TRUST Exam in Tamil 2022 | ஊரக திறனாய்வு தேர்வு விவரம்
TRUST Exam in Tamil 2022
ஒன்பதாம் வகுப்பு பள்ளி மாணவர்கள் ஊரக திறனாய்வு தேர்வுக்கு எப்படி விண்ணப்பிக்க வேண்டும் என்பது குறித்து இந்த பதிவில் விரிவாக காணலாம்.
ஊரக திறனாய்வு தேர்வு என்றால் என்ன?
பள்ளி மாணவர்கள் கற்றல் திறனை மேம்படுத்தி, அதனை ஊக்கப்படுத்தும் நோக்கில் இந்த தேர்வு நடத்தப்படுகிறது. நகர்புறங்கள் தவிர்த்து, ஊரக பகுதியில் வசிக்கும் மாணவர்கள் இந்த தேர்வு எழுதி, கல்வி உதவித்தொகை பெறும் நோக்கில் அரசு தேர்வுகள் இயக்ககம் இந்த தேர்வு ஒவ்வொரு வருடம் நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.
ஊரக திறனாய்வு தேர்வு யார் எழுத முடியும் ?
இத்தேர்விற்கு ஊரகப் பகுதியில் அதாவது கிராமப்புற பஞ்சாயத்து மற்றும் டவுன்சிப் அரசு அங்கீகாரம் பெற்ற பள்ளிகளில் 2022 - 2023 ஆம் கல்வியாண்டில் 9-ம் வகுப்பு பயிலும் மாணவ / மாணவியர்கள் இத்திறனாய்வு தேர்வு எழுதுவதற்கு தகுதி படைத்தவர்கள். நகராட்சி மற்றும் மாநகராட்சிப் பகுதிகளில் படிக்கும் மாணவர்கள் இத்தேர்விற்கு விண்ணப்பிக்க முடியாது.
ஆண்டு வருமானம்
இத்தேர்விற்கு விண்ணப்பிக்க விரும்பும் மாணவ மாணவியரின் பெற்றோரின் ஆண்டு வருமானம் ரூ, 1,00,000/- க்கு (ரூபாய் ஒரு இலட்சத்திற்கு) மிகாமல் இருத்தல் வேண்டும் என்று அரசு தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது.
தேர்வு எப்போது?
அரசு தேர்வுகள் இயக்ககம் ஊரக திறனாய்வு தேர்வு டிசம்பர் மாதம் 10ம் தேதி (10.12.2022) நடைபெறும் என்று அதிகாரப்பூா்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பங்கள் எப்படி பதிவிறக்கம் செய்ய வேண்டும்
10.12.2022 அன்று நடைபெறவுள்ள ஊரகத் திறனாய்வுத் தேர்வுக்கான வெற்று விண்ணப்பங்களை 26.10.2022 முதல் 5.11.2022 வரை
http://www.dge.tn.gov.in என்ற அரசு தேர்வுகள் இயக்ககத்தின் இணையதளம் மூலம் பள்ளித் தலைமையாசிரியர்கள் பதிவிறக்கம் செய்து, அவ்வாறு பதிவிறக்கம் செய்யப்பட்ட வெற்று விண்ணப்பங்களை மாணவர்களுக்கு வழங்கி பூர்த்தி செய்த விண்ணப்பத்துடன் வருவாய்ச் சான்றினையும் இணைத்து 5.12.2022 க்குள் பெற்றுக்கொள்ள வேண்டும்.
ஊரக திறனாய்வு தேர்வு கட்டணம்
ஊரகத் திறனாய்வுத் தேர்விற்கு விண்ணப்பிக்கும் மாணவர் ஒவ்வொருவரிடமிருந்தும் தேர்வுக் கட்டணமாக ரூ.10-னை பணமாகப் பெற்றுக் கொள்ளவேண்டும். தலைமையாசிரியர்கள் இணைப்பில் கண்டுள்ள வழிமுறைகளைப் பின்பற்றி கட்டணத்தை ஆன்லைனில் கட்டணம் செலுத்த வேண்டும்.
Tamil Talent Search Exam in Tamil
விண்ணப்பம் எப்படி பதிவேற்றம் செய்ய வேண்டும்
தேர்வர்களிடமிருந்து பூர்த்தி செய்து பெறப்பட்ட அவ்விண்ணப்பங்களை பள்ளிக்கு வழங்கப்பட்ட USER ID AND PASSWORD மூலம் தலைமை ஆசிரியர் தேர்வர்களின் அனைத்து விண்ணப்பங்களையும் 28.10.2022 முதல் 8.11.2022 ஆன்லைன் மூலம் பதிவேற்றம் செய்ய வேண்டும். மேற்படி தேதிக்கு பிறகு பதிவு செய்வது இயலாது என்பதால் தேர்வர்கள் பாதிக்கப்படா வண்ணம் 8.11.2022 க்குள் பதிவு செய்து இணையதளம் மூலம் தேர்வுக்கட்டணத்தை செலுத்துமாறு தெரிவிக்கப்படுகிறது. பதிவேற்றம் முடிந்த பிறகு Summary Report பள்ளியில் பெறப்பட்ட மொத்த விண்ணப்பங்கள் (தேர்வர்களின் விவரங்களுடன்) முதன்மைக் கல்வி அலுவலரிடம் ஒப்படைத்திட பள்ளித் தலைமை ஆசிரியர்களை அறிவுறுத்தப்படுகின்றனர்.
