கிட்டதட்ட ஒரு லட்சம் ரூபாய் வரை சம்பளம் பெற்றாலும், பண வெறி இந்த தலைமை ஆசிரியர்களுக்கு விட்டுவைக்கவில்லை போல. ஏழை குழந்தைகளின் நலத்திட்டங்களுக்காக அரசு ஒதுக்கும் நிதியில், முறைகேடு செய்யும் இவர்களா, நல்லொழுக்கம் கற்பித்து, சிறந்த மாணவர் சமுதாயத்தை உருவாக்க போகிறார்கள், இவர்கள் சஸ்பெண்ட் செய்யக்கூடாது, ஆசிரியர் பணியிலிருந்து தூக்கி எறியப்பட வேண்டியவர்கள். இவர்களை போன்று, எத்தனை பேர், கள்ளத்தனமாக அதிகாரிகள் உதவியுடன், அரசு நலத்திட்ட பணத்தை சுரண்டிக்கொண்டு, வயிற்று வளர்த்து வருகிறார்கள் என்று தெரியவில்லை.
நீலகிாி மாவட்டத்தில் ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் கீழ் குஞ்சப்பனை, தேவாலா, பொன்னானி, கரிக்கையூர் உள்ளிட்ட 22 இடங்களில் அரசு பழங்குடியினர் உண்டு உறைவிட பள்ளிகள் மற்றும் விடுதிகள் உள்ளன.
கடந்தாண்டு கொரோனா ஊரடங்கு காரணமாக பள்ளிகள் மூடப்பட்டன. இந்த சமயத்தில், பழங்குடியின மாணவர்களுக்கு உணவு மற்றும் உதவித்தொகை என மொத்தம் ரூ.7,300 வழங்க நிதி ஒதுக்கப்பட்டது.
இந்த தொகையை சம்மந்தப்பட்ட உண்டு உறைவிட பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள், பழங்குடியின மாணவர்களின் அல்லது சம்மந்தப்பட்ட மாணவரின் பெற்றோர்கள், பாதுகாவலர் வங்கி கணக்கில் செலுத்த வேண்டும். செலுத்திய பின், அதனை அவர்கள் பெற்று கொண்டதை உறுதிப்படுத்தும் பொருட்டு சம்மந்தப்பட்ட மாணவர்களின் பெற்றோர்கள், பாதுகாவலரிடம் இருந்து கையெழுத்து பெற்று அனுப்பிவைக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டது.
இத்திட்டத்தில் பல லட்சம் ரூபாய் முறைகேடு நடந்து இருப்பதாக சர்ச்சை எழுந்தது. கூடலூர் கல்வி மாவட்டத்தில் உள்ள சில உண்டு உறைவிட பள்ளிகளில் அதன் தலைமை ஆசிரியர்கள் தங்களின் மனைவி, உறவினர், விடுதி சமையலர் போன்றவர்களின் வங்கி கணக்கில் மாற்றி அதனை கையாடல் செய்துள்ளனர். குறிப்பாக, விடுதி சமையலரின் மனைவி வங்கி கணக்கில் மட்டும் 14 பழங்குடியின மாணவர்களின் செலுத்தி முறைகேடு செய்துள்ளதாக தெரிகிறது.
இந்த விவகாரம், புதிய அவதாரம் எடுத்ததை தொடர்ந்து, ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர். இதில் இரு தலைமை ஆசிரியர்கள் பழங்குடியின மாணவர்களுக்கு வழங்கிய நிதியில் முறைகேடு செய்தது தொியவந்தது. இதனை தொடர்ந்து தேவாலா உயர்நிலை உண்டு உறைவிட பள்ளி தலைமை ஆசிரியர் பாக்கியசேனன், பொன்னானி நடுநிலை உண்டு உறைவிட பள்ளி தலைமை ஆசிரியர் சேகர் ஆகியோர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.
மற்ற உண்டு உறைவிட பள்ளிகளிலும், இதுபோன்ற முறைகேடுகள் நடைபெற்றுள்ளதா? என அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இன்னும், சிலர் சிக்க வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும், மோசடி செய்தவர்கள் மீது, காவல்துறையில் புகார் அளிக்க வேண்டும் என்று சமூக சிந்தனை கொண்ட ஆசிரியர்கள் வலியுறுத்துகின்றனர்.