TN School Students Age for sports | விளையாட்டு போட்டி விதி திருத்தம் தமிழக மாணவர்களுக்கு சிக்கல்
TN School Students Age for sports
பள்ளி வகுப்பு அடிப்படையில், விளையாட்டு போட்டியில் மாணவர்களை அனுமதிக்க, கல்வித்துறை முடிவு செய்துள்ளது.
இதனால், தேசிய போட்டியில் பங்கேற்பதில்,தமிழக மாணவர்களுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. நாடு முழுவதும் பள்ளி மாணவர்களுக்கு பிறந்த தேதியின் அடிப்படையில், வயது வரம்பை குறிப்பிட்டு, அதன்படி, எந்த பிரிவில் விளையாட வேண்டும் என்ற முறை பின்பற்றப்படுகிறது. இந்நிலையில், வரும் காலங்களில் வயது வரம்பு மட்டுமின்றி, அவர்கள் படிக்கும் வகுப்பையும் கணக்கிட்டு, அதன்படியே விளையாட்டு போட்டியில், எந்த பிரிவில் சேர்க்க வேண்டும் என்பதை முடிவு செய்ய வேண்டும் என விதியை திருத்த தமிழக பள்ளிக்கல்வி துறை தீர்மானித்துள்ளது.
இதுகுறித்து, தமிழ்நாடு பட்டய சான்றிதழ் உடற்கல்வி ஆசிரியர் சங்கம் சார்பில், பள்ளிக்கல்வி இயக்குனரகத்தில் உள்ள முதன்மை உடற்கல்வி ஆய்வாளருக்கு மனு அனுப்பப்பட்டுள்ளது. அதில் கூறியிருப்பதாவது, பள்ளி கல்வித்துறை முடிவின்படி, 14 வயதுக்குட்பட்டோர் பிரிவில் 6 முதல் 8 வகுப்பு வரையிலான மாணவர்களையும், 17 வயதுக்குட்பட்டோர் பிரிவில், 9 மற்றும் 10ம் வகுப்பு மாணவர்களையும், 19 வயதுக்குட்பட்டோர் பிரிவில், பிளஸ் 1, பிளஸ் 2 மாணவர்களையும் அனுமதிக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.
வயது மட்டுமின்றி, வகுப்புகளையும் கணக்கிட்டால், தமிழக மாணவர்களால் தமிழகத்தை தாண்டி வேறு மாநிலம் மற்றும் தேசிய போட்டிகளில் பங்கேற்க முடியாது. தமிழகத்தில் பள்ளி வகுப்பு அடிப்படையில் ஒரு பிரிவிலும், தேசிய போட்டிகளில் வயது அடிப்படையில், வேறு பிரிவிலும் மாறி விளையாட வேண்டிய நிலை ஏற்படும். மாநில பிரிவுக்கும், தேசிய பிரிவுக்கும் இடையில் உபகரண அளவு, விளையாட்டு திறனின் வெற்றி அளவு போன்றவை மாறுபடும். அதற்கு ஏற்ப, மாநில பிரிவுக்கு ஓரு வகையிலும் தேசிய பிரிவுக்கு வேறு வகையிலும் ஒரே நேரத்தில் பயிற்சியை மாற்ற வேண்டும்.
எனவே, புதிய விதியை அமல்படுத்தாமல், ஏற்கனவே உள்ள வயது அடிப்படையிலான தகுதியை முறையை மட்டுமே பின்பற்ற வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.