அரசு துவக்க மற்றும் நடுநிலை பள்ளிகளில் இணைய வசதி பெறுவதற்கு பிஎஸ்என்எல் சேவையை பயன்படுத்த, ஒருங்கிணைந்த பள்ளி கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது.
அரசு பள்ளிகளை மேம்படுத்தும் வகையில், பல்வேறு வசதிகளை தமிழக அரசு செய்து வருகிறது. அவ்வகையில், அரசு துவக்க மற்றும் நடுநிலை பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்பறைகள் மற்றும் கம்ப்யூட்டர் ஆய்வகங்கள் அமைப்பதற்கு தொடர்ந்து பணிகள் நடக்கிறது. பள்ளிகளில் பிஎஸ்என்எல் இணைய சேவை பெறுவதற்கு முதலில் நடவடிக்கை எடுக்கப்பட்டது. பின், ஒரு சில கடைக்கோடி கிராமப்பகுதிகளில், இந்த சேவையை பெறுவதற்கு நடைமுறை சிக்கல்கள் ஏற்பட்டன. இதனால் அவ்வாறு உள்ள பள்ளிகளில் வேறு இணைய சேவை பெறப்பட்டது. தற்போது வேறு இணைய சேவைகள் உள்ள பள்ளிகளில் பிஎஸ்என்எல் சேவையாக மாறுவதற்கு கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. பள்ளி தலைமையாசிரியர்கள் கூறுகையில், ஸ்மாா்ட் வகுப்பறைகளுக்கான இணைய சேவையை மீண்டும் பிஎஸ்என்எல் நிறுவனத்துக்கு மாற்றுவதற்கு கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. இதன்படி பள்ளிகளில் இணைப்பை மாற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படுகிறது, என்றனர்.