நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே வெண்ணந்தூர் அலவாய்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் நூற்றக்கணக்கான மாணவர்கள் படித்து வந்த நிலையில், தற்போது, 48 பேர் மட்டுமே படிக்கின்றனர். தலைமை ஆசிரியர் மற்றும் 2 ஆசிரியர்களுடன் தற்போது செயல்படுகிறது.
இதில் நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த பிரபாகரன் (57) என்பவர் இடைநிலை ஆசிரியராக பணியாற்றுகிறார். பள்ளி திறப்பின் முதல்நாளான நேற்று முன்தினம் குடிபோதையில் பள்ளிக்கு வந்ததாக கூறப்படுகிறது. வெயிலின் தாக்கம் உச்சம் எட்டியதால், கடும் அசௌகரியத்தை உணர்ந்த ஆசிரியர், பள்ளி வளாகத்தில் உள்ள குடிநீர் குழாயை உடைத்து, அதில் குளித்து ஆனந்தமடைந்தார். சக ஆசிரியர்களிடம் தகராறு செய்துள்ளார். தலைமை ஆசிரியர் அவரை கண்டித்து வீட்டிற்கு அனுப்பிவைத்தார். இதனை அறிந்த பெற்றோர் பள்ளியில் முற்றுகையிட்டு வாக்குவாதம் செய்தனர். அவர் மீது நடவடிக்கை கோரி திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் அதிகாரிகள் ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்த பின்னர், அவர்கள் அங்கிருந்து கலைந்துசென்றனர். கல்வி அதிகாரிகள் விசாரிக்கின்றனர்.