இந்திய மாணவர்கள் மருத்துவ படிப்பு படிக்க வெளிநாடு செல்வது ஏன்?
உக்ரைன் – ரஷ்யா இடையேயிலான போரை தொடர்ந்து, அனைவரிடமும் இந்திய மாணவர்கள் மருத்துவ படிப்பு படிக்க வெளிநாடுகள் செல்வது ஏன் என்று கேள்வி எழுந்துள்ளது.
மருத்துவம் படிக்க ஏன் இந்தியாவைச் சேர்ந்த மாணவர்கள் உக்ரைன் நாட்டை தேர்வு செய்ய வேண்டும் என்பது போருக்கு மத்தியில் எழுப்பப்படும் முக்கிய கேள்வியாக இருக்கிறது. இதற்கான காரணங்களை விரிவாக பார்க்கலாம்
ஆண்டுதோறும் 20,000 முதல் 30,000 பேர் வரை வெளிநாடுகளில் மருத்துவம் படிக்கச் செல்கிறார்கள். உக்ரைனில் மருத்துவ படிப்பவர்களில் இந்திய மாணவர்கள் 25 சதவீதம் பேர். 40க்கும் அதிகமான மருத்துவ கல்லூரிகளில் உள்ள நிலையில் முக்கியமான 7 கல்லூரிகளில் இந்தியர்கள் அதிகம் படிக்கின்றனர். உக்ரைன் மட்டுமின்றி சீனா, ரஷ்யா பிலிப்பைன்ஸ் உள்ளிட்ட பல்வேறு நாடுகளுக்கும் சென்று இந்திய மாணவர்கள் மருத்துவம் படிக்கிறார்கள்.
இந்தியாவில் நீட் தேர்வில் 7 லட்சம் முதல் 8 லட்சம் மாணவர்கள் வரை தேர்ச்சி பெறுகிறார்கள். ஆனால் இந்தியாவில் சுமார் 90,000 மருத்துவ இடங்கள் மட்டுமே இருக்கின்றன. நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களாக சுமார் 20 ஆயிரம் இடங்களில் கிடைக்கின்றன. எஞ்சிய லட்சக்கணக்கான மாணவர்கள் தங்கள் மருத்துவக் கனவை கைவிட முடியாமல் வெளிநாட்டில் மருத்துவப் படிப்பை படிக்கும் முடிவை எடுக்கிறார்கள். காரணம், அரசு மருத்துவக்கல்லூரிகள் தவிர்த்து தனியார் மருத்துவ கல்லூரிகளில் மருத்துவம் படித்து முடிக்க சுமார் 30 லட்சம் ரூபாய் முதல் 70 லட்சம் ரூபாய் வரை செலவாகிறது.
இதை சீனா, ரஷ்யா, உக்ரைன் ஆகிய நாடுகளில் பிரபலமான மருத்துவ பல்கலைக்கழகங்களில் ஆறாண்டுகள் மருத்துவம் படித்து முடிக்க 20 முதல் 35 லட்சம் ரூபாய் செலவாகிறது. பிரபலமற்ற மருத்துவ கல்லூரிகளில் 18 முதல் 25 லட்சத்திற்கும் ஆறாண்டு படிப்பை முடித்து விடலாம்.
சீனாவில் 11 ஒரு லட்சம் முதல் 13 லட்சம் ரூபாய்க்குள் மருத்துவம் படித்து முடித்து விடலாம் என்பதே பல இந்திய மாணவர்கள் வெளிநாடுகளை தேர்ந்தெடுக்க முக்கிய காரணமாக இருக்கிறது. வெளிநாடுகளில் மருத்துவம் படித்து முடித்தாலும் இந்தியாவில் மருத்துவராக உரிமம் பெற தகுதி தேர்வை எழுத வேண்டும். மிகக் கடினமான இந்த தேர்வில் தேர்ச்சி சதவீதம் ஆண்டுக்கு 15% முதல் 20% வரை இருக்கிறது.
ஆயினும் வெளிநாடுகளில் மருத்துவம் படிப்பவர்கள் எண்ணிக்கை அதிகமாகவே இருக்கிறது. 2016 ஆம் ஆண்டுக்கு பிறகு வெளிநாடுகளில் மருத்துவம் படிக்கவும், நீட் தேர்வில் தேர்ச்சி பெறுவது கட்டாயம் ஆகியிருக்கிறது. ஆயினும், தேர்ச்சி பெற்றாலே வெளிநாடுகளில் மருத்துவம் படிக்க முடியும் என்பது ஒரு சாதகமான அம்சமாக பார்க்கப்படுகிறது. உக்ரைனில் பயிற்று மொழி ஆங்கிலம் என்பது இந்திய மருத்துவப் படிப்பை வைத்து இருக்கும் பாடத்திட்டமும் மாணவர்களை தேர்வு செய்ய காரணமாக இருக்கிறது. ஆண்டுதோறும் 4 ஆயிரம் பேர் உக்ரைனில் மருத்துவம் படித்துவிட்டு தாய் நாடு திரும்புகிறார்கள். போர் என்ற பேரழிவு தற்போது மருத்துவம் படிக்கும் எண்ணற்ற மாணவர்களின் நிலையை கேள்விக்குறியாக்கி இருக்கிறது.