TNPGTA மாநில பொதுச் செயலாளர், பொ அன்பழகன் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது, தொடக்கக்கல்வி துறையில் நடைபெறும் எண்ணும் எழுத்தும் பயிற்சி திட்டம் நடைபெற்றதற்கான தாக்க மதிப்பீடு சார்ந்து கள ஆய்வாளர்களாக மதிப்பீட்டுப் பணிக்கு முதுகலை ஆசிரியர்களை நியமித்திருக்கும் SCERT இயக்குனரின் உத்தரவை ரத்து செய்து வேண்டும்.
பணி மேல் பணியாக இரண்டு ஆண்டு(+1,+2) பொதுத்தேர்வுகள், இரண்டு ஆண்டு செய்முறை தேர்வுகள், நீட் உள்ளிட்ட தொழிற்கல்விக்கான பயிற்சிகள், உயர்கல்வி வழிகாட்டல், நான் முதல்வன், தமிழ் புதல்வன், புதுமைப்பெண் உள்ளிட்ட கற்றல் சாரா பணிகளுக்கான தொடர் பணிகள் அனைத்தையும் மேல்நிலைக் கல்வி தொகுதியில் முதுகலை ஆசிரியர்கள் மீது உழைப்பு சுரண்டலாக, பணிப்பளுவாக செயல்படுத்தும் போது, கற்றல் கற்பித்தல் பணிகளை மேல்நிலைக் கல்வியில் சிறப்பாக செயல்படுத்த முடியாமல் எதிர்கால மாணவர் சமுதாயத்தை சிறந்த முறையில் வடிவமைக்கும் இடத்தை சிதைக்கும் வண்ணமாக கற்றல் சாரா பணிகளை தொடர்ந்து அளிப்பது ஏற்றுக்கொள்ள முடியாது. மாணவர் நலன் சார்ந்து தமிழக அரசு கொண்டு வரும் நல்திட்டங்களை நாங்கள் எதிர்க்கவில்லை. திட்டங்களுக்கு என தனி ஒருங்கிணைப்பாளர்களையும், நிர்வாக அலுவலர்களையும் நியமித்து நடைமுறைப்படுத்தி மாணவர் சமுதாயத்தை மேலும் உயர்த்த வேண்டும். மேல்நிலை கல்வி தொகுதியில் முதுகலை ஆசிரியர்களை பாடம் நடத்த விடுங்கள் என்பதுதான் இங்கே அடிப்படை கோரிக்கையாக அமைகிறது. தொடக்கக் கல்வித் துறையில் கொண்டு வந்திருக்கும் மாணவர் நலன் சார்ந்து திட்டங்களை மதிப்பீடு செய்வதற்கு வட்டார வள மைய அலுவலர்கள்(BEO)நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் உள்ளிட்ட திட்டம் சார்ந்து அலுவலர்களை மதிப்பீட்டு பணியில் பயன்படுத்த வேண்டும்.தொடக்கக் கல்வித் துறையின் மேல் தொகுதியாக இருக்கும் முதுகலை ஆசிரியர்களை மதிப்பீட்டு பணிக்கு பயன்படுத்துவது உரியவிதிகளாக அமையும் எனில் முதுகலை ஆசிரியர்களுக்கு அங்கீகாரமாக, வட்டார வளமைய அலுவலராக மூத்த முதுகலை ஆசிரியர்களை நியமித்து கள ஆய்வுப் பணிகளை மேற்கொள்ள வேண்டும். அரையாண்டு தேர்வு நடக்க இருக்கும் சூழலிலும், ஏற்கனவே பல்வேறு கற்றல் சாரா பணிகளினால் பாடப் பகுதிகளை முடிக்காமல் போராடிக் கொண்டிருக்கும் முதுகலை ஆசிரியர்கள் தற்போது பாடப்பகுதிகளை முடிப்பதற்கும் தேர்வுக்கு மாணவர்களை தயார் படுத்திக் கொண்டிருக்கும் வேளையில் இவ்வகையான ஆய்வாளர்கள் பணிக்கு நியமித்திருப்பதை ரத்து செய்ய வேண்டும். தமிழக அரசும் பள்ளிக்கல்வித்துறையும் உரிய முறையில் தலையிட்டு முதுகலை ஆசிரியர்களை கற்றல் கற்பித்தல் பணிகளில் ஈடுபடுவதற்கு வழிவகை செய்ய வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.