TN Part-time teachers latest News | பகுதிநேர ஆசிரியர்கள் பணி நிரந்தரம் – மக்கள் நீதி மய்யம்
TN Part-time teachers latest News
மக்கள் நீதி மய்யத்தின் தொழிலாளர் நல அணியின் மாநில செயலாளர் சு.ஆ பொன்னுசாமி வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது, தமிழகத்தில் உள்ள அரசுப் பள்ளிகளில் தொகுப்பூதியத்தில் பணிபுரியும் பகுதிநேர சிறப்பாசிரியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்று தமிழக அரசை மக்கள் நீதி மய்யம் வலியுறுத்துகிறது.
Read Also: பகுதிநேர ஆசிரியர்கள் புறக்கணிப்பு கல்வித்துறைக்கு கண்டனம்
அரசு நடுநிலை, உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக 12 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் சிறப்பு ஆசிரியர்களாகப் பணிபுரிந்து வருகின்றனர். இவர்கள், உடற்கல்வி, ஓவியம், கணினி, இசை, தையல், தோட்டக்கலை, கட்டிடக்கலை, வாழ்வியல் திறன் உள்ளிட்ட பாடங்களைக் கற்பித்து வருகின்றனர்.
மத்திய அரசின் சர்வ சிக்சா அபியான் திட்டத்தில் 2012-ல் இவர்களை ரூ 5 ஆயிரம் தொகுப்பூதியத்தில் பணியில் அமர்த்தியது தமிழக அரசு. பின்னர் அந்த திட்டம் “சமக்ர சிக்சா” (ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வித் திட்டம்) என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது. கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாகப் பணிபுரிந்து வரும் சிறப்பு ஆசிரியர்களுக்கு தற்போது மாதம் ரூ.10 ஆயிரம் தொகுப்பூதியம் வழங்கப்படுகிறது.
தங்களை பணிநிரந்தரம் செய்ய வேண்டும், ஊதியத்தை உயர்த்தி வழங்க வேண்டும் என்று சிறப்பாசிரியர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். நியாயமான அவர்களது கோரிக்கையை நிறைவேற்ற வேண்டுமென மக்கள் நீதி மய்யமும் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.
ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வித் திட்டத்தில் தொகுப்பூதிய அடிப்படையில் பணியாற்றும் அலுவலக ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு அறிவிக்கப்பட்ட நிலையில், அதே திட்டத்தில் பணியாற்றும் சிறப்பாசிரியர்களுக்கு மட்டும் ஊதிய உயர்வு மறுக்கப்பட்டுள்ளது நியாயமல்ல.
தங்களது கோரிக்கையை வலியுறுத்தி முதல்வர், அமைச்சர் மற்றும் அதிகாரிகளிடம் மனு வழங்கியும், பல்வேறு போராட்டங்கள் நடத்தியும்கூட சிறப்பு ஆசிரியர்களின் கோரிக்கை இதுவரை நிறைவேற்றப்படவில்லை. பணி நிரந்தரம் தொடர்பாக திமுகவின் தேர்தல் அறிக்கையில் தெரிவித்திருந்தும், தற்போதைய திமுக அரசு அந்த வாக்குறுதியை நிறைவேற்ற முன்வராதது பெரும் ஏமாற்றத்தை அளித்துள்ளது.
இனியும் தாமதிக்காமல் பகுதிநேர சிறப்பாசிரியர்களை உடனடியாகப் பணி நிரந்தரம் செய்வதுடன், அவர்களுக்கான ஊதியத்தை உயர்த்தி வழங்க தமிழக அரசு முன்வர வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.