Artificial Intelligence in Tamil | செயற்கை நுண்ணறிவை என்றால் என்ன| செயற்கை நுண்ணறிவை படிப்பு
Artificial Intelligence in Tamil
கற்க கசடறக் கற்பவை கற்றபின் நிற்க அதற்குத தக என்ற வள்ளுவரின் வாக்குகளை மாணவர்களுக்கு கற்பிக்கப்படுவது மட்டுமின்றி, இயந்திரங்களுக்கு சொல்லும் காலம் இது. செயற்கை நுண்ணறிவை (Artificial Intelligence) என்ற தொழில்நுட்பத்தின் மூலம் இது சாத்தியமாகிறது.
செயற்கை நுண்ணறிவை பல தொழில்நுட்பத் தலைமுறைகளை கடந்து, திரிந்து, மேம்பட்டு, இன்றியமையாததாக நம் வாழ்வில் இடம் பிடித்துள்ளது. உலகின் மூலை முடுக்கெல்லாம் பரவியதன் காரணமாக நிபுணர்களின் தேவையின்றி எளியோரும், பாமர மக்களும் உபயோகப்படுத்தும் திறனறி பேசியிலிருந்து (ஸ்மார்ட்போன்) சுறுசுறுப்பான ரோபோக்கள் வரை அனைத்திலும் செயற்கை நுண்ணறிவு மற்றும் தரவு அறிவியல் (டேட்டா சயின்ஸ் – டிஎஸ்) போன்றவற்றின் உபயோகம் நீக்கமற பொதிந்துள்ளது என்கிறார்கள் கல்வியாளர்கள்.
செயற்கை நுண்ணறிவு படைப்புகள்
தன்னியக்கவியல் (அட்டோனமிக்ஸ்), மெய்நிகர் முகவர் (விர்சுவர் ஏஜென்ட்), இயந்திர கற்றல் (மெஷன் லோ்னிங்) படிம அறிவு மற்றும் வடிவாக்கம் (இமேஜ் ரிகக்னிஷன் மற்றும் பிராஸசிங்), அறிவு சித்தரிப்பு (நாலெட்ஜ் ரெப்ரசேண்டேஷன்), நரம்பியல் பிணையங்கள் (நியுட்ரல் நெட்வொர்க்) கணினி காட்சி ஆற்றல் (கம்ப்யூட்டர் விஷன்), பேச்சு அடையாள ஆய்வு (ஸ்பீச் ரிகக்னி), உள்ளார்ந்த கற்றல் (டீப் லோ்னிங்) திட்டமிடல் (பிளானிங்), செயல் விளக்கம் ஆதாரம் அறிதல் (ரீசனிங்), இயற்கைமொழி ஆய்வு (நேச்சுரல் லாங்குவேஜ் பிராசஸசிங்) மற்றும் அளவளாவி ரோபோட் (சாட் போட்) ஆகியவை ஆர்டிபிசியல் இன்டெலிஜென்சுக்குள் அடங்கும். அதை ஏஐ என சுருக்கமாக அழைக்கிறோம். இதனுள் முக்கியமானதும், தற்போது பிரபலமானதுமாக தரவு அறிவியல் (டேட்டா சயின்ஸ்) மற்றும் தரவு பகுப்பாய்வு (டேட்டா அனலிஸிஸ்) என்ற தொழில்நுட்பம் திகழ்கிறது. இயந்திரத்தை மனிதர்களை போன்று பகுத்தறிவு, பண்பறிவு, முடிவு எடுக்கும் திறன் ஆகிய குணங்களை உடையதாக கணினியின் மென்பொருள் மூலம் உருவாக்க பயன்படும் தொழில்நுட்பம்தான் இயந்திர கற்றல் மற்றும் உள்ளார்ந்த கற்றல்.
