Coimbatore HM Suspend | கோவை தலைமை ஆசிரியை சஸ்பெண்ட்
Coimbatore HM Suspend
கோவை பெரிநாயக்கன்பாளையம் வட்டாரத்தில் புதுப்பாளையம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி செயல்படுகிறது. சுமார் 40 மாணவர்கள் படிக்கின்றனர். குமரேஸ்வரி என்பவர் தலைமை ஆசிரியராக பணியாற்றி வருகிறார். பிப்ரவரி முதல் வாரத்தில் சில மாணவிகளை கழிவறை சுத்தம் செய்யுமாறு தலைமை ஆசிரியை கட்டாயப்படுத்தினர். சாதிபெயரை கூறி மாணவிகளை இழிவுப்படுத்தியதாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்து மாணவிகள் கொடுமையை பெற்றோரிடம் கூறினர். ஆத்திரமடைந்த பெற்றோர் சிலர் பள்ளிக்கு நேரடியாக சென்று தலைமை ஆசிரியையிடம் வாக்குவாதம் செய்தனர் மற்றும் துறை ரீதியாக அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர்கள் அலுவலா்களிடம் வலியுறுத்தினர்.
Read Also: செல்போனில் படம் பிடித்த பேராசிரியர் கைது
இதையடுத்து, தலைமை ஆசிரியை பணி விடுப்பில் சென்றார். அவர் மீது சட்ட நடவடிக்கை எடுக்ககோரி இந்திய மாணவர் சங்கத்தினர் (கோவை) பெரியநாயக்கன்பாளையத்தில் காவல் நிலையம் மற்றும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் அளித்தனர். பின்னர் கல்வி அதிகாரிகள் பள்ளிக்கு சென்று மாணவிகள் மற்றும் ஆசிரியையிடம் விசாரணை நடத்தினர். இதில் தலைமை ஆசிரியை மாணவிகளை சுத்தம் செய்ய கட்டாயப்படுத்தியது அதிகாரிகள் உறுதி செய்தனர். இதையடுத்து, கோவை மாவட்ட கல்வி அலுவலர் (பொ) ராஜலட்சுமி அந்த தலைமை ஆசிரியை கடந்த 18ம் தேதி சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டுள்ளார்.
கோவையில் தொடர்ச்சியாக தலைமை ஆசிரியர்கள் பாலியல் தொந்தரவு, சாதிய பாகுபாடு போன்ற புகாரில் சிக்குவது தொடர் கதையாகி உள்ளது. நேர்மையாக பணியாற்றும் ஆசிரியர்களுக்கும் இதுபோன்ற சம்பவங்கள் களங்கத்தை ஏற்படுத்துகிறது. இதனை தவிர்க்க கல்வி அதிகாரிகள் ஆசிரியர்களுக்கு உரிய அறிவுரை வழங்க வேண்டும் என பெற்றோர் மத்தியில் கோரிக்கை எழுந்துள்ளது.
பள்ளி கல்வி பாதுகாப்பு இயக்கத்தின் கோவை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சந்திரசேகர் கூறுகையில், “பள்ளி மேலாண்மை குழு கூட்டம் நடத்தாமல் இருப்பதுதான் இதுபோன்ற பல பிரச்னைகள் உருவாக காரணம். அதேபோன்று, பெற்றோரும் பள்ளி மேலாண்மை குழு செயல்பாடு குறித்து அறிந்து கொள்ள வேண்டும், அதன் கூட்டங்களில் பங்கேற்று பள்ளியில் நடக்கும் பிரச்னைகள் மற்றும் மேம்பாடு குறித்து விவாதிக்க வேண்டும்.”