பள்ளியின் பாதுகாவலரான தலைமை ஆசிரியருக்கு எதிரான போக்சோ வழக்கை ரத்து செய்ய சென்னை உயர் நீதிமன்றம் மறுத்துவிட்டது.
கோவையைச் சேர்ந்த பள்ளி மாணவி ஒருவருக்கு 2018இல் பாலியல் தொல்லை அளிக்கப்பட்டதாக புகார் எழுந்தது. இந்த சம்பவம் தொடர்பாக அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கவில்லை எனக் கூறி பள்ளி தலைமை ஆசிரியர் மீது போக்சோ வழக்குப் பதிவு செய்யப்பட்டது. தன் மீதான வழக்கை ரத்து செய்யக்கோரி தலைமை ஆசிரியர், சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார்.Read Also: போக்சோ சட்டம் என்றால் என்ன? இந்த மனு நீதிபதி பி.வேல்முருகன் முன் விசாரணைக்கு வந்தது. 2018இல் சம்பவம் நடந்த நிலையில், மூன்று ஆண்டுகளுக்கு பின்னர் தனக்கெதிராக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தலைமை ஆசிரியர் சார்பில் தெரிவிக்கப்பட்டது. பாதிக்கப்பட்ட மாணவியிடம் இருந்து வாய்மொழியாகவோ அல்லது எழுத்துப்பூர்வமாகவோ எந்த புகாரும் அளிக்கப்படவில்லை எனவும், தனக்கெதிராக பதிவு செய்யப்பட்ட வழக்கை ரத்து செய்ய வேண்டுமென கோரிக்கை வைக்கப்பட்டது. இந்த வாதத்தை ஏற்க மறுத்த நீதிபதி, பள்ளியின் காவலர் என்ற முறையில் அனைத்திற்கும் தலைமை ஆசிரியர் பொறுப்பேற்க வேண்டுமெனவும், சம்பவம் தொடர்பாக குழந்தைகள் நல அதிகாரி உள்ளிட்டோரிடம் புகார் அளிக்காதது தவறு என தெரிவித்து, தலைமை ஆசிரியரின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.