Read Also: Media Certificate Course in Tamil
மென்பொருள் துறை மூலம் எங்கும் பரவியிருக்கும் ஏஐ-டிஸ் (ஆர்டிபிசியல் இன்டலிஜென்ஸ் மற்றும் டேட்டா சயின்ஸ்) ஆட்சி செய்யும் துறைகள் பல. விளையாட்டு, சமூக ஊடகம், அரசு துறை, தேடுபொறிகள், போக்குவரத்து, நிதி, மின் வணிகம், விமானப்பாதை திட்டமிடல், விளையாட்டு தரவு அறிவியல், விநியோக தளவாடங்கள் (டெலிவரி லாஜிஸ்டிக்ஸ்) மருத்துவம் மற்றும் மருந்து வளர்ச்சி, உடல் நல பராமரிப்பு, கட்டியை கண்டறிதல், மருந்து கண்டுபிடிப்புகள், மருத்துவப் பட பகுப்பாய்வு (மெடிக்கல் இமேஜ் அனலிசிஸ்), மெய்நிகர் மருத்துவ பாட்கள் (விர்ச்சுவல் மெடிக்கல் பாட்ஸ்), மரபியல், மரபியல் நோயறிதலுக்கான முன்கணிப்பு மாதிரிகள் போன்றவை மட்டுமின்றி இன்னும் பல துறைகளில் ஏஐ-டிஸ் நடைமுறையில் உள்ளது.
நாம் அதிகமாக பயன்படுத்தும் கூகுள் வரைபடம் (கூகுள் மேப்) இணையவர்த்தகத்தின் பாிந்துரை அமைப்பு, உணவு உத்தரவு செயலி, அலெக்சா உள்ளிட்டவை ஏஐ-டிஸ் மூலம்தான் வேலை செய்கின்றன.
உலக அளவில் ஏற்பட்டுள்ள தாக்கம்
உலகளாவிய பொருளாதாரத்தில் செயற்கை நுண்ணறிவின் தாக்கம் ஏற்கனவே மிக அதிகமாக உள்ளது. மேக்ரோ எக்னாமிக் எனப்படும் சிறிய அளவிலான பொருளதாரத்தில் செயற்கை நுண்ணறிவின் தாக்கம் உலக அளவில் மிக பொிய பொருளதார மாற்றத்துக்கு வித்துட்டுள்ளது. சிக்கலான, தொலைத்தூர உற்பத்தி அலகுகளை சிறப்பாக கையாள வணிகங்களுக்கு செயற்கை நுண்ணறிவு உதவுகிறது.
எடுத்துகாட்டாக, ஒரு வணிகமானது அதன் கிடங்குகளை திறமையாக நிர்வகிப்பதற்கும், நுகர்வோர் தேவையை கணிக்கவும் மற்றும் விநியோக முறைகளின் துல்லியத்தை மேம்படுத்தவும் செயற்கை நுண்ணறிவை பயன்படுத்தலாம். செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் காரணமாக டிஜிட்டல் தளங்கள் வழியாக வர்த்தகம் சாத்தியமாகிறது. எடுத்துக்காட்டாக, ஆன்லைன் ஏல தளமான ஈபே அதன் செயல்பாடுகளை தானியக்கமாக்க செயற்கை நுண்ணறிவை பயன்படுத்துகிறது.

இந்தியாவில் செயற்கை நுண்ணறிவுக்கு எதிர்காலம்
செயற்கை நுண்ணறிவால் உருவான அனைத்து வித பரபரப்புகளின் மையமாக இந்தியா உள்ளது. உலகளாவிய தகவல் தொழில்நுட்பத்தின் 65 சதவீதம் வெளி நாட்டு வேலைகளையும், 40 சதவீதம் உலகளாவிய வணிக செயலாக்க வேலைகளையும் நாடு பெறுகிறது. 2030ஆம் ஆண்டுக்கள் இந்தியாவின் முதன்முறையான வேலை வாய்ப்பு துறையில் 70 சதவீதம் வேலைகள் தானியங்கி முறையில் இயங்கும் என தொழில்நுட்ப வல்லுநர்கள் கூறுவதால், இது அறிவார்ந்த ஆட்மோமேஷனுக்கான பெரும் வாய்ப்பை அளிக்கிறது. இனி வரும் காலங்களில் ஆட்டோமெஷின் தொழில்கள் முழுவதும் தொழில்நுட்பத்தை ஏற்றுக்கொள்வதை அதிகரிக்கும்.
