தமிழகத்தில் ஜூன் 15ம் தேதி பத்தாம் வகுப்பு பொதுதேர்வு நடக்கும் நிலையில், கல்வித்துறை அதற்கான ஏற்பாடுகளை அதிகாரிகள், மூலம் செய்து வருகிறது. பள்ளி அளவில் ஆசிரியர்களை தேர்வு மையங்களை தயார்படுத்தி வருகிறது.
இதற்கிடையில், பல தரப்பில் இருந்து தேர்வுகளை ஒத்தி வைக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது. ஆனால், கல்வித்துறை தேர்வை தீர்மானமாக நடத்தியே தீரும் என்ற வேட்கையுடன் செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில் மாணவர்கள் மாநில அரசுக்கு அழுத்தம் கொடுக்கும் வகையிலும், கவனத்தை ஈர்க்கும் வகையிலும் PostponeTN10thEXAM என்ற ஹேஷ்டேக்கை டிவிட்டரில் தற்போது டிரெண்டிங் செய்து வருகின்றனர். இவர்களுக்கு ஆதரவாக பலர் ரீடிவிட் செய்து வருகின்றனர். மாணவர் ஒருவர் கூறுகையில்," பத்தாம் வகுப்பு தேர்வை நடத்த வேண்டாம் என கூறவில்லை. கொரோனா பரவல் இருப்பதால் தேர்வை சில மாதங்களுக்கு ஒத்தி வைக்க வேண்டும் என்றுதான் வலியுறுத்துகிறோம். கொரோனா பாதிப்பு ஏற்பட்டால், அது எங்களுக்கு பேராபத்தாக மாறிவிடும்." மற்றொரு மாணவர் கூறும்போது," கல்வித்துறை பல முறை தேர்வு தேதி அறிவித்தபிறகு, தேர்வை ஒத்தி வைப்பதால் எப்போது தேர்வு நடக்கும், எப்படி தயாராவது என்ற மன பதட்டம் வருகிறது. இதேபோல், சில பாடங்களை ஆசிரியர்கள் நடத்தவில்லை. அதேபோல், நாங்கள் தேர்வுக்கு தயாராக ஆசிரியர்கள் மறுமுறை ரிவிஷன் போன்று நடத்தினால் உதவியாக இருக்கும். தற்போது அறிவித்த தேர்வை தள்ளி வைக்க வேண்டும்." ஆன்லைன் வகுப்பு குறித்து ஒரு மாணவியிடம் கேட்டபோது, நான் ஒரு மலையடிவாரம் கிராமத்தில் உள்ளேன். இங்கே ஸ்மார்ட்போன் காண்பது அரிதுதான். வேறு வழியில்லை, நாங்களே படித்து தேர்வுக்கு தயராகி வருகிறோம். நகர்புற மாணவர்களுக்கு வேண்டுமென்றால் ஆன்லைன் வகுப்பு சாத்தியம், ஆனால் எங்களுக்கு இல்லை." மாணவர்கள் மட்டுமல்லாமல், ஆசிரியர்கள், ஆசிரியர் சங்க பிரதிநிதிகள், கல்வி அமைப்புகள், கல்வியாளர்கள் என அனைவரும் நேர்கோட்டில் நின்று தேர்வை தற்காலிகமாக ஒத்தி வைக்க வேண்டும் என்பதே வலியுறுத்துகின்றனர்.