தாராபுரம் அருகே கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்த ஓட்டுநரின் மகன்களின் படிப்பு செலவுகளை ஏற்பதாக அறிவித்து ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் சந்தித்து நிவாரண உதவி வழங்கினார்.
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே உள்ள கொண்டரசம்பாளையம் பகுதியில் வசித்து வருபவர் செந்தில்குமார். வாடகை கார் ஓட்டுநரான இவருக்க கார்த்திகா என்ற மனைவியும், தரணிஷ், ரித்திக் என்ற இரண்டு குழந்தைகள் உள்ளனர்.
இந்நிலையில் கார்த்திகா ஏற்கனவே உடல் நலக்குறைவு காரணமாக இறந்துவிட்ட நிலையில் தந்தை செந்தில்குமாரின் பராமரிப்பில் குழந்தைகள் இருந்து வந்தனர். இந்நிலையில் கடந்த 11 நாட்களுக்கு முன்பு கொரோனா தொற்று காரணமாக செந்தில்குமார் இறந்துவிட்டார்.
இதனைத் தொடர்ந்து பெற்றோர்களை இழந்த சிறுவர்கள் தங்களது வாழ்வாதாரத்திற்கு வழி தெரியாமல் திகைத்து நின்றனர். இந்நிலையில் இவர்களது தாய் வழி பாட்டி தேவியின் ஆதரவில் சிறுவர்கள் தற்போது உள்ளனர்.
வயது மூப்பு காரணமாக கூலி வேலைக்கு செல்ல முடியாமல் பாட்டி தவித்து வந்த நிலையில் இருந்தனர். இதையறிந்த ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் பாதிக்கப்பட்ட சிறுவர்களை நேரில் சந்தித்து, தனது சொந்த செலவில் உதவித்தொகையை வழங்கி அந்த குழந்தைகளுக்கு ஆறுதல் கூறினர்.