பள்ளி மாணவர்கள் தடுப்பூசி செலுத்தும் விஷயத்தில் பத்து விஷயங்களை தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள் தவறாமல் பின்பற்ற வேண்டும் என கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
தற்போது பரவி வரும் உருமாறிய கொரோனா வைரஸ் (ஒமைக்கரான்) தொற்றில் இருந்து தற்காத்து கொள்ள மத்திய அரசின் உத்தரவின்படி 3-1-2022 அன்று முதல் 15 வயது முதல் 18 வயதுடைய சிறுவர்களுக்கு செலுத்தும் பணி தமிழகத்தில் தொடங்கியுள்ளது.
தமிழ்நாடு பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு துறை இயக்குனர் உத்தரவின்பேரில் தடுப்பூசி முகாம் அனைத்து வகையான அரசு, உதவிபெறும், மெட்ரிக், சிபிஎஸ்இ உள்ளிட்ட பள்ளிகளில் தொடங்கியுள்ளது.
READ MORE :
பள்ளி மாணவர்களுக்கு தடுப்பூசி போடப்படும் – பிரதமர் அறிவிப்பு
இதுதொடர்பாக, கோவை மாவட்ட பள்ளி கல்வித்துறையின்
முதன்மை கல்வி அலுவலா் கீதா பள்ளிகளில் நடக்கும் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் முன்னிட்டு, தலைமை ஆசிரியர்கள் மேற்கொள்ள வேண்டிய முன் ஆயத்த முதற்கட்ட பணிகளை பட்டியலிட்டுள்ளார்.
பள்ளி தடுப்பூசி முகாமில் பின்பற்ற வேண்டியவை
பள்ளியில் 2007 வருடம் அல்லது அதற்கு முன்பாக பிறந்த 10, 11, 12 வகுப்பு மாணவர்களின் விவரங்கள் அதாவது மாணவர் பெயர், வகுப்பு, பிறந்த தேதி, ஆதார் எண், எமிஸ், பெற்றோர், குடியிருப்பு விவரம், தொடர்பு எண் போன்ற விவரங்களுடன் தயார் நிலையில் வைக்க வேண்டும்.
3-1-2022 அன்று முதல் மருத்துவர்கள் மற்றும் மருத்துவபணியாளர்கள் வந்து கொரோனா தடுப்பூசி (கோவாக்சின்) மாணவர்களுக்கு செலுத்துவதற்கு தனி அறை தயார் நிலையில் இருக்க வேண்டும். தலைமை ஆசிரியர்கள் குடிநீர் வசதி, இருக்கை வசதி, தூய்மையான அறை வழங்குதல் உறுதி செய்ய வேண்டும்.
பள்ளியில் ஏற்கனவே ஆர்பிஎஸ்கே பொறுப்பு ஆசிரியராக நியமிக்கப்பட்ட ஆசிரியர் சுகாதாரத்துறைக்கும், பள்ளி கல்வித்துறைக்கும் தொடர்பு அலுவலராக இருக்க வேண்டும்.
முகாம் சிறப்பாக நடைபெறுவதற்கு அனைத்து ஆசிரியர்களின் ஒத்துழைப்புடன் தலைமை ஆசிரியர் திறம்பட சிறப்பாக உரிய அறிவுரைகளை வழங்கி, அதனை பின்பற்ற வேண்டும்.
மாணவர்களுக்கு பொதுவான உடல்நலம் குறித்து மருத்துவ குழுவால் பரிசோதனை செய்த பின் தடுப்பூசி போட்டுக்கொள்ள அறிவுறுத்த வேண்டும்.
மாணவர்கள் காலையிலும், பிற்பகல் மதிய உணவும் எடுத்துக்கொண்டார்களா என்பதை உறுதி செய்ய வேண்டும்.
தலைமை ஆசிரியர்கள் உடனடியாக அந்தந்த வட்டார மருத்துவ அலுவலர்கள் மற்றும் ஆர்பிஎஸ்கே மருத்துவ குழுவை தொடர்பு கொண்டு தங்கள் பள்ளியில் மாணவர்களுக்கு தடுப்பூசி போடும் நாள், நேரம், வருகை புரியும் மருத்துவர்கள் மற்றும் மருத்துவ பணியாளர்கள் விவரம் ஆகியவற்றை உறுதி செய்து சிறப்பாக நடைமுறைப்படுத்த வேண்டும்.
முகாம் துவக்கிவைக்கும்போது, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளை பங்கேற்க செய்ய வேண்டும்.
தினந்தோறும் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட மாணவர்களின் விவரங்களை எமிஸ் இணையதளத்தில் பதிவேற்றம் செய்து தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும்.
மேலும் எவ்வித புகாருக்கும் இடமின்றி, முகாம் சிறப்பாக நடத்த வேண்டும் என முதன்மை கல்வி அலுவலர் கேட்டுக்கொண்டுள்ளார்.