World Science Day in Tamil | அமைதி மற்றும் வளர்ச்சிக்கான உலக அறிவியல் தினம்
World Science Day in Tamil
ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 10 ஆம் தேதி அன்று "அமைதி மற்றும் வளர்ச்சிக்கான உலக அறிவியல் நாள் (WORLD SCIENCE DAY FOR PEACE AND DEVELOPMENT)" ஐக்கிய நாடுகள் சபையின் UNESCO நிறுவனத்தால் கடைபிடிக்கப்படுகிறது. அமைதியான, வாழ்வில், சிந்தனையில் மேம்பாடு மிக்க உலகை உருவாக்குவதில் அறிவியலின் பங்களிப்பு குறித்த விழிப்புணர்வை உருவாக்குவதே இந்த நாளின் நோக்கம். உலகின் வளர்ச்சிக்கும் அதேசமயம் அமைதிக்கும் அறிவியலை எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என்பது குறித்த விழிப்புணர்வை உருவாக்க இந்நாளில் முயற்சி மேற்கொள்ள வேண்டும் என்று UNESCO கூறுகிறது. வளர்ச்சியோடு அமைதியை ஏற்படுத்த வேண்டிய தேவை ஏன் வந்தது? ஏனெனில் மனிதகுலத்துக்கும் , இந்த உலகிற்கும் நன்மைகள் மட்டுமின்றி தீமைகள் நிகழவும் அறிவியல் , தொழில்நுட்ப வளர்ச்சி காரணமாக மாறியுள்ளது வருத்தத்தை அளிக்கிறது. கொடும் நோய்களில் இருந்து மனிதர்களை காப்பாற்றுவதற்கான மருத்துவத்தை கொடுத்த அறிவியல் தான் மனிதர்களை கொத்து கொத்தாய் கொல்வதற்கு வழி செய்யும் அணு ஆயுதங்களை தயாரிக்கவும் காரணமாக இருந்தது.
எனவே அறிவியலின் பிரச்சனைகள், போதாமைகள் அதனால் நிகழ்ந்த தீமைகள் பற்றி பேச வேண்டிய தேவை எழுகிறது. இது அறிவியலின் மகத்துவத்தை மறுதலிப்பதற்காக அல்ல. மாறாக மனிதகுலத்தின் மகத்தான அறிவு வளர்ச்சியின் விளைவான அறிவியல், மனிதர்களையும் , உலகையும் இன்னும் மேம்பட்டதாக ஆக்க வேண்டும் என்பதற்கான முயற்சியே. அந்த முயற்சியை அழுத்தமாக மக்கள் மனதில் கொண்டு செல்லும் பணியை விஞ்ஞானிகள், அறிவியல் ஆர்வலர்கள், அறிவியல் தொடர்பாளர்கள் மேற்கொள்ள வேண்டும்.
அறிவியல் வளர்ச்சி இன்றைக்கு விண்ணைத்தாண்டி சென்று கொண்டு இருப்பது கண்கூடு. வாழ்வின் அனைத்து அம்சங்களையும் அறிவியலும், தொழில்நுட்பமும் நொடிக்கு நொடி மாற்றி கொண்டு வருகிறதென்றால் அது மிகையில்லை. ஒரு காலத்தில் விளக்கேற்ற எண்ணையை பயன்படுத்தினோம் . அதற்க்காக ஒரு எண்ணெயை ஒதுக்கி விளக்கெண்ணெய் என்று பெயரிட்டு பயன்படுத்தினோம் . இன்று எண்ணெயை பயன்படுத்தி விளக்கு எரித்து வெளிச்சம் தேடாமல் மின்விளக்கு கொண்டு பகல் போல வெளிச்சம் உண்டாக்கி வாழுகிறது மனிதகுலம் . சில ஆண்டுகளுக்கு முன்பு கற்பனை செய்து கூட பார்க்க முடியாத பல விசயங்கள் இன்று அறிவியலின் துணையால் நனவாகி வருகின்றன. இன்று உலகின் ஒரு மூலையில் இருந்து இன்னொரு மூலையில் உள்ள ஒருவரிடம் நொடியில் அலைபேசி மூலம் நேரிலே பேசுவது, பார்ப்பது போன்று உரையாட முடியும்.
சில மணி நேரங்களில் நாடு விட்டு நாடு பறந்து செல்வது எளிதாகிவிட்டது . ஏன் அதையும் தாண்டி ஒரு கோளில் இருந்து மறு கோளுக்கு சென்று திரும்புவது வரை விஞ்ஞான வளர்ச்சி உருவாகி உள்ளது. உழவுக்கும் , தொழிலுக்கும் அறிவியல் துணை புரிகின்றது . நிலத்தை உழுவதற்கும் , உரத்தை இடுவதற்கும் நவீன கருவிகள் துணை புரிகிறது. இன்று தொழில்நுட்ப வல்லுநர்கள் இணையம் மூலம் மனித வாழ்வின் எல்லைகளை விரிவு படுத்திக் கொண்டே இருக்கின்றனர். உள்ளங்கையில் உலகம் என்பதை இணையம் உண்மையாக்கிவிட்டது . மனித வாழ்வின் எல்லா தேவைகளையும் அறிவியல் நிறைவு செய்ய முயற்சிக்கிறது. அண்டவெளி என்றும், எல்லையற்றதென்றும் சொல்லப்படுகிற ஆகாயப்பரப்பையும் மனிதன் தனது ஆக்கிரமிப்பில் வைக்க முயற்சி செய்ய ஆரம்பித்துவிட்டான்.
