அமைச்சர் அறிவிப்பில் உடன்பாடு ஏற்படாத நிலையில், தமிழக அரசின் உத்தரவின்போில் சென்னை டிபிஐ வளாகத்தில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்களை போலீசார் இன்று காலை கைது செய்தனர்.
திமுக தேர்தல் அறிக்கையில் கூறியபடி, வாக்குறுதிகளை நிறைவேற்றக்கோரி டெட் தேர்வர்கள், இடைநிலை ஆசிரியர்கள், பகுதிநேர ஆசிரியர்கள் கடந்த 10 நாட்களாக சென்னை டிபிஐ வளாகத்தில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். ஏற்கனவே பல பெண் ஆசிரியா்கள் மயக்கம் ஏற்பட்டு உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தனர்.இந்த நிலையில், ஆசிரியா்கள் கோரிக்கைக்கு ஆதரவாக அரசியல் கட்சி தலைவா்கள், பல்வேறு அமைப்புகள் போராட்ட ஆசிரியர்களை நேரில் சந்தித்து ஆதரவை தெரிவித்தனர். போராட்டம் தீவிரம் அடையவே, மாநில அரசுக்கு நெருக்கடியை ஏற்படுத்தியது.இந்த நிலையில், பள்ளி கல்வி அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி நேற்று செய்தியாளா்களை சந்தித்து, இடைநிலை ஆசிரியர்கள் கோரிக்கை தொடர்பாக, குழு அமைக்கப்பட்டுள்ளதாகவும், பகுதி நேர ஆசிாியா்களுக்கு ரூ.2500 ஊதிய உயா்வும், ரூ10 லட்சம் காப்பீடும், டெட் தேர்வர்களுக்கு ஆசிரியர் பணி வயது வரம்பு நீட்டிப்பு என அறிவித்தார். இதில் அவர்களுக்கு உடன்பாடு ஏற்படாததால், அவர்கள் டிபிஐ வளாகத்தில் போராட்டத்தை தொடர்ந்தனா்.இந்த நிலையில், போலீசார் இன்று காலை மாநகர பேருந்துகளை வரவழைத்து ஆசிரியர்களை குண்டுக்கட்டாக கைது செய்து பல்வேறு இடங்களுக்கு அழைத்து செல்கின்றனர். தற்போது 200க்கும் மேற்பட்ட போலீசார் டிபிஐ வளாகத்தில் குவிக்கப்பட்டதால் பரபரப்பாக உள்ளது. டிபிஐ வளாகம் போலீசார் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கைக்கு ஆசிரியர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.