குறிப்பாக கொரோனா தொற்றுகாலத்திற்கு பின்னர், உலகளாவிய ஆஃப் – ஷோர் வணிகத்தில் ஆட்டோமேஷன் முக்கிய பங்கு வகுக்கும். உலகளாவிய உற்பத்தி மையங்கள் சீனாவின் மக்கள் குடியரசில் இருந்து இந்தியா, வியத்நாம் மற்றும் இந்தோனேஷியா போன்ற வணிக நட்பு மற்றும் வெளிப்படையான பொருளாதாரங்களுக்கு தங்கள் வணிகங்களை மாற்றுகின்றன. இது நிச்சயமாக இந்தியாவுக்கு சாதகமாக இருக்கும்.
வேலை வாய்ப்புகள்
பிக்கி-நாஸ்காம், இ.ஓய் ஆகியவை இணைந்து உருவாக்கியுள்ள எதிர்கால வேலைகள் ஆராய்ச்சியின்படி 2022ஆம் ஆண்டு இறுதிக்குள் 37 சதவீதம் இந்திய பணியாளர்கள் புதிய வேலைவாய்ப்புகளில் பணியமர்த்தப்படுவர்.
தரவு பகுப்பாய்வு (டேட்டா அனலிசிஸ்) துறையும் வேகமாக வளர்ந்து வருவதுடன் அதிகமாக வேலை வாய்ப்புகளையும் அளிக்கிறது. தரவு அறிவியல் மற்றும் தரவு பகுப்பாய்வை கற்றுக்கொள்வது மட்டுமின்றி, அதில் மென்பொருள் திட்டத்தை உருவாக்க மாணவர்கள் பைத்தோன் என்கிற மென்பொருள் மொழியை கற்று தேர்ச்சி பெற வேண்டும்.
தரவுகளை கூட்டமைப்புடன் சேமித்து உபயோகிக்க தரவு தளம் (டேட்டா பேஸ்) பற்றி தெரிந்திருக்க வேண்டும். இதற்கு ஸ்டரக்சுரல் கொரி லாங்குவேஜ் (எஸ்.க்யூ.எஸ்) என்ற தரவுதள மொழி தெரிந்திருக்க வேண்டும். குறைந்தபட்சம் ஒரு நிரலாக்க மொழி (புரோகிராமிங் லாங்குவேஜ்) தெரிந்திருக்க வேண்டும். ஆர்., பைத்தோன், மட்லாப், டென்சார்ப்ளோ, ஜூலியா, ஸ்காலா, எஸ்.க்யூ.எல் ஆகிய கற்றலை கருத்தில்கொள்ள வேண்டிய சில மொழிகளாகும்.
கட்டமைப்புகள் மற்றும் கருவிகள் (டூல்ஸ்) பற்றி அறிந்திருக்க வேண்டும். புள்ளி விவரங்களை புரிந்து கொள்ள கூடியவராக இருக்க வேண்டும். இயந்திர கற்றல் திறன் வேண்டும். டேட்டா ராங்க்கிளிங், டேட்டா விஷூவலைஷேசன் பற்றி தொிந்துகொள்ள வேண்டும்.
கணினி துறை தவிர வேறு துறைகளில் படித்தவர்களும் தேவையான மென்பொருள் மொழி பயின்று மென்பொருள் நிறுவனங்களில் பணியில் சேர முடியும். இணையதளத்தில் கட்டணமில்லா வகுப்புகள் மற்றும் கட்டணத்துடன் சான்றிதழ் தரும் வகுப்புகள் பல உள்ளன.
