தமிழ்நாடு அரசு அனைத்துக் குழந்தைகளுக்கும் சமமான வாழ்க்கைக்கான வழி, உயிர்வாழ்தல், உடல்நலம் மற்றும் ஊட்டச்சத்தை அளிக்க உறுதி அளித்துள்ளது. அதன், கொள்கைகள் குறித்து விரிவாக காணலாம்.
இந்த இலக்குகளை அடைய, குழந்தையின் அனைத்து வாழ்க்கை நிலையிலும் உடல்நலம் சார்ந்த தேவைகளை பூர்த்தி செய்வது அவசியம் என்ற அணுகுமுறையை அரசு கவனத்தில் கொண்டுள்ளது.
உடல்நலமும் ஊட்டச்சத்தும் கிடைப்பதில் நிலவிவரும் ஏற்றத்தாழ்வை நீக்குவதற்கு குழந்தைகளின் முழுமையான, ஒட்டுமொத்த மேம்பாட்டை மையப்படுத்தி தீவிரமான நடவடிக்கை எடுக்கப்படவேண்டிய அவசியத்தை அரசு முன்னிறுத்துகிறது. ஒவ்வொரு குழந்தைக்கும் அவர்களது வாழ்வின் பல்வேறு நிலைகளிலும் வளர்ச்சிக்கான தேவைகளை நிறைவேற்றிக்கொள்ளவும் பசி, ஊட்டச்சத்துக் குறைபாடு, பற்றாக்குறை போன்றவற்றிலிருந்து பாதுகாப்பாக இருக்க தேவையான ஊட்டச்சத்தை வழங்கவேண்டும் என்பதில் அரசு உறுதியாக இருக்கிறது.
சுகாதாரத் திட்டங்களுக்கிடையே கவனம் மற்றும் இணக்கத்தை அதிகரிக்க, தமிழ்நாடு மாநில, குழந்தைகளுக்கான கொள்கை பின்வரும் அணுகுமுறைகளை கண்டறிந்து கட்டாயப்படுத்துகிறது:-
1. ஒரு பெண் கருவுற்ற நாள் முதல், அந்த குழந்தையின் இரண்டாவது பிறந்தநாளுக்கிடையேயுள்ள காலம் வரை, ஆரோக்கியமான மற்றும் வளமான எதிர்காலத்தை கட்டமைக்க தனித்துவமான வாய்ப்பை வழங்குவதால், குழந்தையின் முதல் 1000 நாட்களில் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கு அதிக முன்னுரிமை வழங்குதல். முதல் 1000 நாட்களில் ஒரு குழந்தைக்குக் கிடைக்கும் ஊட்டச்சத்து, உறவுகள், புரிதல், சமூகமயமாக்கல், உடல் ரீதியான தகவல் தொடர்பு மற்றும் சுற்றுச் சூழல் ஆகியவை குழந்தையின் எதிர்காலத்தை குறிப்பாக குழந்தையின் மூளைவளர்ச்சி மற்றும் வளர்வதற்கான, கற்றல் மற்றும் மேம்படுவதற்கான திறனை வடிவமைக்கின்றன.
2. குழந்தைகளுக்கு உடல்நலம், ஊட்டச்சத்து, பாதுகாப்பான குடிநீர் மற்றும் தரமான உயர் சுகாதாரச் சூழலை ஏற்படுத்திக் கொடுக்க முக்கியத்துவம் அளிப்பதோடு கருக்கொலை, குழந்தை இறப்பு மற்றும் நோயுற்றதன்மை போன்றவற்றை தீர்மானிக்கும் முக்கிய காரணிகளை கண்டறிந்து சரிசெய்தல்.
3..பிறப்பு, குழந்தை பிறப்பிற்கு இடையேயான இடைவெளி மற்றும் உடல்நலத்தில் அதன் தாக்கம் குறித்து தகவல்களை அறிந்து அதற்கேற்றவாறு செயல்பட சமூகத்திற்கு உதவும் வகையில் அனைத்து படிநிலைகளிலும் தகவல்கள் மற்றும் சேவைகள் கிடைப்பதை அதிகரிக்கச் செய்வது.
4. கர்ப்பகால பராமரிப்பு, பாதுகாப்பான மருத்துவமனைப் பிரசவம், மற்றும் பிரசவத்திற்கு பிந்தைய பராமரிப்பு உட்பட, இனப்பெருக்கம் மற்றும் தாய்சேய் நலம் மற்றும் ஊட்டச்சத்து சார்ந்த சேவைகளை மேம்பட்ட வகையில் வழங்கும் வண்ணம் பொது சுகாதார கட்டமைப்பை வலுப்படுத்துதல்.
5. இன்றைய மேம்பட்ட தொழில்நுட்ப முன்னேற்றத்தைப் பயன்படுத்தி சுுகாதார பராமரிப்பு மற்றும் ஊட்டச்சத்துக்கான சிறப்பு வழிமுறைகளைக் கையாளுதல், கர்பிணிப் பெண்களுக்கு ஆரோக்கியம் சார்ந்த ஊட்டச்சத்து குறித்த கல்வி, குழந்தைகளைப் பராமரிக்கும் தாய்மார்கள் மற்றும் பதின்பருவப் பெண்களைப் பேண சிறப்பு நடவடிக்கைகளை எடுத்தல்.
