தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கு விடுமுறை அறிவிப்பது குறித்து, பள்ளி கல்வித்துறை முறையான அறிவிப்பு வெளியிடாததால், அவர்கள் குழம்பியுள்ளனர்.
தனியார் பள்ளி ஆசிரியர்கள் மே மாதம் பள்ளிக்கு வர வேண்டியதில்லை என ஊடகங்களில் நேற்று செய்தி வெளியானது. இதனால், தனியார் பள்ளி ஆசிரியர்கள் இந்த செய்தியை நம்பலாமா அல்லது வேண்டாமா என குழப்பம் அடைந்தனர், ஏனென்றால், பள்ளி கல்வித்துறையிடம் இருந்து உத்தரவு நகல் ஏதும் வெளியாகவில்லை. இதுகுறித்து, மெட்ரிக் பள்ளி இயக்குனரகத்தில் உள்ள முக்கிய அதிகாரிடம் விசாரித்தபோது, நாங்கள் ஏதும் இதுபோன்ற உத்தரவு பிறக்கப்பிடவில்லை என்ற அதிர்ச்சி செய்தியை தெரிவித்தார். தனியார் பள்ளி ஆசிரியர் ஓருவர் கூறும்போது, கொரோனா பரவல் காரணமாக, தனியார் கல்லூரி பேராசிரியர்கள், அரசு கல்லூரி பேராசிரியர்கள் வீட்டில் இருந்து பணிபுரிய வேண்டும் என தெரிவிக்கப்பட்டது. பின்னர், தமிழக அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு மே மாதம் முதல் விடுமுறை அறிவித்துள்ளது. இவை அனைத்து உத்தரவு நகல் மூலம் வெளியிடப்பட்டது. ஆனால், தனியார் பள்ளி ஆசிரியர்களை இந்த கல்வித்துறைக்கு மனிதர்களாக தொியவில்லை. ஏற்கனவே தனியார் பள்ளிகள் மாணவர்களிடம் கொரோனா காலத்தில் கொளுத்த கட்டணம் பெற்றுக்கொண்டு, முழுநேரமாக பள்ளிக்கு உழைக்கும் எங்களுக்கு ஏதோ தர்மம் செய்வது போல் மாதம் சம்பளத்தை அரைவாசி, கால்வாசி என அளவுப்பார்த்து கொடுத்து வருகிறது. இதனை கல்வித்துறை கண்டுகொள்ளவில்லை. இதனால், தனியார் பள்ளிகள் ஆசிரியர்கள் உளவியல் ரீதியாக தாக்கப்பட்டுள்ளனர். நாங்களும் மனிதா்கள்தான், நாங்கள் பள்ளிக்கு சென்றுவந்தால், கொரோனா எங்களை தாக்காதா?, அப்படி நாங்கள் மரணித்தால், இந்த தனியார் பள்ளிகள் எங்களுக்கு என்ன உதவிக்கரமா நீட்டும், அப்படி ஏதும் இல்லை. எனவே, தனியார் பள்ளிகள் ஆசிரியர்கள், ஊழியர்களுக்கு மே மாதம் சம்பளத்துடன், விடுமுறை அளிக்க வேண்டும். இதனை பள்ளி கல்வித்துறை சுற்றறிக்கையாக தனியார் பள்ளிக்கு அனுப்பி, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் தலைமையில் குழு அமைத்து, அதனை கண்காணித்தல் மட்டுமே தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கான தீர்வு கிடைக்கும். இதேபோன்று, கொரோனா தொற்று நீடித்தால், ஜூன் மாதம் வீட்டில் இருந்து பணிபுரிய அனுமதிக்க வேண்டும், இவ்வாறு, அவர் ஒட்டுமொத்த ஆசிரியர்களின் குரலாக தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்.