மாநில ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்டம் சார்பில் தமிழ்நாடு முழுவதும் 52,000 அங்கன்வாடி மையங்கள், 2,300க்கும் மேற்பட்ட எல்கேஜி, யுகேஜி வகுப்புகள் (நடுநிலைப்பள்ளி வளாகம்) செயல்பட்டு வருகின்றன.
குறிப்பாக, அங்கன்வாடி மையங்களில் 2 முதல் 5 வயது வரையிலான குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து பராமரிப்பு, முன்பருவ கல்வி, விளையாட்டு செயல்பாடுகள் உள்ளிட்டவை அளிக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில், குழந்தைகளுக்கு ஒவ்வொரு ஆண்டும் இரண்டு சீருடை வழங்கப்பட வேண்டும். ஆனால், இந்தாண்டு டிசம்பர் மாதம் ஆகியும், அவர்களுக்கான சீருடை வழங்கப்படவில்லை. இதனால், குழந்தைகள் வண்ண சீருடைகள் அணிந்து செல்ல வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். Read Also: ஊதியம் உயர்த்தக்கோரி எல்கேஜி, யுகேஜி ஆசிரியர்கள் அமைச்சரிடம் மனுஅதுமட்டுமின்றி, குழந்தைகளுக்கான அதாவது 2 -3 வயது, 3-4 வயது, 4-5 வயதுக்கேற்ப பயிற்சி புத்தகம் வழங்கப்பட வேண்டும். இதில் மாணவா்கள் அந்த பயிற்சி புத்தகத்தில் அடிப்படையான தமிழ் மற்றும் ஆங்கில எழுத்துகள், வண்ணம் தீட்டுதல் உள்ளிட்டவை செயல்பாடு செய்வார்கள். இந்த பயிற்சி புத்தகம் வழங்கப்படாததால், முன்பருவ கல்வி முடக்கப்பட்டுள்ளன. மேலும், அங்கன்வாடி ஊழியர்கள் முன்பருவ கல்விக்கு முக்கியத்துவம் அளிப்பதில்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அதற்கு காரணம், மையங்களில் ஊழியர்கள் பற்றாக்குறையாக இருப்பதாகவும், பிற பணிகள் செய்வதற்கே நேரம் போதக்குறையாக உள்ளதாகவும் அவர்கள் தரப்பில் தெரிவிக்கின்றனர். குறிப்பாக, நடுநிலைப்பள்ளிகளில் செயல்படும் எல்கேஜி, யுகேஜி கையாளும் முன்பருவ கல்வி ஆசிரியர்களுக்கும் பாட புத்தகங்களை வழங்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதுகுறித்து, சமூகநலத்துறை அமைச்சர் கண்டுகொள்ளாமல் இருப்பது அதிர்ச்சி அளிக்கிறது என்று அங்கன்வாடி மைய ஊழியர்கள் புலம்புகின்றனர்.