You are at the right place to read the latest education news today in Tamil. As well as you can read the latest TRB, TNPSC, sports, job news on our website - TN Education Info.

Zero Discrimination Day in Tamil | உலக பாகுபாடு ஒழிப்பு தினம்

Zero Discrimination Day in Tamil

பாகுபாடு ஒழிப்பதில் உண்மையாகவே அக்கறை காட்டப்படுகிறதா?

உலக அளவில் குறிப்பிட்ட சில தேதிகளில் அடையாள நாட்கள் கடைப்பிடிக்கப்படுகின்றன. சில இலக்குகளுக்காக, நோக்கங்களுக்காக அடையாளப்படுத்தப்பட்ட அந்த நாட்கள் மூலம், உண்மையிலேயே அந்தப் பிரச்சினைகளைத் தீர்ப்பதில் முன்னேற்றங்கள் ஏற்பட்டிருக்கின்றனவா என்று பார்க்க வேண்டியிருக்கிறது. 

பிப்ரவரி 20 உலக சமூகநீதி நாளாகக் கடைப்பிடிக்கப்படுகிறது என்றால், அதன் மூலம் சமூகநீதியை நிலைநாட்டுவதற்கான போராட்டங்களுக்கு இன்னமும் தேவை இருக்கிறது என்பது நினைவூட்டப்படுகிறது. மார்ச் 8 உலகப் பெண்கள் தினமாகக் கடைப்பிடிக்கப்படுவது, பெண்களுக்கு எதிரான பாகுபாடுகள் முடிவுக்கு வரவில்லை என்பதையே உணர்த்துகிறது.

உதாரணத்துக்கு, உலகப் பாகுபாடுகள் ஒழிப்புக்கென்றே அறிவிக்கப்பட்டுள்ள தினம் மார்ச் 1. ஐநா எய்ட்ஸ் விழிப்புணர்வு/கட்டுப்பாடு அமைப்பு (யுனெய்ட்ஸ்) முன்முயற்சியில் 2014-லிருந்து இந்தத் தினம் கடைப்பிடிக்கப்பட்டுவருகிறது. தொடக்கத்தில், எய்ட்ஸ் / எச்ஐவி பாதிப்புள்ளவர்கள் புறக்கணிக்கப்படுவதற்கும் அவர்களின் திறன் வெளிப்பாட்டு வாய்ப்புகள் மறுக்கப்படுவதற்கும் முடிவுகட்டும் இயக்கங்கள், நடவடிக்கைகள் ஆகியவைதான் இந்த தினத்தின் இலக்குகளாக அறிவிக்கப்பட்டிருந்தன. தற்போது, எல்லா வகையிலும் உலக மனித சமுதாயத்தில் தொடர்கிற பாகுபாடுகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க அறைகூவல் விடுக்கும் நாளாகவும் இது முன்வைக்கப்படுகிறது.

“எவரொருவருக்கும் வயது, பாலினம், பாலின அடையாளம், பாலியல் தேர்வு, உடல்சார் இயலாமை, இனம், இனக்குழுத் தன்மை, மொழி, உடல்நல நிலை (எச்ஐவி உட்பட), புவியியல் இடம், பொருளாதார நிலை அல்லது புலம் பெயர் நிலைமை மற்றும் வேறு காரணங்களுக்காக எப்போதும் பாகுபாடு காட்டப்படக் கூடாது. கெடுவாய்ப்பாக நியாயமான சமத்துவமான உலகத்தை உருவாக்கும் முயற்சிகளுக்குக் குழிபறிப்பதாகப் பாகுபாடு இன்னமும் தொடர்கிறது. மனிதர்கள் பலரும் அவர்கள் யார் அல்லது அவர்கள் என்ன செய்கிறார்கள் என்ற அடிப்படையில் நாள்தோறும் பாகுபாடுகளை எதிர்கொள்கிறார்கள்” என்று இந்த ஆண்டுக்கான பிரகடனத்தில் யுனெய்ட்ஸ் கூறியிருக்கிறது.

என்ன நடக்கிறது?

எல்லாம் அமைதியாக, நல்லபடியாக, சுமுகமாகப் போய்க்கொண்டிருக்கிறது என்று நம்புமாறு பொருளாதார வேட்டை உலகமயச் சூத்திரங்களும், மதவாத இனவாத அரசியல் நியதிகளும் கட்டாயப்படுத்துகின்றன. அந்தப் போலித்தனமான அமைதியைக் கலைக்க குரல் எழுப்பப்பட்டாக வேண்டும். ஆனால், எந்த அளவுக்கு இரைச்சல் எழுந்தது? ஆங்காங்கே சில கருத்தரங்குகள் நடந்தன. சில தன்னார்வ அமைப்புகள் சார்பில் அனுமதிக்கப்பட்ட இடங்களில், அளவு நிர்ணயிக்கப்பட்ட தொலைவுகளுக்கு அடையாள ஊர்வலங்கள் நடத்தப்பட்டன. ஆனால், அரசியல் – சமூக இயக்கங்களின் பேரிரைச்சலாக அது ஒலிக்கவில்லை.

இந்தியாவைப் பொறுத்தவரையில் சாதி, ஆணாதிக்கம் எனும் இரண்டு விஷயங்கள்தான் சமுதாயத்தின் முக்கியக் கண்ணிகளாக இருந்தன; இருந்துவருகின்றன. இந்தியச் சமுதாயத்தின் முன்னேற்றம் தடைபடுவதற்கு இது மிக முக்கியமான காரணம். ஒப்பீட்டளவில் முன்பிருந்ததை விடவும் முன்னேற்றங்கள் இன்று ஏற்பட்டுள்ளன என்றால் இவற்றுக்கு எதிராகத் தொடர்ந்து நடத்தப்பட்ட போராட்டங்கள்தான் காரணம்.

