TN Text Book Latest News | இலவச பாடபுத்தகங்கள் மாவட்டங்களுக்கு அனுப்பி வைப்பு
TN Text Book Latest News
தமிழகத்தில் பள்ளி கல்வி பாடத்திட்டத்தில் எட்டாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரையிலான வகுப்புகளில் பயிலும் மாணவர்களுக்கான
இலவச பாட நூல்கள் முழுமையாக அச்சிடப்பட்டு தற்போது அந்தந்த மாவட்டங்களில் உள்ள கிடங்குகளுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளன.
தமிழக பள்ளி கல்வியில் ஒன்றாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரையிலான வகுப்புகளுக்கான பாடபுத்தகங்கள் அச்சிடும் பணியை தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம் மேற்கொண்டு வருகிறது. அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளின் மாணவர்களுக்கு இலவசமாகவும், தனியார் பள்ளி மாணவர்களுக்கு குறைந்த விலையிலும் புத்தகங்கள் வழங்கப்படுகின்றன.
அந்த வகையில் வரும் கல்வியாண்டுக்கான 2023-2024 பாட நூல்கள் அச்சிடும் பணி தொடங்கி நடைபெற்று வருகிறது. தற்போதைய சூழலில் 8 முதல் பிளஸ் 2 வரையிலான வகுப்புகளுக்கு பாடநூல்கள் முழுமையாக அச்சிடப்பட்டு அந்தந்த மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. அதேநேரத்தில் 1 முதல் 7 வரையிலான வகுப்புகளில் பயிலும் மாணவர்களுக்கு முதல் பருவத்திற்கான பாடநூல்கள் தற்போது அச்சிடப்பட்டு வருகிறது. புதிய கல்வியாண்டுக்கான வகுப்புகள் தொடங்கும்போது அனைத்து வகுப்புகளுக்கும் முதல் வாரத்திலேயே பாடநூல்கள் முழுமையாக வழங்கப்பட உள்ளன.
Read Also: World Book Day in Tamil
இதுகுறித்து அதிகாரிகள் கூறியதாவது, வரும் கல்வியாண்டுக்கு தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத்தின் மூலம் 4 கோடியே 12லட்சத்து 48 ஆயிரம் பாடநூல்கள் அச்சிடப்பட உள்ளன. அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவா்களுக்கு 3 கோடியே 18 ஆயிரத்து 66 புத்தகங்களும், விற்பனைக்கு 1 கோடியே 20 லட்்சத்து 93 ஆயிரம் புத்தகங்களும் அச்சிடப்படும். மொத்தம் 248 தலைப்புகளில் பாடநூல்கள் தயாராகி வருகின்றன. தற்போதைய நிலவரப்படி அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகளில் 8 முதல் பிளஸ் 2 வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தேவையான பாடநூல்கள் அனைத்தும் அச்சிடப்பட்டு அந்த கல்வி மாவட்டங்களில் உள்ள கிடங்குகளுக்கு அனுப்பப்பட்டுள்ளன.
இவற்றை அந்தந்த மாவட்ட கல்வி அலுவலர்கள் உரிய முறையில் பெற்று, பள்ளிகளுக்கு பிரித்து அனுப்புவர். மற்ற வகுப்புகளுக்கான பாடநூல்களை அச்சிடும் பணி இறுதி கட்டத்தை எட்டியுள்ளது, என்றனர்.
தனியார் பள்ளி மாணவர்களுக்கு
தனியார் பள்ளிகளில் பயிலும் மாணவர்கள், போட்டி தேர்வுகளுக்கு தயாராகி வரும் தேர்வர்கள் ஆகியோருக்கான பாடநூல்கள் விற்பனையை தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம் தொடங்கியுள்ளது.
சென்னையை பொருத்த வரை நுங்கம்பாக்கத்தில் உள்ள பேராசிரியர் அன்பழகன் கல்வி வளாகம் (டிபிஐ), சென்னை கோட்டூர்புரம் அண்ணா நூற்றாண்டு நூலக வளாகம், அடையாறில் உள்ள தமிழ்நாடு பாடநூல் விற்பனை கிடங்கு ஆகியவற்றில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்த இடங்களில் தற்போது 8 முதல் பிளஸ் 2 வரையிலான வகுப்புகளுக்கான பாடநூல்களை பெற்றுக்கொள்ளலாம். மேலும் 1 முதல் 7ஆம் வகுப்பு வரையிலான சிபிஎஸ்இ மாணவர்களுக்கு தமிழ் பாட நூல்கள் கடந்த 15ம் தேதி முதல் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.