6. அங்கன்வாடிகளை பலப்படுத்துவதன் மூலம் ஆறு வயதுக்குக் கீழ் உள்ள அனைத்துக் குழந்தைகளும் தரமான குழந்தைப் பருவப் பராமரிப்பு மற்றும் வளர்ச்சியையும் உலகளாவிய அளவில் சமமான அளவில் பெறுவதை உறுதி செய்தல்.
7. பிறந்த குழந்தை பராமரிப்பு மற்றும் குழந்தைகள் ஆரோக்கியத்தில் (நோய்த்தடுப்பு, சிகிச்சை, பராமரிப்பு மற்றும் மேலாண்மை) தொடர்ச்சியான முன்னேற்றம்; அனைத்து தொற்று, தொற்றா நோய்கள் மற்றும் தடுக்கக் கூடிய நோய்களிடமிருந்து குழந்தைகளைப் பாதுகாத்தல், அத்தகைய
சேவைகளை அனைத்து குழந்தைகளுக்கும் எளிதில் கிடைக்கச் செய்தல்.
8. குடும்பம் மற்றும் சமூக அளவிலுள்ள, சிசு மற்றும் குழந்தைப் பராமரிப்பு நடைமுறைகளை மேம்படுத்த தேவைப்படும் நடத்தை மாற்றத்தில் கவனம் செலுத்துதல், ஆதரவளித்தல் மற்றும் ஊக்குவித்தல்.
9. பிரசவத்திற்கு முன்னும், பிரசவத்தின் போதும், அதற்குப் பின்னரும் தாய் மற்றும் சேய்க்கு ஏற்பட்டுள்ள குறைபாட்டை (உடல் மற்றும் மனம் தொடர்பான) தடுக்க உரிய நேரத்தில் தலையீடு செய்தல்.
10. பிரசவத்திற்கு முன்னும் பின்னும் ஏற்படும் குறைபாடுகளை ஆரம்ப நிலையில் கண்டறிதல், சிகிச்சை மற்றும் மேலாண்மை செய்வது போன்ற சேவைகளை வழங்குதல்.
11. சிறப்புத் தேவையுள்ள குழந்தைகள் மற்றும் மாற்றுத் திறனாளிக் குழந்தைகளின் கல்வி ஆகியவற்றிற்கான மேலாண்மை, ஆதரவு மற்றும் மறுவாழ்வு சேவைகளைப் பலப்படுத்துதல்.
12. வளர்ந்துவரும் தேவைக்கேற்ப குழந்தைகளின் நோய்த்தடுப்பு அட்டவணையை மறுகட்டமைத்தல் மற்றும் நோய்த்தடுப்பு மருந்துகளை எடுத்துக் கொள்வதை அதிகரிப்பதற்கான விழிப்புணர்வு செயல்பாடுகளைத் தீவிரப்படுத்தல்.
13. குழந்தைகள் மத்தியிலுள்ள உடல்நலப் பிரச்சனைகளை ஆரம்ப நிலையில் கண்டறிந்து, மேலாண்மை மற்றும் சிகிக்சை செய்ய அமைப்பு முறைகளை மேம்படுத்துதல். தற்போது கிடைக்கும் அத்தியாவசிய தாய்சேய் நல சேவைகளை மேம்படுத்துதல்.
14. உடல் மற்றும் மன நலம் தொடர்பான விழிப்புணர்வை அதிகரிக்கவும் மற்றும் அனைத்து குழந்தைகள் மற்றும் வளரிளம் பருவத்தினரின் உடல்நலம் மற்றும் சமூகத்தின் பங்கை கண்காணிக்கவும் தேவையான அமைப்பு முறைகளை உருவாக்குவது.
15.பாதுகாப்புத் தரத்தை உறுதி செய்வதன் மூலம் குழந்தைகளுக்கு பாதுகாப்பான பொருட்கள் மற்றும் சேவைகளை மட்டுமே அங்கீகரித்தல்.
16. வேலை செய்யும், பின்தங்கிய அல்லது நோய்வாய்ப்பட்ட தாய்மார்களின் குுழந்தைகளுக்கான குழந்தைகள் காப்பகங்கள், பகல்நேரப் பராமரிப்பு வசதிகளை மேம்படுத்துதல்; பொது இடங்களிலும் பணியிடங்களிலும் குழந்தைகளுக்கு பாலூட்டும் வசதிகளை செய்து கொடுத்தல்.
17. சுகாதாரம் சார்ந்த புதுமையான செயல்பாடுகளுக்கு ஆதார அடிப்படையிலான ஆராய்ச்சியை கட்டமைத்தல்.
18.அனைத்துக் குழந்தைகளுக்கும் போதுமான உணவுப் பாதுகாப்பு கிடைப்பதை உறுதிசெய்தல்.
19. வளரிளம் பருவத்தினர் பாலின ஆரோக்கிய உரிமை மற்றும் சேவையைப் பெற உறுதி செய்தல்.
20. நுண்ணூட்டச் சத்துகள் செறிந்த உணவுகள் குறித்த விழிப்புணர்வு மற்றும் அவைகள் கிடைக்கப் பெறுதலை மேம்படுத்துவதன் மூலம் நுண்ணூட்டச் சத்துக் குறைபாடுகளைத் தவிர்த்தல்.
21.0 முதல் 18 வயது வரையிலான குழந்தைகள் புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் குழந்தைகள், தெருவோரக் குழந்தைகள், குடிசைப் பகுதிகளில் உள்ள குழந்தைகள், மூன்றாம் பாலினம் மற்றும் மாற்றுத் திறனாளி குழந்தைகள் உட்பட அனைத்துக் குழந்தைகளையும் கண்காணித்தல்.