பெற்றோரை இழந்த அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளி மாணவர்களுக்கு நிதியுதவி அளிக்கும் திட்டத்திற்கு நடப்பு கல்வியாண்டில் ரூ 5 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இதற்கான அரசாணையை பள்ளி கல்வித்துறை செயலர் ஜெ.குமரகுருபரன் வெளியிட்டுள்ளார்.இதில் அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் 1 முதல் பிளஸ் 2 வகுப்பு வரை படிக்கும் மாணவர்களின் வருவாய் ஈட்டும் தந்தை அல்லது தாய் விபத்தில் இறந்துவிட்டாலோ அல்லது நிரந்தர முடக்கம் அடைந்தாலோ சம்மந்தப்பட்ட பள்ளி மாணவர்களின் பெயரில் தலா 50,000 வைப்புத் தொகையைாக செலுத்தப்பட்டு அதிலிருந்து கிடைக்கும் வட்டித்தொகை, அதன் முதிர்வு தொகை அவர்களது கல்வி செலவுக்காகவும் பராமரிப்புக்காகவும் பயன்படுத்தப்பட்டு வந்தது. தற்போது இந்த தொகை ரூ 50 ஆயிரத்திலிந்து ரூ 75,000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. அந்த வகையில், நிகழாண்டில் நிலுவையில் உள்ள 671 விண்ணப்பதாரர்களுக்கு தேவைப்படும் செலவினத்தொகை ரூ 4.98 கோடியை அரசு நிதி நிறுவனமான தமிழ்நாடு மின்விசை நிதி மற்றும் அடிப்படை வசதி மேம்பாட்டு நிறுவனத்தில் வைப்புத் தொகையாக வழங்க அனுமதிக்கப்படுகிறது.