How to Select Best Colleges in Tamil | சிறந்த கல்லூரி தேர்வு செய்வது எப்படி
How to Select Best Colleges in Tamil
பிளஸ் 2 முடித்தபின், சிறந்த கல்வி நிறுவனத்தை தேர்வு செய்வதில் சிலவற்றை நினைவில் வைத்துகொள்ள வேண்டும், ஏனென்றால் கல்லூரிப் படிப்பை ஒரு முறைதான் படிக்க போகிறோம்.
சிறந்த கல்லூரியை தேர்வு செய்யும்போது வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருக்கும். ஏனென்றால், தரமற்ற கல்வியால் நல்ல வேலை வாய்ப்பு எதிர்பார்க்க முடியாது, மாணவர்களின் கனவுகள், எதிர்பார்ப்புகள் சிதையும். எனவே,
உயர்கல்வி - யில் நுழையும்போது, நல்ல கல்லூரியையும் விருப்பமான படிப்பையும் பல முறை யோசித்தபின், தீர்க்கமான முடிவு எடுக்க வேண்டும். எதிர்காலத்தை தீா்மானிப்பதில் தரமான கல்லூரியின் பங்கு அதிகம். நல்ல கல்லூாியை தேர்வு செய்யும் போது உயர்கல்வி வெற்றிகரமானதாகவும் அமையும்.
பல சாதனையாளர்கள் மேடைகளில் கூறும்போது, நான் இந்த கல்லூரியில் படித்ததால்தான் வாழ்க்கையில் வெற்றிபெற்றேன் என்று கூறுவார்கள். சரி, கல்லூரியை தேர்வு செய்யும் போது கவனிக்க வேண்டிய விஷயங்கள் என்னவென்று பார்க்கலாம்.
நிபுணத்துவ கல்லூரிகள்
ஒரு சில கல்லூரிகள் தொழில்நுட்பம், மேலாண்மை, பொருளாதாரம் என பல துறை சார்ந்த நிபுணத்துவத்தை பெற்றுள்ளன. உதாரணமாக, சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள மெட்ராஸ் ஸ்கூல் ஆப் எக்னாமிக்ஸ் கல்லூரி, பொருளாதார படிப்பில் நிபுணத்துவம் பெற்றது.
அடையாரில் உள்ள சென்னை ஐஐடி யும், அண்ணா பல்கலைக்கழகமும் தொழில்நுட்ப கல்வியில் பிரபலமானவை. சென்னையில் உள்ள மருத்துவ கல்லூரியில், மருத்துவத்துறையில் தனி அடையாளம் கொண்டவை. எனவே, எத்தகைய துறையில் நிபுணத்துவம் பெறுவது என்று முடிவெடித்து நிபுணத்துவம் பெற்ற கல்லூரியில் சேர்வது சிறப்பு.
Read Also: உயர் கல்வி என்றால் என்ன
பிரபலமான கல்லூரிகள்
உங்கள் பகுதியில் உள்ள ஒரு சில கல்லூரிகள் ஏற்கனவே நல்ல கல்லூரி எனும் பெயரை பெற்றிருக்கும். அந்த கல்லூரியை நடத்தும் மேலாண்மை அமைப்பு சிறப்பானதாக இருக்கும். பேராசிரியர்கள் அனுபவம் கொண்டவர்களாக இருப்பார்கள். அங்கு படித்த முன்னாள் மாணவர்கள் உயர்பொறுப்பில் இருப்பார்கள். பல பேர் வெளிநாடுகளில் வேலை வாய்ப்பும் பெற்றிருப்பார்கள். ஒரு சில கல்லூரிகள் பிரபலமான பிரமுகர்களால் நடத்தப்படுவதாக இருக்கலாம். இத்தகைய கல்லூரிகளில் பல்கலைக்கழகம் தேர்ச்சி விகிதம் எப்படி உள்ளது என்பதை அறிந்து சேர்வது நல்லது.
கல்லூரி கட்டமைப்பு
கொரோனா காலம் என்பதால் ஆன்லைன் வகுப்புகளை வழங்குவதற்கான கட்டமைப்பு வசதிகள் கல்லூரிகளில் உள்ளனவா என்பதை சரிபார்ப்பது அவசியம். கல்லூரி சேர்க்கைக்கு விண்ணப்பிக்கும்போதே கல்லூரியின் சுற்றுச்சூழலையும், வசதிகளையும் தீர விசாரிக்க வேண்டும்.
கல்லூரிகளில் ஆய்வகங்கள், நூலகம், இன்டர்நெட் வசதி, கழிப்பிட வசதி, தண்ணீர் வசதி, போன்றவை இருப்பதை உறுதி செய்ய வேண்டும், அவை முறையாக பராமரிக்கப்படுகிறதா என்பதையும் விசாரிக்க வேண்டும்.
முன்னாள்- இந்நாள் மாணவர்கள் ஆலோசனை
நீங்கள் சேர நினைக்கும் கல்லூரியில் படித்த முன்னாள் மாணவர்களிடமும், தற்போது படித்துகொண்டிருக்கும் மாணவர்களிடமும் கல்லூரி செயல்பாடு குறித்து முழுமையாக விசாரிக்க வேண்டும். நீங்கள் ஆலோசனை பெறும் முன்னாள் மாணவர்கள் நன்றாகப் படிக்காதவர்களாக இருந்தால், அவர்களின் ஆலோசனைகள் உங்களை குழப்பக்கூடும். ஆகையால் குறிப்பிட்ட கல்லூரியில் படித்த வெற்றியாளரை அடையாளம் கண்டு அவரின் ஆலோனையை பெறுவது அவசியம். இது எதிர்காலத்திற்கு, கல்லூரி படிப்பை சிறப்பாக முடிக்கவும் ஏதுவாக அமையும்.
