தமிழ்நாட்டில் உள்ள அரசு பள்ளிகளில் உள்ள நவீன கணினி ஆய்வகத்தில் மத்திய அரசின் விதிமுறைகளை பின்பற்றாமல் இல்லம் தேடி கல்வியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாகவும், இது மாணவர்களுக்கு கணினி கற்பித்தல் பணியில் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளதாகவும், தமிழ்நாடு பி.எட் கணினி அறிவியல் வேலையில்லா பட்டதாரிகள் சங்கம் குற்றம் சாட்டியுள்ளது.
அதன் மாநில துணைதலைவர் ஏ ஆரோக்கியசாமி கூறியதாவது, மத்திய அரசின் நிதி உதவியுடன் தமிழ்நாட்டில் 14 ஆயிரம் நடுநிலை, உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளில் நவீன கணினி ஆய்வகங்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஒரு ஆய்வகத்திற்கு ரூ.6.40 லட்சம், கணினி பயிற்றுநரை நியமிக்க ஒரு பள்ளிக்கு மதிப்பூதியமாக ரூ 1.80 லட்சம் மத்திய அரசு வழங்குகிறது. இந்த நிதி மூலம் தமிழ்நாடு அரசு மாநில பாடநூல் கழகத்தின் மூலம் கணினி அறிவியல் பாடத்திற்கு என்று பாடத்திட்டம் உருவாக்கி பாடபுத்தகம் தயார் செய்து மாணவர்களுக்கு வழங்கி, அதற்கான செய்முறை தேர்வு நடத்த வேண்டும். ஆனால், தமிழக அரசு பின்பற்றவில்லை. கணினி ஆய்வகத்தில் கணினி பாடம் கற்பிக்காமல், எமிஸ் பணிகளின் கூடாரமாகவே மாறியுள்ளது. 2008-2009ஆம் ஆண்டு உச்சநீதிமன்றம் கணினி பயிற்றுவிக்கும் பணிக்கு கணினி அறிவியல் பி.எட் படித்தவர்களையே நியமிக்க வேண்டும் என உத்தரவிட்டது. இதனை பின்பற்றாமல், முறையான கல்வித்தகுதி இல்லாத இல்லம் தேடி தன்னார்வலர்கள் நியமித்துள்ளனர். மத்திய அரசின் நிதியை பெறுவதற்காக உயர்நிலைப்பள்ளிகளில் பணிபுரியும் ஆய்வக உதவியாளர்களை கணினி ஆய்வகத்தில் பணிபுரிய கட்டாயப்படுத்துகின்றனர். இதனால், 60 ஆயிரம் கணினி அறிவியல் பி.எட் பட்டதாரிகள் வேலை வாய்ப்பு பறிக்கப்பட்டுள்ளது. எனவே, உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி கணினி அறிவியல் பட்டதாரிகளை நியமிக்க தமிழக அரசு முன்வர வேண்டும், இவ்வாறு அவர் கூறினார்.