You are at the right place to read the latest education news today in Tamil. As well as you can read the latest TRB, TNPSC, sports, job news on our website - TN Education Info.

ஆசிரியர் தினம் 2024 | ஆசிரியர் தினம் ஏன் கொண்டாடப்படுகிறது

ஆசிரியர் தினம் 2024 | ஆசிரியர் தினம் ஏன் கொண்டாடப்படுகிறது

கடவுள் குருவும் ஒருவர்தான். நம் மனத்தைக் கல்வியிடம் ஈடுபடுத்துவதற்கு ஆசிரியரிடம் இருக்க வேண்டிய இரண்டு முக்கிய சக்திகள் புதியதை அறிந்ததாக செய்வதும், அறிந்ததை புதியதாகச் செய்வதுமாகும். அப்படிப்பட்ட தகுதியைப் பெற்றிருந்தவர்தான் டாக்டர் இராதகிருஷ்ணன் அவர்கள். குடியரசு தலைவராவதற்கு முன்னர், சிறந்த ஆசிரியராக பணியாற்றியதால் இவரது பிறந்த நாளை ஆசிரியர் தினமாக ஆண்டுதோறும் செப்டம்பர் 5ம் தேதி கொண்டாடப்பட்டு வருகிறது. 

என் வாழ்க்கைக்கு நான் என் தந்தைக்கு கடன்பட்டிருக்கிறேன். ஆனால், என் நல்ல வாழ்க்கைக்கு எனது ஆசிரியருக்கு கடன்பட்டிருக்கிறேன், என்றார் மாவீரன் அலெக்சாண்டர். ஆசிரியர் பணி அத்துனை சிறப்பு வாய்ந்த பணி. அதனால்தான், மாதா, பிதா, குரு, தெய்வம் என்ற உன்னத கோட்பாடு தொன்று தொட்டு, நடைமுறையில் இருந்து வருகிறது. 

சமூக மறுமலர்ச்சிக்கு அடித்தளம் அமைக்கும் பணியில் இருப்பவர்களில் ஆசிரியரே முதலிடம் வகிக்கிறார். இன்றைய குழந்தைகளை நாளை தலைவர்களாக உருவாக்கும் சிறந்த பணியே ஆசிரியர் பணி என்பதை அனைவரும் உணர்ந்துகொண்டிருக்கிறார்கள்.

நல்ல கலாச்சாரம் உருவாக்கவும், பண்பாடு காக்கவும் கற்றுத்தரும் பெரும்பணியில் ஆசிரியர்கள் தங்களை அர்பணித்து வருகிறார்கள். ஆசிரியர் பணி அறப்பணி, அதற்கே உன்னை அர்ப்பணி, பள்ளிக்கூடம் கட்டாத நாட்டில் சிறைச்சாலை கட்ட வேண்டி வரும், ஒரு நாட்டின் தலைவிதி வகுப்பறையில் தீர்மானிக்கப்படுகிறது, போன்ற நன்மொழிகள் ஆசிரியர்களின் சிறப்பை உணா்த்துகிறது. 

ஆசிரியர் தினவிழா இந்தியாவில் உள்ள அனைத்து கல்வி நிறுவனங்களிலும் கொண்டாட, அரசும் ஆண்டுக்கு ஒருமுறை சிறந்த நல்லாசிரியர்களை தெரிவு செய்து அவர்களுக்கு சான்றிதழும், ஊக்கத்தொகையும் அளித்து பாராட்டி வருகிறது. அசிரியர்கள் ஆற்ற வேண்டிய கடமைகளை விழாவில் எடுத்துக்கூறுவதுடன், வாழ்த்தையும் அளித்து சிறப்பிக்கும் நாள் ஆசிரியர் நாள் விழாவாகும். 

ஒரு மாணவன் தான் உயர்ந்து ஆளுாகும்போது, தன்னை அறிவு சான்ற ஆன்றோனாக ஆக்கியது யார், என்று சிந்திக்கும்போது அவனது மனதில் உடனே தோன்றுவது ஆசிரியர்தான். ஆசிரியர் தனக்கு கற்பித்த முறையை விடவும், அவரது சீரிய சிந்தனையையும் பொது அறிவை புகட்டிய கால கட்டத்தையும் நினைவில் நிறுத்துகிறான்.

சரித்திரம் புகழ்ந்திடும் சான்றோர்களை இலக்கியப் புகழ்பெற்ற பேராசிரியர்களை, மாவீரர்களை, அகிலம் போற்றும் அரசியல் வல்லுநர்களை, பொருளாதார நிபுணர்களை உருவாக்கிய ஆசிரியர் சமுதாயம்தான். வியத்தகு விஞ்ஞானிகள், ஆராய்ச்சியாளர்கள் உருவாக ஆசிாியர்களே அடித்தளம். உலகம்போற்றும் உன்னத தொண்டில் தன்னையே தந்த அன்னை தெரேசா ஒரு ஆசிரியையாக இருந்தவர்தான். 

இன்று அனைவருக்கும் கல்வி அளிக்கும் சூழல் உருவாகி வருகிறது. நல்ல நிலத்தில் விளையும் தானியங்கள் நமக்கு எவ்வாறெல்லாம் உடல் நலத்திற்கு ஆரோக்கியம் விளைவிக்கிறதோ, அதைபால, தேர்ந்த பள்ளி, சிறப்பான ஆசிரியர்களால் நல்ல மாணவர்கள் உருவாகிறார்கள் என்பதை ஒவ்வொரு பெற்றோரும் கவனத்தில் கொண்டு அவர்களுக்கு நற்கல்வி அளித்திட வேண்டும்.