Jacto Geo Latest News | ஜாக்டோ ஜியோ ஏப்ரல் 11ல் கோட்டை முற்றுகை
Jacto Geo Latest News
தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி பொதுச்செயலாளர் ச.மயில் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது,
ஜாக்டோ ஜியோ பேரமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும் மாநில உயர்மட்டக்குழு உறுப்பினர்கள் கூட்டமானது 02.04.202 திருச்சியில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் 6 முக்கியத் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. அவை பின்வருமாறு.
1.கடந்த 27.03.2023 அன்று தமிழக சட்டமன்றத்தில் நிதி மற்றும் மனித வள மேலாண்மைத் துறை அமைச்சர் அவர்கள் ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் - பணியாளர்கள் பல இலட்சம் ரூபாய் ஊதியம் பெறுகிறார்கள் என்று உண்மைக்கு புறம்பாகப் பேசியதோடு, தமிழக முதலமைச்சர் அவர்களால் சமூக நீதிக்கு எதிராகவும், இளைஞர்களின் அரசு வேலைவாய்ப்பு கனவினை பறித்து, TNPSCயை முழுமையாக ஒழித்துக் கட்டி, அத்துக்கூலி முறையில் நிரந்தரப் பணியிடங்களை அகற்றி, வெளிமுகமை மூலமாகப் பணியாளர்களை அமர்த்துவதற்காக மனித வள மேலாண்மை துறையால் அரசாணை 115ல் அமைக்கப்பட்ட குழுவின் ஆய்வு வரம்புகளை இரத்து செய்தது சரியில்லை என்று பேசியதற்கு ஜாக்டோ ஜியோ கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறது.
2.கடந்த இரண்டாண்டுகளில் நிதி மற்றும் மனித வள மேலாண்மைத் துறை அமைச்சர் அவர்கள் சமூக ஊடகங்கள் மற்றும் வலைத்தளங்கள் வாயிலாக ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள்-பணியாளர்கள் மீது வெறுப்புணர்வோடு பேசியதைத் தற்போது சட்டமன்றத்திலேயே அரங்கேற்றம் செய்ததற்கு கடும் கண்டனத்தை ஜாக்டோ ஜியோ தெரிவித்துக் கொள்கிறது.
3.ஜாக்டோ ஜியோ சார்பாக கோரிக்கை சாசனம் அனைத்து பாராளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களிடம் மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் சார்பாக எதிர்வரும் 7, 8, 9 ஆகிய தேதிகளில் வழங்குவது, அதே நாட்களில் மாநில ஒருங்கிணைப்பார்கள் அமைச்சர் பெருமக்களையும், அனைத்துக் கட்சித் தலைவர்களையும் சந்தித்து கோரிக்கை சாசனம் அளிப்பது.
Read Also: பட்ஜெட்டில் பந்தாடப்பட்ட ஆசிரியர்கள் – கடும் கண்டனம்
4.ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள்-பணியாளர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி ஏப்ரல்- 11ல் தலைமைச் செயலக முற்றுகைப் போராட்டத்தினை நடத்துவது.
5.ஜாக்டோ ஜியோ கோரிக்கைகளை நிறைவேற்ற மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்கள் ஜாக்டோ ஜியோ மாநில ஒருங்கிணைப்பாளர்களை அழைத்துப் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்ற வேண்டுகோளை ஜாக்டோ ஜியோ விடுக்கிறது.
6.ஜாக்டோ ஜியோ மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டங்களை ஏப்ரல் 6ல் நடத்தி கோரிக்கை சாசனம் வழங்குவது மற்றும் கோட்டை முற்றுகை போராட்டங்களுக்குத் திட்டமிடுமாறு கேட்டுக் கொள்கிறோம்.
மேற்கண்ட ஜாக்டோ ஜியோவின் தீர்மானங்களில் கண்ட கள நிகழ்வுகளை நடைமுறைப்படுத்துவதில் நம் பேரியக்கத் தோழர்கள் கண்துஞ்சாது கடமையாற்றிட தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநில மையம் தோழமையுடன் கேட்டுக்கொள்கிறது.
கூட்டுப் போராட்டமாக இருந்தாலும், தனிச்சங்கப் போராட்டமாக இருந்தாலும் TNPTF தோழர்கள் முன்னணிப் படையாக முன்கள வீரர்களாக செயலாற்றும் வரலாற்றை மீண்டும் ஒருமுறை படைப்போம்.
இவ்வாறு அவர் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.