கல்லூரி தகவல் புத்தகத்தை ஒப்பீடு செய்யுங்கள்
கல்லூரிக்கு விண்ணப்பிக்கும்போது கல்லூரி குறித்த தகவல் அடங்கிய புத்தகம் வழங்கப்படுவது வழக்கம். அதில், கல்லூரி எப்போது தொடங்கப்பட்டது, குறிப்பிடப்பட்ட பாடப்பிரிவு எப்போது தொடங்கப்பட்டது, பாடப்பிரிவுக்கு உரிய அனுமதி உள்ளதா, கல்லூரி நிர்வாகிகள் குறித்த விவரங்கள், கல்லூரி பணியாற்றும் பேராசிரியர்கள், கல்லூரியில் உள்ள வசதிகள் என கல்லூரியின் விவரங்கள் அனைத்தையும் தொகுத்து வழங்கியிருப்பார்கள்.
நீங்கள் விண்ணப்பிக்கும்போது கல்லூரிகளின் தகவல் புத்தகங்களில் உள்ள விவரங்களையும் மற்ற கல்லூரிகளின் விவரங்களையும் ஒப்பிட்டு, எந்த கல்லூரியில் என்னென்ன வசதிகள் உள்ளன என்பதை கண்டறியவும்.
கேம்பஸ் இண்டர்வியூ
கல்லூரி நிர்வாகத்தினர் தங்கள் கல்லூரியின் இமேஜை உருவாக்க பல முன்னனி நாளிதழ்கள், எப்எம் போன்றவற்றில் விளம்பர யுக்திகள் மேற்கொள்வார்கள். ஒரு சில கல்லூரிகளோ, எங்கள் கல்லூரியிலிருந்து 1500 பேர் வேைல வாய்ப்பு பெற்றுள்ளனர், 2000 பேர் வேலை வாய்ப்பு பெற்றிருக்கிறார்கள் என்றும் விளம்பரம் செய்கின்றனர். 10 ஆண்டுகளுக்கு முன்பு வளாக நேர்காணல் நடத்தப்பட்டதையே பெரும் சாதனையாக விளம்பரம் செய்கிறார்கள். இவற்றிற்கு எல்லாம் மயங்காமல் தீர விசாரித்து கல்லூரியில் சேர்வது நல்லது.
இண்டர்நெட் உதவியை நாடுங்கள்
உங்களுடைய கல்வி சார்ந்த சந்தேகங்களுக்கு இணையத்தின் உதவியை நாடலாம். பல்வேறு இணையதளங்கள் கல்வி நிறுவனங்கள் குறித்து பல்வேறு தகவல்கள் கொட்டி கிடக்கின்றன. தகவல்களின் உண்மை தன்மையை அறிந்து கல்லூரிகளில் சேரலாம்.
கட்டண சலுகை
ஒரு சில கல்லூரிகள் பிளஸ்2 வகுப்பில் 90 அல்லது 80 சதவீதத்திற்கு கூடுதலாக மதிப்பெண் பெற்றிருந்தால் கல்வி கட்டணத்தில் இருந்து பாதியே அல்லது முழு விலக்கும் அளிக்கப்படுகிறது. பேருந்து கட்டணம் இல்லை என்றும் விளம்பரம் செய்யப்படுகிறது.
மாணவர் சேர்க்கை இல்லாமல் இருக்கும் கல்லூரிகளில் இத்தகைய விளம்பரத்தை செய்கின்றன. இந்த கல்லூரிகளில் கட்டண சலுகை மட்டும்தானா அல்லது கற்றுக்கொடுப்பதும் சலுகை அளவிலா என்பதையும் விசாரியுங்கள்.
கல்வியாளர்களின் ஆலோசனை பெறுங்கள்
தற்போது கல்லூரிகள் மற்றும் பாடப்பிரிவுகள் குறித்து கல்லூரிகள் கல்வியாளர்கள் பலர் ஆலோசனை பெறுகிறார்கள். இவர்களின் ஆலோசனை கூட்டங்கள் இணையத்திலும் நடத்தப்படுகின்றன. அவற்றில் கலந்துகொண்டு குறிப்பிட்ட துறை குறித்தும், கல்லூரிகளின் நிலை குறித்தும் ஆலோசனை பெறலாம்.
மாணவர் சேர்க்கை
தமிழ்நாட்டில் உள்ள மருத்துவக் கல்லூரிகளில், பொறியியல் கல்லூரிகளிலும் சேர கலந்தாய்வு நடத்துகிறது. அறிவியல் மற்றும் கலை கல்லூரிகளில் சேர ஆன்லைன் கலந்தாய்வும் நடத்துகிறது. எனவே மாணவர் சேர்க்கை குறித்த விவரங்கள் வெளியாகிறதா என்பதை கவனமாக பார்க்க வேண்டும். பெரும்பாலான தனியார் கல்லூரிகளில் மாணவர் சோ்க்கையில் வெளிப்படத்தன்மை இருப்பதில்லை. வெளிப்படைத்தன்மையோடு மாணவர் சேர்க்கை நடத்தப்படும் கல்லூரிகளில் சேருவது நல்லது.