தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் கீழ் ஈரோடு வ.உ.சி விளையாட்டு மைதானத்தில் மாணவிகளுக்கான விடுதி செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில், விடுதியின் ஆண்டு வரவு, செலவு கணக்கு தொடர்பாக அரசு தணிக்கையாளர்கள் கடந்த ஆறு மாதம் முன்பு ஆய்வு செய்தனர்.
விடுதியில் தங்கியிருக்கும் மாணவிகளுக்கு உணவு பொருட்கள் வழங்குவதில் போலி பில்கள் தயாரித்து லட்ச கணக்கில் பணத்தை சுருட்டியது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் கேர் டேக்கர்கள் எனப்படும் பதவியில் பணியாற்றி வந்தவர்களை பணியில் இருந்து நீக்கம் செய்த பிறகும், அவர்களின் பெயரில் கையெழுத்திட்டு சம்பள பணத்தை எடுத்து வந்ததும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த மோசடியில் பெண் ஊழியர் ஒருவர் மற்றும் அலுவலகத்தில் பணியாற்றி வரும் ஒரு பெண் ஊழியர் என இருவருக்கு தொடர்பு இருப்பதும் தெரியவந்துள்ளது. இதையடுத்து இதன் விபரங்கள் சென்னை தலைமை அலுவலகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது. சுமார் ரூ.17 லட்சத்திற்கு இந்த முறைகேடு நடந்திருக்கலாம் என்று தகவல் வெளியாகி உள்ளது. இதுதொடர்பாக, முதன்மை கணக்கு அலுவலர்கள், கமர்ஷியல் மேலாளர் உள்ளிட்ட மூத்த அலுவலர்கள் விளையாட்டு அலுவலகத்திலும், விடுதியிலும் ஆய்வு செய்து விசாரணை நடத்தினர். வருகை பதிவு, ஆவணங்கள், விடுதி வரவு / செலவு கணக்குகள், பில்கள், மாணவிகளின் விபரங்களின் உள்ளிட்ட எடுத்து சென்றுள்ளனர். அதிகாரிகள் சம்மந்தப்பட்ட ஊழியர்கள் மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுக்க திட்டமிட்டுள்ளனர்.