சிபிஎஸ்இ பிளஸ் 2 தேர்வு மறுமதிப்பீட்டால் கோவை தமிழ்நாடு வேளாண் பல்கலையில் இளநிலை படிப்புகளுக்கான தரவரிசை பட்டியல் நேற்று வெளியிட வேண்டிய நிலையில் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
கோவை தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில், வேளாண் படிப்புகளுக்கு விண்ணப்பிக்கும் கால ஜூன் 17-ம் தேதியுடன் நிறைவடைந்தன. பல்கலைகழகத்தில் 14 இளநிலை பாடபிரிவுகள், 3 டிப்ளமோ படிப்புகள், அண்ணாமலை பல்கலையில் 3 இளம் அறிவியல் பட்டபடிப்புகளும் உள்ளன. இந்நிலையில் வேளாண் படிப்புகளுக்கான தரவரிசை பட்டியல் வரும் 23- ம் தேதி வெளியிடப்படும் என பல்கலைகழக நிர்வாகம் தெரிவித்திருந்தது. இதற்கு தமிழகம் முழுவதும் இருந்து மாணவர்கள் விண்ணப்பித்து காத்திருந்த நிலையில், நேற்று வெளியாக வேண்டிய தரவரிசைப்பட்டியல் சிபிஎஸ்இ பிளஸ்2 மறு மதிப்பீட்டு விவகாரத்தால், ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இதனால் வரும் ஜூலை 7-ம் தேதி முதல் 12-ம் தேதி வரை நடக்க கலந்தாய்வும் தாமதம் ஆகலாம் என கூறப்படுகிறது. இது தொடர்பாக வேளாண் பல்கலைக்கழகத்தை சேர்ந்தவர்கள் கூறியதாவது: சிபிஎஸ்இ பிளஸ் 2 தேர்வில் கடந்தாண்டை விட, 3 சதவீதம் குறைந்ததுடன், பல மாணவர்கள் குறைந்த மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றனர். சிபிஎஸ்இ விடைத்தாள்கள் ஸ்கேன் செய்யப்பட்டு மதிப்பீடு செய்யும் முறை கொண்டுவந்ததால், சரியாக பல மாணவர்களின் விடைத்தாள் பக்கங்கள் ஸ்கேன் ஆகவில்லை என கூறப்படுகிறது.இதனால் அதிகளவிலான மாணவர்கள் சிபிஎஸ்இ தேர்வில் குறைந்த மதிப்பெண்களோடு தேர்ச்சி அடைந்தது அவர்களை அதிருப்தி அடைய வைத்தது. இதையடுத்து பல மாணவர்களும் மறுமதிப்பீட்டுக்கு விண்ணப்பித்திருந்ததால், இந்தமுறை வேளாண்மை பட்டப்படிப்பில் சேர விரும்புவர்களுக்கேற்ப தரவரிசைப்பட்டியல் வெளியிடல், குறிப்பிட்ட தேதியில் வெளியிடுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக மாநில அரசிடம் பேசி உரிய நடவடிக்கை எடுக்கப்படும். தரவரிசைப்பட்டியல் மற்றும் கலந்தாய்வு அறிவிப்புக்கு பின்னர் தான், கல்லூரி திறப்பு தேதியும் முடிவாகும். ஏற்கெனவே வரும் செப். 9-ம் தேதி வேளாண் கல்லூரிகள் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்ததிலும் மாற்றங்கள் இருக்கலாம். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர். தமிழகம் முழுவதும் வேளாண் படிப்பில் சேர தரவரிசைப்பட்டியலை எதிர்பார்த்திருந்த மாணவர்கள் மற்றொரு பக்கம் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.