கொரோனா காலம் என்பதால் பள்ளிகளில் கற்பித்தல் பணி இல்லாமல், நிர்வாகப்பணிகள் மட்டுமே நடைபெறுகிறது. கற்பித்தல் பணி ஆன்லைன் வாயிலாக மாணவர்களுக்கு நடந்து வருகிறது.
இருந்தபோதிலும், சமீபகாலமாக பள்ளிகள் தொடர்பான செய்திகள் என்றாலே சமூக வலைதளங்களில் டிரெண்டிங் ஆகிறது. ஏனென்றால், அனைத்து தரப்பினரிடமும் எதிர்பார்ப்பு மேலோங்கி உள்ளது. பள்ளி கல்வி அமைச்சர் தனது பேட்டிகளில், பள்ளி திறப்பு குறித்து முதல்வர்தான் அறிவிப்பாா் எனவும், கொரோனா காலம் என்பதால் பள்ளிகள் திறப்பு தற்போதைக்கு வாய்ப்பில்லை எனவும் பலமுறை தௌிவுப்படுத்தியுள்ளார். பள்ளி திறப்பு குறித்து, தமிழக அரசே, அதன் அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிடும். இந்த நிலையில், சமீபகாலமாக, பள்ளிகள் அடுத்த வாரம் திறக்கப்படும், அடுத்த மாதம் திறக்கப்படும், விரைவில் திறக்கப்படுகிறது என்ற அதிகாரபூர்வமற்ற செய்திகள் பரவவிட்டு, சமூக வலைதளங்களில் பரப்பிவிடுவது நாளுக்குநாள் அதிகாித்து வருகிறது. இவை மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர் மத்தியில் ஒருவிதமான தேவையற்ற வீண் குழப்பத்தை ஏற்படுத்துகிறது, கல்வித்துறை உயர் அதிகாரிகளுக்கும் வீண் சிக்கலையும் உருவாக்கிவிடுகிறது. அதேபோல், ஜனவரி 4ம் தேதி பள்ளிகள் திறப்பு என்று ஒரு கேள்விகுறி கொண்ட தலைப்புடன் பள்ளி கல்வி வட்டாரங்கள் தெரிவித்தன என்று வாசகத்துடன் ஒரு செய்தி இன்று வேகமாக பகிரப்பட்டு வருகிறது. ஆனால், தமிழக அரசோ அல்லது பள்ளி கல்வித்துறை பள்ளி திறப்பு குறித்து அதிகாரப்பூர்வமாக எவ்வித அறிவிப்பு தற்போது வரை வெளியிடவில்லை. இதுகுறித்து, கல்வித்துறை உயர் அதிகாரிகளிடம் கேட்டபோது, தமிழக அரசு பள்ளி திறப்பு குறித்து தற்போது வரை எந்த முடிவும் எடுக்கவில்லை எனவும், அந்த செய்தி அதிகாரபூர்வமற்ற தகவல் எனவும் கூறி தெளிவுப்படுத்தியுள்ளனர். மேலும், பள்ளி திறப்பு செய்தி குறித்து, தமிழக அரசே அறிவிப்பை வெளியிடும் எனவும், அதுமட்டும்தான் உறுதியான தகவல் நாம் எடுத்துகொள்ள வேண்டும் எனவும், வீண் வதந்திகளை நம்ப வேண்டாம் என கேட்டுக்கொண்டுள்ளனர்.