திங்கள்கிழமை நடைபெற்ற வேதியியல் தேர்வில் இடம் பெற்றிருந்த தவறான ஒரு மதிப்பெண் வினாவுக்கு அரசு கருணை மதிப்பெண் வழங்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத் தேர்வுகள் நடைபெற்று வருகின்றன. மொழிப்பாடம், ஆங்கிலத் தேர்வுகள், கணினி அறிவியல் தேர்வுகள் முடிவடைந்த நிலையில் திங்கள்கிழமை வேதியியல், கணக்குப்பதிவியல், புவியியல் தேர்வுகள் நடந்தது.இதில் கணக்குப்பதிவியல், புவியியல் தேர்வுகள் எளிதாக இருந்ததாக மாணவர்கள் தெரிவித்தனர். வேதியியல் தேர்வில் 2, 3, 5 மதிப்பெண் வினாக்களில் சில கேள்விகள் கடினமானதாக இருந்தாலும், விருப்பமான கேள்விகளுக்கு பதிலளிக்கும் வகையில் (சாய்ஸ்) இருந்ததால் எளிதான கேள்விகளுக்கு விடையளிக்க முடிந்தது. ஒரு மதிப்பெண் வினாவில் ஒன்று தவறாக கேட்கப்பட்டிருந்தது. ஒன்றிரண்டு ஒரு மதிப்பெண் வினாக்களும், ஒரு 5 மதிப்பெண் வினாவும் யோசித்து எழுதக்கூடிய வகையில் இருந்ததாக மாணவர்கள் தெரிவித்தனர். இதுகுறித்து வேதியியல் ஆசிரியர்கள் கூறும்போது, சராசரி மாணவரும் நல்ல மதிப்பெண் பெறும் வகையில் வினாத்தாள் இருந்தது. 'உப்பு நீராற்பகுத்தலுக்கு உட்படாத உப்பு' என்ற ஒரு மதிப்பெண் வினாவில் அது அமிலமா காரமா என்று கொடுக்காததால் அதை தவறான கேள்வியாகக் கருதலாம். எனவே அதற்கு கருணை மதிப்பெண் வழங்க வேண்டும், என்றனர்.