தகுதியான பள்ளிகளை அனுமதித்தல்
முதன்மைக் கல்வி அலுவலர்கள் தலைமையாசிரியரால் பதிவு செய்த விவரத்தினை பெற்று அப்பள்ளிகள் ஊரகப் பகுதியைச் சார்ந்ததுதானா என்பதனை உறுதிசெய்து கொள்ள வேண்டும். தேர்வுக்கு தகுதியுள்ள பள்ளிகளின் பதிவு செய்த மாணவர்களின் விண்ணப்பங்களை முதன்மைக் கல்வி அலுவலரின் பொறுப்பில் வைத்துக் கொண்டு தகுதியற்ற பள்ளிகளிலிருந்து பெறப்பட்ட விண்ணப்பங்களை இணையதளம் வாயிலாக நீக்கம் செய்ய வேண்டும். பின்னரே தேர்வு மைய இணைப்புப் பணியினை மேற்கொள்ள வேண்டும்.
தேர்வு மைய இணைப்பு
ஒரு தேர்வு மையத்தில் அதிக பட்சம் 300 தேர்வர்கள் வீதம் ஒரு அறையில் 20 மாணவர்கள் எழுதும் வகையிலும், மாணவர்கள் தொலைதூரம் சென்று தேர்வு எழுதா வண்ணம் தேர்வர்கள் விண்ணப்பிக்கும் பள்ளி அமைந்துள்ள ஒன்றியத்திலேயே அனைத்து வசதிகள் நிறைந்த பள்ளியினைத் தெரிவு செய்து, இணைக்கும் பணியினை மேற்கொள்ள வேண்டும்.
NTSE தேர்வினுக்கு தெரிவு செய்யப்பட்ட மையங்களே பொருந்துமாயின் (அதே ஒன்றியம்) அம்மையங்களிலேயே தெரிவு செய்து, இணைப்புப் பள்ளியினை மேற்கொள்ளலாம். முதன்மைக் கல்வி அலுவலர்கள்
http://www.dge.tn.gov.in என்ற இணையத்தளத்தில் Click To Access Online Portal என்ற வாசகத்தினை கிளிக் செய்தால் தோன்றும் திரையில் முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு இத்துறையால் ஏற்கனவே வழங்கியுள்ள USER ID and Password ஐ பயன்படுத்தி பணியினை மேற்கொள்ள வேண்டும்.
வினாத்தாள் கட்டு காப்பாளர்
முதன்மைக் கல்வி அலுவலரே இத்தேர்வுக்கு வினாத்தாள் கட்டுக் காப்பாளராக இருப்பார். வினாத்தாள் கட்டுக் காப்பாளர் தேர்வு மையங்களுக்குரிய வினாத்தாள் கட்டுக்களை, தேர்வு தொடங்க ஒரு மணி நேரம் முன்னதாக தேர்வு மையத்தில் கொண்டு சேர்க்கும் வகையில், துறை அலுவலரிடம் ஒப்படைக்க வேண்டும்.
தேர்வு பணிக்கு அலுவலர்களை நியமித்தல்
தேர்வு மையங்களுக்குரிய தலைமைக் கண்காணிப்பாளர், துறை அலுவலர், தேர்வறை, உதவி கண்காணிப்பாளர் உள்ளிட்ட அனைத்து நியமனங்களையும் செய்வது முதன்மைக் கல்வி அலுவலரின் பொறுப்பாகும். இத்தேர்வுப் பணிக்கு உயர்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்களை பயன்படுத்திக் கொள்ளுமாறும், தேர்வுக்கு நியமிக்கப்படும் அலுவலர்கள் விவரத்தினை அரசுத் தேர்வுகள் இயக்ககம், சென்னை - 6 என்ற முகவரிக்கு தெரிவிக்குமாறும் கேட்டுக்கொள்ளப்படுகிறது.
தாங்கள் ஆன்-லைன் மூலம் தமிழ் வழி மற்றும் ஆங்கில வழி தேர்வெழுதுவதற்கு பதிவு செய்யப்பட்ட மொத்தத் தேர்வர்களின் எண்ணிக்கை குறித்தான பதிவு தான் இறுதியான தேர்வர்களின் எண்ணிக்கையாக ஏற்றுக்கொள்ளப்படும் என்று தொிவிக்கப்பட்டுள்ளது.
ஊரக திறனாய்வு தேர்வு உதவித்தொகை
ஒவ்வொரு மாவட்டத்திலும் தேர்ந்தெடுக்கப்படும் 100 நபர்களுக்கு (50 மாணவியர் + 50 மாணவர்) 9ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை தொடர்ந்து படிக்கும் காலத்திற்கு படிப்புதவித் தொகை ஆண்டு தோறும் ரூ. 1000/- வீதம் வழங்கப்படும்.