You are at the right place to read the latest education news today in Tamil. As well as you can read the latest TRB, TNPSC, sports, job news on our website - TN Education Info.

Transfer Certificate | மாற்று சான்றிதழ் கல்வி கட்டணம் அரசு மேல்முறையீடு செய்ய வேண்டும்

Tamil Nadu Children Education Policy 2021

Transfer Certificate | மாற்று சான்றிதழ் கல்வி கட்டணம் அரசு மேல்முறையீடு செய்ய வேண்டும்

மாற்றுச் சான்றிதழில் “கல்விக் கட்டணம் பாக்கி உள்ளது” எனக் குறிப்பிடலாம் என்ற உயர்நீதிமன்ற அனுமதியை எதிர்த்து தமிழ்நாடு அரசு மேல்முறையீடு செய்ய வேண்டும் என கல்வி மேம்பாட்டு கூட்டமைப்பு தமிழக அரசை வலியுறுத்தி உள்ளது.

Transfer Certificate

இதுகுறித்து கல்வி மேம்பாட்டுக் கூட்டமைப்பு, ஒருங்கிணைப்பாளர், சு.மூர்த்தி அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது,

கொரோனா பேரிடர் காரணமாக பாதிப்புக்கு ஆளான பெற்றோர்கள் தனியார் பள்ளிகளில் கட்டணம் செலுத்தி தங்கள் குழந்தைகளைத் தொடர்ந்து படிக்க வைக்க இயலாத காரணத்தால் அரசுப் பள்ளிகளில் சேர்க்க வேண்டிய நிலைக்கு ஆளாகியுள்ளனர். கல்விக் கட்டண நிலுவை காரணமாக தனியார் பள்ளிகள் இப்பெற்றோர்களுக்கு மாற்றுச் சான்றிதழ் கொடுக்க மறுப்பதாகப் பரவலாகக் குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதன் காரணமாக மாற்றுச் சான்றிதழ் இல்லாமல் மாணவர்களை  அரசுப் பள்ளிகளில் சேர்த்துக்கொள்ள  பள்ளிக் கல்வித்துறை அனுமதி அளித்தது.
மாற்றுச் சான்றிதழ் வழங்குவது தொடர்பாக தனியார் பள்ளிகளின் சங்கத்தினர் சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில், கட்டணம் செலுத்தாத மாணவர்களுக்கு வழங்கப்படும் மாற்றுச் சான்றிதழ்களில் "கட்டணப் பாக்கி உள்ளது" எனக்  குறிப்பிட சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கித் தீர்ப்பளித்துள்ளது.

பள்ளிகள் வழங்கும் மாற்றுச் சான்றிதழில் "கட்டணப் பாக்கி உள்ளது" என்று குறிப்பிட்டால் குழந்தைகள் மனத்துன்புறுத்தலுக்கு ஆளாக நேரிடும். கல்வி உரிமைச் சட்டம் 2009 விதி 17, எந்தவொரு குழந்தையும் உடல் தண்டனை அல்லது மன துன்புறுத்தலுக்கு உட்படுத்தப்படக்கூடாது என்றும் இவ்விதியை மீறுபவர், அவரது பணி விதிகளின் கீழ் ஒழுங்கு நடவடிக்கைக்கு பொறுப்பாவார் என்றும் கூறுகிறது.

மேலும், கல்வி நிறுவனங்கள் நிதி நிறுவனங்கள் அல்ல! மாற்றுச் சான்றிதழ் கணக்குச் சான்றும் அல்ல! படிப்பை முடித்ததற்கான கல்விச் சான்றைப் பெறுவது குழந்தைகளின் உரிமை என்பதையும் பள்ளிகளை நடத்தும் தனியார் அறக்கட்டளைகள் வெறும் இலாப நோக்கில் மட்டும் செயல்பட சட்டத்தில் இடமில்லை என்பதையும் கவனத்தில் கொள்ளவேண்டியுள்ளது.  

குழந்தைகளை மாண்போடும் கண்ணியத்தோடும் நடத்தவேண்டும் என்று ஐக்கிய நாடுகளின் குழந்தைகள் உரிமைகளுக்கான மனித உரிமைகள் ஆணையத்தின் தீர்மானம் வலியுறுத்துகிறது.  குழந்தைகளின் இனம், நிறம், பாலினம், மொழி, மதம், சொத்து, இயலாமை, பிறப்பு, வெளிப்படுத்தப்படும் கருத்துகள் போன்ற நிலைகளின் அடிப்படையில் எந்த ஒரு குழந்தையும் பாகுபாட்டிற்கும் தண்டனைக்கும் ஆளாகாமல் தடுப்பது ஒவ்வொரு அரசாங்கத்தின் கடமை என்றும் இத் தீர்மானம் சுட்டிக்காட்டியுள்ளது.

அரசுக்கு வரி செலுத்தும் மக்களது  பிள்ளைகளுக்கு தரமான கல்வியை கட்டணமின்றி கிடைக்கச் செய்வது  அரசமைப்புக் கடமைகளில் ஒன்றாகும். மேலும் கட்டணம் செலுத்த முடியாத பிள்ளைகளின்  கல்விச் சான்றிதழில் கட்டணப் பாக்கி உள்ளது  என்று குறிப்பிட அனுமதிப்பது  குழந்தை நேயமற்றது. தனியார் பள்ளிகளில் அரசால் நிர்ணயிக்கப்படும் கட்டணத்தை விட கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுகிறது என்ற குற்றச்சாட்டுகள் உள்ளதையும் கவனத்தில் கொள்ளவேண்டும்.

எனவே, தனியார் பள்ளிகள் வழங்கும் மாற்றுச் சான்றிதழில் "கட்டணப் பாக்கி உள்ளது" எனக் குறிப்பிட சென்னை உயர்நீதிமன்ற அளித்துள்ள அனுமதியை விலக்கிக் கொள்ளுமாறு தமிழ்நாடு அரசு உடனடியாக மேல்முறையீடு செய்ய வேண்டுகிறோம்.

மேலும் தொடர்புக்கு 9965128135, kmktamilnadu@gmail.com.