கற்போர் உதவி மையம் தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகம் மற்றும் கல்லூரி கல்வி இயக்குனரகம் இணைந்து தமிழகத்தில் உள்ள 91 அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் கற்போர் உதவி மையம் மற்றும் தேர்வு மையம் துவங்கப்பட்டுள்ளது. உயர் கல்வித்துறை அமைச்சர் கே.பி அன்பழகன் இந்த திட்டத்தை கடந்த திங்கள் அன்று சென்னையில் துவக்கி வைத்தார். இதுகுறித்து அதிகாரிகள் கூறியதாவது: தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகம் மூலம் மிகக்குறைந்த செலவில் சமூகத்திற்கு தேவையான படிப்புகளை தொலைநிலைக்கல்வி மற்றும் திறந்தநிலை கல்வி மூலம் வழங்கி வருகிறது. பல்கலைக்கழக நிதிநல்கைக் குழுவின் நெறிமுறைகளின் படி, கிராமப்புற மற்றும் ஏழ்மை நிலையில் உள்ள மக்கள், குறிப்பாக மாணவிகளுக்கு உயர்கல்வி வாய்ப்பினை குறைந்த செலவில், உயர்ந்த தரத்தில் வழங்கும் பொருட்டு, அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகத்தின் கற்போர் உதவி மையங்கள் மற்றும் தேர்வு மையங்கள் நிறுவப்பட்டுள்ளது. மேலும் அதிகாரிகள் கூறுகையில், "அரசு கல்லூரிகள் வழங்கும் இளங்கலை மற்றும் முதுகலை பட்டப்படிப்புகளில் மட்டுமே கல்வி பயில்வோர் சேர முடியும். கல்வித்தகுதியாக இளங்கலை படிப்புகளில் சேர விரும்புபவர்கள் பன்னிரெண்டாம் வகுப்பு முடித்திருக்க வேண்டும், முதுகலை பட்டப்படிப்பு சேர விரும்புபவர்கள் இளங்கலை பட்டப்படிப்பை நேரடி முறையிலோ அல்லது தொலைத்தூர கல்வி முறையில் பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும். தற்போது, கல்வி கற்போர் மையம் மற்றும் தேர்வு மையத்திற்கு தனியாக ஒருங்கிணைப்பாளர்களாக அரசு கல்லூரி பேராசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். தற்போது, மாணவர் சேர்க்கை கல்வி கற்போர் மையத்தில் துவங்கியுள்ளது. மாணவர் சேர்க்கை வரும் 30ம் தேதி வரை நடக்கிறது. ஆர்வமுள்ளவர்கள் உரிய கல்விச்சான்றிதழ்களுடன், அரசு கலைக்கல்லூரிகளில் உள்ள கற்போர் உதவி மைய ஒருங்கிணைப்பாளரை அணுகி, மாணவர் சேர்க்கை செய்து கொள்ளலாம். ‘ இந்த படிப்புகளில் சேருபவர்களுக்கு, அரசு கல்லூரி பேராசிரியா்கள் குறிப்பிட்ட சில பாடங்களை அரசு கல்லூரி வகுப்புகளிலேயே நடத்த உள்ளனர். படிப்பு காலம் முடிந்தவுடன் தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகம் தொலைத்துார படிப்புகான சான்றிதழ் வழங்கப்படும். கடந்த 2019ல் உயர்கல்வித்துறை மானிய கோரிக்கையின்போது, கே.பி அன்பழகன் கற்போர் கல்வி மையம் அரசு கல்லூரிகளில் துவங்கப்படும் என தெரிவித்தார். அதன் அடிப்படையில், தற்போது இந்த திட்டம் துவங்கப்பட்டுள்ளது. இதற்கு நிதியாக ரூ.50 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக, கல்லூரி கல்வி இயக்குனரகம் தெரிவித்துள்ளது. 91 கலை மற்றும் அறிவியல் கல்லூரி பெயர் பட்டியல் இணைக்கப்பட்டுள்ளளது.