கடந்த சில நாட்களாக, கொரோனா பரவல் அதிகரித்துள்ளதாக ஊடகங்கள் செய்தியை வெளியிட்டு வரும் நிலையில், பள்ளிகளில் ஆசிரியர்கள் மற்றும் மாணவிகள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளது.
குறிப்பாக தஞ்சை மாவட்டம் அம்மாபேட்டை அரசு உதவிபெறும் பெண்கள் பள்ளியில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 56 ஆக அதிகரித்துள்ளது. மேலும் பள்ளிக்கு இரண்டு வார விடுமுறை அளிக்கப்பட்டு, கிருமிநாசினி தெளிக்கும் பணி நடந்து வருகிறது. மருத்துவக்குழுவினர் மாணவர்களுக்கு கொரோனா பரிசோதனை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் திருச்சியை சேர்ந்த கல்லூரி மாணவர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டதை அடுத்து, கல்லூரிக்கு தொடர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. திருச்சி திண்டுக்கல் சாலையில் உள்ள தனியார் கல்லூரியில் பிஎஸ்சி இயற்பியல் படிக்கும் காட்டூர் அரியமங்கலத்தை சேர்ந்த 2ம் ஆண்டு மாணவர் ஒருவருக்கும், வரலாறு பிரிவில் படிக்கும் 3 மாணவர்களுக்கும் கடந்த சில நாட்களாக காய்ச்சல், சளி என கொரோனா அறிகுறிகள் இருந்தது. திருச்சி அரசு மருத்துவமனையில் கொரோனா பரிசோதனை செய்ததில், அவர்களுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. தொடர்ந்து மருத்துவமனையில் அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதையடுத்து கல்லூரிக்கு தொடர்ந்து மூன்று நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மேலும், அந்த மாணவர்களுடன் தொடர்பில் இருந்த மாணவர்கள் மற்றும் உறவினர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. திருச்சி மாநகரில் சமீப நாட்களாக தொற்று அதிகரித்து வருவது மக்கள் மத்தியில் பீதியை கிளப்பியுள்ளது.