுப்பு பதிவாளராக இருந்தவர் வேதியியல் துறை பேராசிரியர் கோபி (45). சேலத்தை சோ்ந்த மாணவி ஒருவர், இவரது வழிகாட்டுதலின்படி கீழ் முனைவர் பட்ட ஆராய்ச்சி படிப்பை மேற்கொண்டு வருகிறார். விடுமுறை தினமான நேற்று முன்தினம், பதிவாளர் கோபி ஆராய்ச்சி சம்மந்தமாக பேச வேண்டும் என மாணவியை பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள தனது குடியிருப்புக்கு அழைத்துள்ளார். அப்போது மாணவி தனது உறவினர்களுடன் சென்றார்.
மாணவி மட்டுமே உள்ளே சென்ற நிலையில், பதிவாளர் கோபி அவருக்கு பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால் அதர்ச்சி அடைந்த அந்த மாணவி சோகத்துடன் வெளியே வந்து, உள்ளே நடந்ததை உறவினர்களிடம் கூறியுள்ளார். ஆத்திரம் அடைந்த உறவினர்கள் பதிவாளர் கோபியை தாக்கியுள்ளனர். இதுகுறித்து கருப்பூர் காவல்துறையிடம் கோபி புகார் அளித்தார்.
Also Read: மாணவிகளிடம் அத்துமீறல், ஆங்கில ஆசிாியர் ஓட்டம்
அதேசமயம் மாணவியும் தனக்கு பாலியல் தொல்லை கொடுத்தாக பதிவாளர் கோபி மீது புகார் அளித்தார். இதனை விசாரித்த போலீசார், பதிவாளர் கோபி மீது பாலியல் வன்கொடுமை உள்ளிட்ட 3 பிரிவின்கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். பின்னர், சேலம் அரசு மருத்துவமனையில் கோபிக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டு, இரவு 11 மணியளவில் சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்த விவகாரம் தொடர்பாக, துறை ரீதியான விசாரணை நடத்த பெரியார் பல்கலைக்கழகம் சார்பில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதற்காக, பல்கலைக்கழக தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் (பொ) கதிரவன், டீன் (பொ) கண்ணன் மற்றும் தொலைதூர கல்வி மைய இயக்குனர் முருகன் ஆகியோர் அடங்கிய விசாரணை குழுவை பல்கலைக்கழக துணைவேந்தர் ஜெகநாதன் நியமித்து உத்தரவிட்டுள்ளார்.
முதற்கட்டமாக கோபி கைது செய்யப்பட்டது தொடர்பாக ஆவணங்கள் போலீஸ் தரப்பில் இருந்து, பல்கலைக்கழக நிர்வாகத்திற்கு வழங்கப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில், பதிவாளர் கோபி சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட கோபி மீது கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பே பாலியல் புகார் அளிக்கப்பட்டுள்ளது. அப்போது பெயரளவிற்கு மட்டுமே நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். இதனால், அதன் பின்னரும் கோபி பல்வேறு சர்ச்சைகளில் சிக்கி வந்துள்ளார். அப்போதே நடவடிக்கை எடுத்திருந்தால், பல மாணவிகள் தப்பியிருப்பார்கள் என பல்கலைக்கழக பேராசிரியர்கள் வேதனை தெரிவித்துள்ளாக நாளிதழ்கள் செய்தியை வெளியிட்டுள்ளன.