குரூரமான பாகுபாடுகள்

உண்மையில் உலகம் முழுவதும் பல தரப்பினர் மீது கடுமையான பாகுபாடுகள் நிகழ்த்தப்படுகின்றன. இந்தியாவில் இது இன்னும் கொடூரமானது. மனித மலத்தை அப்புறப்படுத்தும் கடமை குறிப்பிட்ட சாதிப் பிரிவினருக்கு என்ற வேலைப்பிரிவினை பெரும் தலைக்குனிவு அல்லவா? தனிமைப்படுத்தப்பட்ட குடியிருப்புகளிலேயே வசிக்கும் நிலைக்குத் தள்ளப்பட்ட ஒடுக்கப்பட்ட சமூகத்தினருக்குப் பாதுகாப்பான குடிநீர் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதா? குடிநீர் எடுத்துவரும் நிர்ப்பந்தத்துக்கு ஆளாகும் தலித் பெண் குழந்தைகள் பாதியிலேயே பள்ளியிலிருந்து நிற்க வேண்டிய சூழல். கல்வி மறுக்கப்பட்டவர்களாக வளரும் தலைமுறைகள் எப்படிச் சுகாதாரம் பற்றிய விழிப்புணர்வைப் பெறுவார்கள்?

 வாழ்வாதாரத்துக்கே பெரும் சிரமத்தை எதிர்கொண்டிருக்கும் ஏழைகள், ஒடுக்கப்பட்ட மக்கள் பொது இடங்களில் மோசமாக நடத்தப்படுவதைப் பார்த்திருப்போம். அரசு மருத்துவமனைகளிலேயேகூட, “சுத்தமாகவே இருக்கத் தெரியாதா?” என்று இவர்களைக் கடிந்துகொள்வது, முறையான சிகிச்சையின்மை போன்றவை நிகழ்கின்றன. சுகாதாரத் துறை அலுவலர்களில் சிலர் ஆய்வுக்காகக் குடிசைப் பகுதிகளுக்கு சென்றுவரத் தயங்குகிறார்கள் என்றால் இந்தப் பிரச்சினையின் தீவிரத்தைப் புரிந்துகொள்ளலாம்.

 மலம் சுமக்கும் பணியைச் செய்யும் பெண்களின் ஆரோக்கிய நிலை பற்றி நாம் கவனம்கொள்கிறோமா? மலவாடையோடு வீட்டில் புழங்கும் அந்தப் பெண்களுக்குக் கருச்சிதைவு ஏற்படுவதும், பிறந்த பின் சிசு மரணமடைவதும் அடிக்கடி நடப்பவை. இவையெல்லாம் சாதி அடிப்படையில் உடல் நல உரிமை மறுக்கப்படுவதற்கான சில சான்றுகள்.

விழிப்புணர்வு தொடர வேண்டும்

இதே போன்ற பாகுபாடுகளைச் சிறுபான்மை மதங்களைச் சேர்ந்த, குறிப்பிட்ட சமூகப் பெண்களும், சமூக அடுக்கில் பின்னுக்குத்தள்ளப்பட்ட பிற பிரிவுகளின் பெண்களும் எதிர்கொள்கிறார்கள். வீடுகளில் பிரசவம் பார்க்கப்படுவதற்கு எதிரான விழிப்புணர்வை ஏற்படுத்தப் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. ஆனால் பல்வேறு பாகுபாடுகள் காரணமாகப் பல பெண்கள் மருத்துவமனைகளிலிருந்து வெளியேறி வீடுகளிலேயே பாதுகாப்பற்ற முறையில் பிரசவத்தை எதிர்கொள்ள வேண்டிய கட்டாயத்துக்கு ஆளாகிறார்கள். 

பெண் குழந்தைகளை விடப் பையன்களுக்கு ஊட்டச்சத்து உணவு கூடுதலாக ஊட்டப்படுவது நம் நாட்டில் இன்னமும் தொடர்கிற கொடுமை. இந்நிலையில், ‘ஏன் 70% பெண்கள் ரத்த சோகையோடு அல்லாடுகிறார்கள்?’ என்று ஒன்றுமே புரியாததுபோல் எத்தனை நாட்களுக்குக் கேட்டுக்கொண்டிருப்போம்?

 வீடுகளிலும் வெளியிலும் மாற்றுத்திறனாளிகள் சந்திக்கிற உடல்சார்ந்த பாகுபாடுகள் மனிதநேயத்துக்கே அவமானம். அதேபோல், வயது மூப்பின் காரணமாக ஏற்படும் இயலாமைகளைப் புரிந்துகொள்ளாமல் திட்டுவது என்று ஒழிக்கப்பட வேண்டிய பாகுபாடுகளின் பட்டியல் மிகப் பெரியது. உதவி தேவைப்படும் நிலையில் இருப்பவர்கள் நம்மாலான உதவிகளைச் செய்யலாம். ஒடுக்குமுறைகளுக்கும் புறக்கணிப்புகளுக்கும் ஆளாகியிருப்பவர்களுக்கு உதவுவது அவசியம். பாகுபாடுகளிலிருந்து அவர்களை மீட்டெடுக்கத் தனியே ஒரு ‘நல்ல நாள்’ பார்க்கத் தேவையில்லை. சக மனிதர்களை அக்கறையுடன் அணுகுவதை அன்றாடம் நடைமுறைப்படுத்திகொண்டால் எல்லா நாளும் அடையாள நாள்தான்!