தமிழக சட்டமன்ற தேர்தலில் வெற்றிபெற்று, தமிழக முதல்வராக பொறுப்பு ஏற்கும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு ஆசிரியர் சங்கத்தினர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
இடைநிலை பதிவுமூப்பு ஆசிரியர்கள் இயக்கத்தின் மாநில பொதுச்செயலாளர் ஜே.ராபர்ட் வெளியிட்ட வாழ்த்து செய்தியில் , தமிழகத்தில் தற்போது நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் தமிழக மக்களின் வாழ்வு உரிமைக்காக சமூகநீதி, சம உரிமை, சகோதரதுவத்தை நிலை நிறுத்துவதாகவும், தமிழகத்தை கல்வி, சுகாதாரம், மருத்துவம், விவசாயம், பொருளாதாரம் ஆகியவற்றில் இந்திய தேசத்தின் முதன்மையான மாநிலமாக மாற்றுவதற்காக தமிழக மக்களின் நலன் காக்கவும் தாங்கள் எடுக்கும் அனைத்து முயற்சிகளுக்கும் உறுதுணையாக இருந்து தமிழகத்தை முன்னேற்ற அரும்பாடுபடுவோம் என மனதார கூறிக்கொள்கிறோம். இதுவரை தேர்தல் கதாநாயகனாக இருந்து வரும் திமுகவின் தேர்தல் அறிக்கையில் சம வேலைக்கு சம ஊதியம் 20,000 இடைநிலை ஆசிரியர்களுக்கு வழங்கப்படும். மேலும் பழைய ஓய்வூதிய திட்டம் கொண்டுவரப்படும் என்ற கோரிக்கையால் ஒட்டுமொத்த ஆசிரியர்களும், அரசு ஊழியர்களும் அவர் குடும்பத்தினர்களும் தோ்தலில் தங்களின் பேராதரவுகளை ஓட்டுகள் மூலம் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது. கழகத்தின் ஆட்சியின்போது, அரசு ஊழியர்களுக்கும், ஆசிரியர்கள், பொதுமக்களுக்கும் பொற்கால ஆட்சி தந்த தலைவர் கலைஞர் அவர்களின் தவப்புதல்வராகிய தங்களுக்கு தமிழக மக்கள் தனிபெரும்பான்மையாக வெற்றி கனியினை அளித்துள்ளனர். தமிழக மக்களுக்கும், ஆசிரியர்களுக்கும் பொற்கால ஆட்சியை தந்து உதித்த சூரியன் இனி என்றைக்கும் மறைவதில்லை என்ற கொள்கையோடு பதவியேற்கும் தமிழக முதல்வர்களுக்கு இடைநிலை பதிவுமூப்பு ஆசிரியர்கள் இயக்கம் மற்றும் எங்கள் குடும்பத்தினர் சார்பாக மனமார்ந்த வாழ்த்துகள், வணக்கங்களை தெரிவித்துகொள்கிறேன். இவ்வாறு, அவர் கூறியுள்ளார். இதேபோன்று, தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தின் மாநிலத்தலைவர் ப.சுந்தரம்மாள், பொதுச்செயலாளர் அ.நூர்ஜஹான் வெளியிட்ட வாழ்த்து செய்தியில், திமுக தலைவர் ஸ்டாலின் அவர்கள் தலைமையில் அமைந்த திமுக மற்றும் மதச்சாா்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகள் சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டு இன்று பெரும்பான்மை இடங்களில் அமோக வெற்றிபெற்று உள்ளது. இருண்ட தமிழகம் மீண்டும் வெளிச்சம் தர போகிறது. சத்துணவு ஊழியர்கள் 38 ஆண்டுகால அரசு ஊழியர் (காலமுறை ஊதியம்) கனவை முதல் முறையாக நிறைவேற்றி சத்துணவு ஊழியர்கள் வேதனை போக்க மாபெரும் வெற்றியை தழுவி உள்ளது. சத்துணவு ஊழியர்கள் உழைப்பு வீண்போகாது, இந்த வெற்றி பெரும் மகிழ்ச்சியை அளிக்கிறது. திமுக தலைமையில் நல்லாட்சி மலர வாழ்த்துகள். இவ்வாறு, அவர்கள் தெரிவித்தனர்.