கல்வி மேம்பாட்டுக்குழு, ஒருங்கிணைப்பாளர், பேரா.க.லெனின்பாரதி, வெளியிட்ட அறிக்கை,
கொரானா பெருந்தொற்று எல்லா துறைகளையும் கடுமையான பாதிப்பிற்கும் சிக்கலுக்கும் உள்ளாக்கி உள்ளது. கல்வித்துறையும் கடுமையான சூழலை எதிர்கொண்டுள்ளது. இந்நிலையில் 10 மற்றும் 12 ஆம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வுகள் ரத்து செய்யப்பட்டு மதிப்பெண் வழங்கும் முறையில் தமிழ்நாடு அரசு பல்வேறு மாறுதல்களை கொண்டுவந்துள்ளது. உள்ளபடியே இது வரவேற்கத்தகுந்த நடவடிக்கை. பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் இதன்மூலம் பயனடைந்து உயர்கல்வியை நோக்கி நகரும் சூழ்நிலையை தமிழ்நாடு அரசின் பள்ளிக்கல்வித்துறை உருவாக்கியுள்ளது. தனது பொருளாதார மற்றும் குடும்ப சூழ்நிலைகளால், புறக்காரணிகளால் பள்ளியை விட்டு வெளியேறி ஏதாவது வேலைகளுக்கு சென்று சிறிய வருமானம் ஈட்டிக்கொண்டு இருக்கும் ஆயிரக்கணக்கான மாணவ மாணவிகள் தனது கல்வியை ஏதேனும் ஒரு வகையில் தொடர தனித்தேர்வர்களாக ( private students ) பதிவு செய்து தேர்வு எழுதி வெற்றி பெற்று அதில் பலர் மீண்டும் உயர்கல்வியை ஏதேனும் ஒரு வகையில் தொடர்ந்து கொண்டிருப்பர். இதுதான் இது வரையிலான நடைமுறை. ஆனால் இப்பெருந்தொற்று காலத்தில் தனித்தேர்வர்களுக்கு மட்டும் தேர்வு நடத்துவது என்ற முடிவு தவறானது. பள்ளிகளில் படிக்கும் குழந்தைகளே தேர்வை சந்திக்க சிரமப்படும் சூழலில் இவர்களின் நிலை இன்னும் பின்தங்கியதாகவே இருக்கும். கடந்த ஆண்டு பொதுத்தேர்வு எழுதிய தனித்ததேர்வர்களில் 60 சதமானோர் தேர்ச்சி பெறவில்லை. பொருளாதார குடும்ப சூழ்நிலைமைகள் இவர்களின் கல்வி அடைவுகளில் பெரும்பங்கு வகிக்கின்றன .கொரானா மூன்றாம் அலைக்கான சூழல் அதிகமாக இருப்பதாலும் ,இவர்களின் உயர்கல்வி வாய்ப்பை கருத்தில் கொண்டும் தனித்தேர்வர்களாக பதிவு செய்து தேர்விற்கு காத்துக்கொண்டிருக்கும் அனைவருக்கும் தேர்ச்சியை அறிவித்து, பள்ளிக்கு சென்று பயிலும் மாணவர்களுக்கு மதிப்பெண் நிர்ணய நடைமுறை செய்தது போல், தனித்தேர்வர்களுக்கும் குறைந்த பட்ச தேர்ச்சிக்கான சராசரி மதிப்பெண் நடைமுறையை உருவாக்கி அனைவரும் தேர்ச்சி என்ற முடிவை தமிழ்நாடு அரசு பள்ளிக்கல்வித்துறை அறிவிக்க வேண்டும் என்று கல்வி மேம்பாட்டுக்குழு சார்பில் கேட்டுக்கொள்கிறேன் . ஒருங்கிணைப்பாளர்