TN Temporary Teacher 2022 | அரசு பள்ளி தலைமை ஆசிரியரை கொல்ல முயற்சி
TN Temporary Teacher 2022
கிருஷ்ணகிரி அஞ்செட்டி தாலுகா உரிகம் அருகே உள்ள பீர்னப் பள்ளி கிராமத்தில் அரசு ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளி செயல்படுகிறது. தற்காலிக ஆசிரியர் பணிக்கு ராஜேந்திரன் என்பவர் இப்பள்ளி தலைமை ஆசிரியர் நாகேந்திரன் என்பவரிடம் விண்ணப்பித்துள்ளார். இதற்கிடையில் பணி கிடைக்குமா என்ற ஆவலில், ராஜேந்திரன் தலைமை ஆசிரியர் குறித்து பல்வேறு இடங்களில் விசாரித்துள்ளார். அப்போது சிலர் தலைமை ஆசிரியர் குறித்து தவறான தகவல்களை தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.
Read Also: பகுதிநேர பயிற்றுநர்களுக்கு முக்கிய அறிவுரை
மேலும், ராஜேந்திரனுக்கு ஆதரவாக, ஆசிரியர் ஒருவர் தலைமை ஆசிரியரிடம் போனில் பேசியுள்ளார். அப்போது, தலைமை ஆசிரியர், ராஜேந்திரன் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்று கிராம மக்கள் கூறுவதால், தற்காலிக ஆசிரியர் பணி அவருக்கு வழங்க முடியாது என அந்த ஆசிரியரிடம் கூறியுள்ளார். இந்த தகவல் அறிந்த ராஜேந்திரன், ஆத்திரம் அடைந்தார். பின்னர் பள்ளிக்கு சென்ற அவர் நான் மனநலம் பாதிக்கப்பட்டவனா எனக்கூறி, தலைமை ஆசிரியரிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். திடீரென அவர் மாட்டிற்கு போடும் ஊசியை எடுத்து அதில் மருந்தை அடைத்து தலைமை ஆசிரியர் மீது செலுத்த பாய்ந்துள்ளார். அதிர்ச்சி அடைந்த தலைமை ஆசிரியர் அங்கிருந்து ஓட்டம் பிடித்தார். மாணவர்களும் அலறியடித்து ஓடினர். அங்கிருந்த மக்கள் அவரை சுற்றி வளைத்து பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர். இதுதொடர்பாக அஞ்செட்டி போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். அவரை போலீசார் எச்சரித்து அனுப்பினர்.