தமிழ்நாடு உடற்கல்வி ஆசிரியர் மற்றும் உடற்கல்வி இயக்குநர் சங்கம் மாநில பொதுச்செயலாளர் வெ பெரியதுரை வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது, பள்ளிக்கல்வித் துறை சார்பாக 2023- 2024 ஆம் கல்வியாண்டிற்கான விளையாட்டுப் போட்டிகள் தமிழகம் முழுவதும் 323 குறுவட்ட அளவில் சதுரங்க போட்டிகள் கடந்த 11.08.23 அன்று நடத்தி முடிக்கப்பட்டது. அவ்விளையாட்டு போட்டிகள் நடத்திய செலவினத்தொகையை இதுவரை பள்ளி கல்வித்துறை ஒதுக்கீடு செய்யவில்லை.
மேலும், இந்த கல்வியாண்டு மாவட்ட அளவிலான சதுரங்க போட்டிகள் கடந்த 11.09.23 அன்று நடைபெற்றது. அப்போட்டி நடத்திய செலவினத்தொகையை, இதுவரை பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் ஓதுக்கீடு செய்யவில்லை. இந்த கல்வியாண்டு வரவு செலவு வருகின்ற 31.03.24. அன்று கடைசி நாளாகும். எனவே உடனடியாக போட்டிக்கு செலவினத்தொகையை ஓதுக்கீடு செய்ய கேட்டுக்கொள்ளப்படுகிறது, இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. குறுமைய அளவிலான சதுரங்க போட்டிகள் 11.8.23 அன்றும், மாவட்ட அளவிலான சதுரங்க போட்டிகள் 11.9.23 அன்றும் நடத்தப்பட்டது.போட்டிகள் நடத்தி 7 மாதம் நிறைவடைந்து விட்டது. ஆனால் விளையாட்டு போட்டிகளுக்கான செலவினத்தொகை இன்னும் வரவில்லை என்பது ஆசிரியர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.