இந்திய தொழில்துறையில் பெரும் சாம்ராஜ்யத்தை கட்டி எழுப்பியவர் தொழிலதிபர் ரத்தன் டாடா, 3700 கோடி ரூபாய்க்கு அதிபதியாக இருந்த போதும் பொதுமக்களின் அன்பைப் பெற்ற மனிதநேய பண்பாளரை பற்றிய சிறு தொகுப்பை தற்போது பார்க்கலாம்.
உங்கள் மீது யாரேனும் கற்களை வீசி எறிந்தால், அதை வைத்து ஒரு கட்டடத்தை எழுப்புங்கள், வாழ்வில் சவால்களை எதிர்கொண்டு போராடும் எவருக்கும் உத்வேகம் அளிக்கும் ரத்தன் டாட்டாவின் இந்த வார்த்தைகளை அவரது வாழ்க்கையையும் சொல்லிவிடும்.1961-ல் டாடா நிறுவனத்தில் ஒரு சாதாரண உதவியாளராகவே தனது பணியை தொடங்கினார் ரத்தன் டாடா. 1991 ஆம் ஆண்டு ஜேஆர்டி டாடா ஓய்வு பெற்றபோது, ரத்தன் டாடாவை, டாட்டா சன்ஸ் என்ற பாரம்பரியமிக்க பெரும் குடும்பத்தின் தலைவராக முன்மொழிந்தார். அப்போது ரத்தன் டாட்டாவை சிவப்பு கம்பளம் விரித்து வரவேற்க, அந்நிறுவனத்தில் அதிகாரம் மையத்தில் இருந்தவர்கள் யாரும் தயாராக இல்லை. ஆனால் அதை துளியும் பொருட்படுத்தாமல் டாட்டா சன்ஸ் குழுமத்தை உலக அளவில் கோலோச்சும் நிறுவனமாக்க உறுதிபூண்டார் ரத்தன் டாடா. அதை செய்தும் காட்டினார்.ஆம், இன்று டாடா குழுமம் கால் பதிக்காத துறைகளை இல்லை என்று சொல்லிவிடும் அளவுக்கு அந்த விருட்சம் எங்கும் கிளை பரப்பி நிற்கிறது. டிசிஎஸ், டைட்டன், தனிஷ்க், பாஸ்ட்ட்ராக் பெஸ்ட்சைட், ஹிமாலயன், பிக் பாஸ்கெ்ட், டாடா நியூ என டாடா நிறுவனங்கள் உலகமெங்கும் விஸ்தரிக்கப்பட்டுள்ளது. தேயிலை நிறுவனமான டெட்லி, இரும்பு துறையில் கோரஸ், ஆட்டோமொபைல் துறையில் ஜாக்குவார், லேண்ட்ரோவர் உள்ளிட்ட பல்வேறு பன்னாட்டு நிறுவனங்களை ரத்தன் டாடாவின் தலைமையின் கீழ் கையகப்படுத்தியது டாட்டா.இதன் மூலம் ஒவ்வொரு துறைகளிலும் டாப் லிஸ்டில் இடம் பெற்றது டாடா நிறுவனம். 1 லட்சம் ரூபாய்க்கு கார் என நடுத்தர வர்க்க மக்களின் கனவை நினைவாக்கியவர் இவர்தான். ரத்தன் டாடா அறிமுகம் செய்த நானோ கார் தான் அப்போது உலகின் விலை குறைந்த கார். ரத்தன் டாட்டாவின் தலைமையில் டாடா நிறுவனம் நூற்றுக்கும் மேற்பட்ட நாடுகளின் கிளை பரப்பி 50 மடங்கு லாபம் குவித்தது.ரத்தன் டாடாவின் நிகர சொத்து மதிப்பு மட்டும் 3 ஆயிரத்து 800 கோடி ரூபாய். தனது வருமானத்தில் பெரும் பகுதியை ஏழை மக்கள், மாற்றுத்திறனாளிகள் குழந்தைகளின் நலத்திட்டங்களுக்காக கொடையாக வழங்கும் வழக்கமுடையவர். கொரோனா நிவாரண பணிகளுக்காக 1500 கோடி வழங்கியது டாடா குழுமம். தனது மனிதநேய செயல்பாடுகளால் பொது மக்களுக்கு பிடித்தமான தொழில் அதிபராகவும் விளங்கியவர். நாட்டின் வளர்ச்சிக்காக ரத்தன் டாடா ஆற்றிய பெரும் பணியை கௌரவிக்கும் விதமாக அவருக்கு பத்மவிபூஷன், பத்மபூஷன் வழங்கி உள்ளது மத்திய அரசு. தனது 10 வயதிலேயே பெற்றோர் விவாகரத்து பெற்றுவிட தனது பாட்டியின் அரவணைப்பில் வளர்ந்தவர் ரத்தன் டாடா. திருமண வாழ்வில் இருந்து தூரம் நின்ற அவர், அவர் நான்கு முறை அந்த முடிவை எடுத்ததாகவும், பின்னர் ஏதேதோ காரணங்களால் அது கைகூடவில்லை என்றும் மனம் திறந்தார். தோற்பது அல்ல முயற்சியை எடுக்காமல் இருப்பது தான் மிகப்பெரிய தோல்வி, சரியான முடிவுகளை எடுப்பதில் நம்பிக்கை கொள்பவன் அல்ல, எடுக்கும் முடிவுகளை சரியாக மாற்றுபவன் நான், என்ற பொன்மொழிகளை கூறியவர் ரத்தன் டாடா.அவர் தனது வாக்கின்படியே வாழ்ந்தும் காட்டினார் என்பதே நிதர்சனம்.