பாலியல் தொல்லைகளை தடுக்க ஒருங்கிணைந்த வழிகாட்டு நெறிமுறைகளை உருவாக்கலாம் என உச்ச நீதிமன்றம் தெரிவித்திருக்கிறது.
பள்ளிகளில் மாணவ மாணவிகளுக்கு ஏற்படும் பாலியல் தொல்லைகளை தடுக்க விசாக கமிட்டி போன்ற அமைப்பை ஏற்படுத்த கோரி தொடுக்கப்பட்ட வழக்கு உச்ச நீதிமன்ற நீதிபதி இந்திரா பானர்ஜி தலைமையிலான அமர்வில் விசாரணைக்கு வந்தது. பள்ளிகளில் ஒரு குற்றம் நிகழ்ந்த பின்னர் தடுப்பதற்கான வழிமுறைகள் இருக்கின்றனவே தவிர குற்றங்கள் நடைபெறாமல் தடுக்க நெறிமுறைகள் இல்லை என மனுதாரர் நக்கீரன்கோபால் தரப்பில் குறிப்பிடப்பட்டது. கல்வி நிலையங்களில் மாணவ மாணவியருக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல்கள் அதிகரித்து வருவது தொடர்பாக கவலை தெரிவித்த நீதிபதிகள் பள்ளிகள் மற்றும் கல்வி நிறுவனங்களில் சிசிடிவி கேமராக்கள் அமைக்கப்பட வேண்டும் எனக் கூறினர். பள்ளி குழந்தைகள் மாணவ மாணவியர் பாலியல் தொல்லைகள் பாதிக்கப்படுவதை தடுக்க ஒருங்கிணைந்த வழிகாட்டு நெறிமுறைகளை உருவாக்கலாம் என்றும் நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர். மேலும் மனுவின் மீது மத்திய மாநில அரசுகள் பதிலளிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டனர்.