விழுப்புரம் மாவட்டத்தில் நீட் தேர்வு குறித்த பயத்தால், அரசுப்பள்ளியில் பயின்ற மாணவர் ஒருவர் உயிரை முடித்துக்கொண்டிருப்பது பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே உள்ள தாதபுரம் பகுதியை சேர்ந்த இந்துமதி (19) என்ற மாணவி தனது வீட்டில் உயிரை முடித்துக்கொண்டார். அவர் மேல்நிலை தேர்வில் 600க்கு 520 மதிப்பெண்கள் பெற்றிருந்த நிலையில், கடந்தாண்டு நீட் தேர்வில் 350 மதிப்பெண்கள் பெற்றார். ஆனால், மருத்துவம் பயில கல்லூரிகளில் இடம் கிடைக்கவில்லை என்று கூறப்படுகிறது. இந்த நிலையில், இந்தாண்டு அதிக மதிப்பெண் பெற வேண்டும், மருத்துவ படிப்பில் சேர என்ற வேட்கையில் தேர்வுக்கு தயராகிக் கொண்டிருந்தார். இதற்காக, மாணவி புதுச்சேரியில் உள்ள தனியார் பயிற்சி மையத்திலும் பயிற்சி பெற்றுவந்துள்ளார். இருந்தபோதிலும், அதிக மதிப்பெண் பெற முடியுமா என்ற குழப்பம் இருந்து வந்ததாக சொல்லப்படுகிறது. மன அழுத்தத்தால், மார்ச் 1ம் தேதி இரவு அவர், உயிரை முடித்துக்கொண்டார் எனக்கூறப்படுகிறது. இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரிக்கின்றனர். (உயிரை மாய்ப்பது பிரச்சனைக்கு தீர்வாகாது. உயிர் மாய்ப்பது போன்ற எண்ணங்கள் மனதில் எழுந்தால், உடனே 104 உதவி எண், ஸ்நேகாஸ் தற்கொலை தடுப்பு உதவி எண் 044 24640050 என்ற எண்ணிற்கு அழைத்து, தகுந்த மனநல ஆசோசனை பெறலாம்.)