அறிவியல் மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சி இந்த இருந்தபோதிலும் உலகம் இரண்டு பெரும் போர்களை சந்தித்து இருக்கிறது. இரண்டு பெரும் போர்களிலும் அப்பாவி மக்கள் தான் லட்சக்கணக்கில் மாண்டு போனார்கள் . தாவரங்கள் அழிந்தன. விலங்குகள் கருகின. 1945 ஆகஸ்டு 6 அன்று ஜப்பானிய நகரமான ஹிரோசிமா மீதும் ஆகஸ்டு 9 அன்று நாகசாகி நகரம் மீதும் அமெரிக்க ராணுவம் அணு குண்டுகளை வீசியது. நொடிக்கும் குறைவான நேரத்துக்குள் ஒரு மின்னல் போல வெடித்து சிதறியது. ஆயிரம் சூரியன்கள் ஒன்றாக வெடித்து சிதறியது போல நீல நிற வெளிச்சம் எங்கும் பாய்ந்தது.இந்த அணு ஆயுத போரால் இந்த இரு நகரங்களும் வெந்து சாம்பலாகியது . ஆனால் இன்று வரை உலகப்போர்களில் இருந்து நாடுகள் பாடம் கற்றுக்கொண்டதாக தெரியவில்லை. அதன் தொடர்ச்சியே இன்றும் நடக்கும் உக்ரைன்- ரஷ்ய போரும் , இஸ்ரேல்- பாலஸ்தீன போரும். ஆயுத வியாபாரிகளின் விருப்பத்திற்கு போர் அப்பாவி மக்கள் மீது ஏவப்படுவது பேரவலம்.
அணு ஒரு ஆற்றல் மிக்க அற்புத சக்தி. அதை இன்று மனிதகுலத்தை அழிக்கும் அநாகரீக கும்பல் பயன்படுத்துகிறது . மனிதநேயத்துடன் ஆக்கத்திற்கு அதை பயன்படுத்தினால் இந்த உலகமே பிரகாசமாக இருக்கும். பசி, பிணி அகலும்.அனைவருக்கும் உணவு கிடைக்க செய்யலாம்.வேலைவாய்ப்பை உருவாக்கலாம். துன்ப துயரமற்ற வாழ்வை உறுதி செய்யலாம்.
உலகின் மாபெரும் விஞ்ஞானி ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் அவர்களிடம் அவரது நண்பர் ஒருவர் "மூன்றாவது உலகப்போர் என்று வந்தால் என்ன ஆயுதம் பயன்படுத்தப்படும் ? " என்று கேட்டார் . அதற்கு அவர் " மூன்றாவது உலகப்போர் பற்றி எனக்கு தெரியாது. ஆனால் நான்காவது உலகப்போரில் கல்லும் , வில்லும் பயன்படுத்தப்படும் என்று எச்சரித்தார் . ஐன்ஸ்டீன் அவர்களின் எச்சரிக்கை யார் காதிலும் விழுந்ததாக தெரியவில்லை. உலக நாடுகள் மனம் போன போக்கில் மத, இன உணர்வுகளை மையமாக வைத்து அடிப்படைவாத சிந்தனை கொண்ட தலைவர்களால் ஆளப்படுகிறது . இதன் விளைவு மனித குல அமைதியின்மை. இவர்கள் அறிவியல் மனப்பான்மையை அற்றவர்களாக, அன்பையும், அமைதியையும், கருணையையும் மறந்தவர்களாக இருக்கிறார்கள். வெள்ளைப்புறாக்களை பறக்க விடுவதும் அதை தொடர்ந்து சென்று வேட்டையாடுவதும் உலகின் வழக்கமாக மாறி பூமிப்பந்தை சிதைக்கிறோம். இந்த நிலை மாற வேண்டும். அறிவியல் மனப்பான்மை கொண்ட அடிப்படைவாத சிந்தனைகள் அற்ற மனித குலத்தை உருவாக்க உலக அறிவியல் தினத்தில் சபதம் மேற்கோள்வோம். இந்த ஆண்டிற்கான கருப் பொருளான "BUILDING TRUST IN SCIENCE அறிவியலின் மீதான நம்பிக்கையை வளர்த்தெடுப்போம் " என்பதை வெற்றி பெற செய்வோம்.
கட்டுரையாளர்:
பேரா. க. லெனின்பாரதி
அறிவியல் தொடர்பாளர், இயற்பியல் பேராசிரியர்
கோவை
leninbarathiphysics@gmail.com
8523909178