தரவு விஞ்ஞானியாக உங்களின் பொறுப்பு என்ன என்பதை புரிந்துகொள்ள வேண்டும். தரவுகளை கையாளுவதில் மற்றும் பராமரிப்பு என்பது ஒரு தரவு விஞ்ஞானியின் வெளிப்படையான மற்றும் முக்கியமான கடமைகளில் ஒன்று. கொடுக்கப்பட்ட தரவு தொகுப்பு பைப் (டேட்டோ செட்) பார்த்து கணிப்புகளை செய்ய முடிவது ஒரு தரவு விஞ்ஞானியாக இருப்பதன் முழுப் பொறுப்பாகும்.
தரவு அறிவியலில் பணிபுரிபவர், இயந்திர கற்றல், புள்ளியியல் மாதரியாக்கம் மற்றும் செயற்கை நுண்ணறிவு போன்ற நுட்பங்களைப் பயன்படுத்துதல், கண்பிடிப்பு செயல்முறையைச் சரியாகத் தொடங்க சரியான கேள்விகளை கேட்பது, சரியான முடிவுகளை பெற்று, தொழில்ரீதியாக அவற்றை வழங்குவதை போன்றவற்றை தெரிந்து வைத்திருக்க வேண்டும். தரவு அறிவியல் மற்றும் தரவு பகுப்பாய்வு கற்றவர்களுக்கு குறைந்த ஆண்டுக்கு ரூ.6 லட்சம் தொடக்க ஊதியமாக கிடைக்கும். ஒவ்வொருவரது திறமைக்கு ஏற்ப ஆண்டுக்கு ரூ.60 லட்சம் மற்றும் அதற்கும் அதிகமான வருமானம் கிடைக்கிறது.
இளங்கலை படிப்பு, முதுகலை படிப்பு
இந்தியாவில் 130க்கும் அதிகமான செயற்கை நுண்ணறிவு படிப்புகளை தனியார் மற்றும் அரசு கல்லூரிகள் வழங்குகின்றன. மற்ற படிப்புகளை போன்று செயற்கை நுண்ணறிவு படிப்புகளும் இளங்கலை, முதுகலை மற்றும் பிஎச்டி ஆகிய நிலைகளில் வழங்குகின்றன. மூன்று நிலைகளின் கீழும் பாடத்திட்டத்தை வழங்கும் மிகச்சிறந்த மற்றும் சிறந்த செயற்கை நுண்ணறிவு பொறியியல் கல்லூரிகள் உள்ளன.
இருப்பினும், இந்தியாவில் உள்ள சில கல்லூரிகளில் 10ஆம் வகுப்பு முடித்த பிறகு ஏஐ இன் திட்டங்களை டிப்ளமோ படிப்பாகவும் நடத்தப்படுகிறது.
இந்தியாவில் பொறியியல் கல்வி நிறுவனங்களில் செயற்கை நுண்ணறிவில் பி.டெக் வழங்கப்படுகின்றன. பல்வேறு இந்திய பல்கலைக்கழகங்களும் இதர கல்வி நிறுவனங்களும் நான்கு ஆண்டு கால இளநிலை மற்றும் இரண்டு அல்லது மூன்று ஆண்டு கால முதுநிலை படிப்புகள் வழங்குகின்றன. இவற்றில் முக்கிய படிப்புகள் ஐஐடி ஐதாரபாத், ஐ.ஐ.எஸ்.சி பெங்களுரு, பெட்ரோலியம் மற்றும் எாிசக்தி ஆய்வுகள் பல்கலைக்கழகம், டேராடூன் ஆகிய மத்திய கல்வி நிறுவனங்களாலும், இந்திரபிரஸ்தா தகவல் தொழில்நுட்ப நிறுவனம், டெல்லி போன்ற தனியார் பல்கலைக்கழகங்களாலும் வழங்கப்படுகின்றன.
தமிழ்நாட்டில் அமிர்தா, விஐடி, எஸ்ஆர்எம், சாஸ்த்ரா நிகர்நிலைப் பல்கலைக்கழகம் ஆகியவை ஏஐ-டிஸ் படிப்புகளை வழங்குகின்றன.