Read Also: சேலம் அரசு கலை கல்லூரி மாணவர்கள் நான்கு பேர் டிஸ்மிஸ்
இந்த கல்லூரியில் கள்ளக்குறிச்சி, வீரகனூர், ஆத்தூர், தலைவாசல் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் இளங்கலை மற்றும் முதுகலை பட்டபடிப்படிப்பில் படித்து வருகின்றனர். இந்த கல்லூரியில் மாணவ, மாணவிகளுக்கு பாடங்கள் எடுக்க தற்காலிக கௌரவ விரிவுரையாளர்கள் பணியில் அமர்த்தப்பட்டு பணியாற்றி வருகிறார்கள். கல்லூரியில் கணித பாடப்பிரிவில் பயிலும் மாணவிகளுக்கு, பாடம் நடத்தும் கௌரவ பேராசிரியர் ஒருவர் ஆசை வாா்த்தைகள் மற்றும் பாடத்திற்கு சம்மந்தம் இல்லாத வாட்சப் தகவல்களை இரவு, பகல் என அனுப்பி அவர்களை தொந்தரவு மற்றும் பாலியல் சீண்டல்களில் ஈடுபட்டு வந்துள்ளார். நேற்று கல்லூரிக்கு வந்த மாணவிகள் சிலர், சக மாணவர்களிடம் பேராசிரியர் தங்களது வாட்சப்பில் அனுப்பிய தகவல்களை காட்டி அழுதுள்ளனர். இதனால், ஆத்திரம் அடைந்த மாணவர்கள் கல்லூரியில் இருந்த பேராசிரியரிடம் நேரில் சென்று கேட்டுள்ளனர். அப்போது அவர் முறையான பதில் சொல்லாததால், மாணவர்களுக்கும் அவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதுடன், ஒரு கட்டத்தில் கைகலப்பாக மாறியது. இதில் பேராசிரியரை மாணவர்கள் சரமரியாக தாக்கியுள்ளனர். இதுகுறித்து தகவல் அறிந்த கல்லூரி முதல்வர் சித்ரா, கணிதத்துறை தலைவர் மற்றும் பேராசிரியர்கள், கௌரவ விரிவுரையாளர் மற்றும் மாணவர்களை நோில் அழைத்து விசாரணை நடத்தியதுடன், அங்கிருந்து கலைந்து செல்லும்படி உத்தரவிட்டனர். பாதிக்கப்பட்ட மாணவிகள் புகார் கொடுத்தால்தான், உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என கல்லூரி நிர்வாகத்தினர் தெரிவித்தனர். இந்த சம்பவம் கல்லூரி வளாகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.